பெகாசஸ் ஒட்டுக் கேட்பு:  நீதிமன்ற கண்காணி்ப்பில் சிறப்பு விசாரணைக் குழு: உச்ச நீதிமன்றத்தில் மனு

இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு மென்பொருள் மூலம் இந்தியாவில் பத்திரிகையாளர்கள், நீதிபதிகள், எதிர்க்கட்சித் தலைவர்கள் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக எழுந்த விவகாரத்தில் நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்க வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரான்ஸைச் சேர்ந்த லாப நோக்கமற்ற அமைப்பான ஃபர்பிடன் ஸ்டோரிஸ் மற்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து புலனாய்வு செய்து ஒட்டுக் கேட்பைக் கண்டுபிடித்துள்ளனர்.

இதில் இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. சர்வதேச அளவில் தி நியூயார்க் டைம்ஸ், கார்டியன், லீ மாண்டே ஆகிய நாளேடுகள் வெளியிட்டுள்ளன.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஜல்சக்தி அமைச்சர் பிரஹலாத் சிங் படேல், முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, மருத்துவ வல்லுநர் ககன்தீப் காங், ஹரி மேனன், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் அளித்த பெண், அவரின் உறவினர்களும் ஒட்டுக் கேட்புப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நாட்டையே உலுக்கியுள்ள இந்த பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரத்தில் நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி பொதுநலன் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் எம்.எல். சர்மா என்பவர் இந்த மனுவைத் தாக்கல்செய்துள்ளார்.

அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் என்பது ஆழ்ந்த கவலைத் தரக்கூடியதாக இருக்கிறது, இந்திய ஜனநாயகம், நீதித்துறை, நாட்டின் பாதுகாப்பு ஆகியவற்றின் மீது நடத்தப்பட்ட தீவிரமான தாக்குதலாகக் கருதப்படுகிறது. பரவலாக, விவரிக்கமுடியாத அளவில் கண்காணிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்தரங்கம் என்பது மறைக்க விரும்புவது அல்ல, அது அடிக்கடி வலியுறுத்தப்படுவது.

பெகாசஸ் பயன்பாடு என்பது, ஒருவரின் உரையாடல்களை கேட்பதோடு மட்டுமல்லாமல், அவரின் வாழ்க்கை குறித்த விஷயங்கள், செல்போனில் ஒருவர் வைத்திருக்கும் அந்தரங்கம், அவரோடு தொடர்புடையவர்கள் ஒவ்வொருவரையும் கண்காணிக்க முடியும்.

ஏறக்குறைய 50 ஆயிரம் பேரின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பெகாசஸ் என்பது ஒருவரை கண்காணிக்கும் கருவி மட்டுமல்ல, இந்திய அரசியலை சிதைக்கும் சைபர் ஆயுதம்.இந்த பெகாசஸை யார் பயன்படுத்தியது என்பதும் தெரியவில்லை, தேசியப் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக இருக்கிறது. ஆதலால், இந்த விவகாரத்தை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை நீதிமன்ற மேற்பார்வையில் அமைக்க வேண்டும். இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்படும் நபர்கள், அமைச்சர்கள் விசாரிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த மனு அடுத்துவரும் நாட்களில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE