சென்னை, கோவையில் பல்முனை சரக்குப் போக்குவரத்து பூங்கா: நிதின் கட்கரி தகவல்

சென்னை, கோவை உள்ளிட்ட 35 நகரங்களில் அரசு-தனியார் பங்களிப்புடன் பல்முனை சரக்குப் போக்குவரத்து பூங்காக்கள்: மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் பல்வேறு கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக இன்று அளித்த பதில்கள் பின்வருமாறு:

பாரத் மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் ரூ.5,35,000 கோடி செலவில் 10,000 கி.மீ தேசிய நெடுஞ்சாலைகள் வளர்ச்சி திட்ட சாலைகளுடன் கூடுதலாக 24,800 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலைகளை அமைக்கும் பாரத்மாலா முதல்கட்ட திட்டத்திற்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கடந்த 2017-ஆம் ஆண்டு ஒப்புதல் அளித்தது.

இது தவிர, நாடு முழுவதும் 35 பல்முனை சரக்குப் போக்குவரத்து பூங்காக்களை கட்டாயம் அமைக்குமாறும் அந்தக் குழு உத்தரவிட்டது. இதன்படி சென்னை, கோவை உள்ளிட்ட 35 நகரங்களில் அரசு- தனியார் பங்களிப்புடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னையைப் பொருத்தவரை இந்த திட்டத்திற்காக கண்டறியப்பட்டுள்ள 158 ஏக்கர் நிலப்பரப்பில், 122 ஏக்கர், சென்னை துறைமுக பொறுப்புக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. மீதமுள்ள 36 ஏக்கர்களை கையகப்படுத்தும் பணியில் மாநில அரசின் தமிழ்நாடு தொழில்துறை வளர்ச்சி கழகமான டிட்கோ ஈடுபட்டுவருகிறது.

கோவையில் இந்த திட்டத்தை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை/ ஆய்வு மற்றும் நிலத்தை கண்டறிவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த 35 பூங்காக்களை அமைப்பதற்கான ஏல ஆவணங்களை இறுதி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. விரிவான திட்ட அறிக்கை/ ஆய்வுகள் மற்றும் அனுமதி அளிக்கப்பட்ட ஏல ஆவணங்களின் அடிப்படையில் நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்படும்.

பெட்ரோலில் எத்தனால் கலவை:

12% மற்றும் 15% எத்தனால் கலவையை பெட்ரோலில் வாகன எரிபொருளாக பயன்படுத்துவது குறித்து அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. மாசுக் கட்டுப்பாடு மற்றும் இறக்குமதி மீதான சார்பை குறைப்பதற்காக பெட்ரோலுடன் 20% எத்தனால் கலவையை சேர்ப்பதற்கான கால அளவை ஐந்து ஆண்டுகள் குறைத்து, 2025-ஆம் ஆண்டாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் எத்தனால் கலப்பிற்கான செயல்திட்டம் 2020-25-ஐ நிதி ஆயோக் தயாரித்துள்ளது. மின்சாரம் மற்றும் மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக ஊக்கத் தொகைகளை அரசு வழங்கிவருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE