மீண்டும் தொடங்கியது விவசாயிகள் போராட்டம்: ஜந்தர் மந்தருக்கு மாறியது போராட்டக் களம்

By செய்திப்பிரிவு

டெல்லி சிங்குர் எல்லையில் இருந்து ஜந்தர் மந்தருக்கு போராட்டக் களத்தை மாற்றியுள்ள விவசாயிகள் அங்கு போராட்டத்தை தொடங்கினர்.

மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லியில் கடந்த சில மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நடத்திய பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.

கரோனா காலத்தில் போராட்டம் சற்று ஓய்ந்திருந்தநிலையில் தற்போது இயல்பு நிலை திரும்புவுதால் விவசாயிகள் மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். டெல்லியில் நாடாளுமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அவர்கள் அனுமதி கோரினர். ஆனால் கரோனா பரவல் ஏற்படும் எனக் கூறி டெல்லி போலீஸார் மறுத்து விட்டனர்.

ஜந்தர் மந்தருக்கு பேருந்துகளில் வந்த விவசாயிகள்

இதனையடுத்து டெல்லி சிங்குர் எல்லையில் இருந்து டெல்லி ஜந்தர் மந்தருக்கு போராட்டக் களத்தை விவசாயிகள் மாற்றியுள்ளனர். அங்கிருந்த விவசாயிகள் அனைவரும் பேருந்துகளில் ஜந்தர் மந்தர் வந்து சேர்ந்தனர்.

பிகேஎஸ் விவசாய சங்கத் தலைவர் திகைத் தலைமையில் ஜந்தர் மந்தரில் அவர்கள் தங்கள் போராட்டத்தை தொடங்கினர். 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் கோஷமிட்டனர். விவசாயிகள் போராட்டம் தொடங்கியதை அடுத்து அங்கு போலீஸார் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE