பக்ரீத்துக்காக ஊரடங்கில் தளர்வுகள் அளித்ததற்கு எதிரான மனு: கேரள அரசு இன்று இரவுக்குள் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

By ஏஎன்ஐ

கேரளாவில் கரோனா பாதிப்பு குறையாத நிலையில் பக்ரீ்த் பண்டிகைக்கு ஊரடங்களில் 3 நாட்கள் தளர்வுகள் அளித்தற்கு எதிராக தொடரப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் கேரள அரசு இன்று இரவுக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டது.

இந்தியாவில் கரோனா தொற்று குறையாத மாநிலங்களில் கேரளாவும் ஒன்றாகும். இதனால் அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் முழுமையாகத் தளர்த்தப்படவில்லை. நாள்தோறும் 10 ஆயிரத்துக்கு குறைவில்லாமல் கரோனாவில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்தச் சூழலில் வரும் 20 அல்லது 21 ஆம்தேதி பக்ரீத் பண்டிகை முஸ்லிம் மக்களால் கொண்டாடப்படுகிறது. இதற்காக 18 முதல் 20ம் தேதிவரை ஊரடங்கில் தளர்வுகளை கேரள அரசு அறிவித்தது. துணிக்கடை, செருப்புக்கடை, மின்னணுப் பொருட்கள், நகைக்கடை உள்ளிட்ட கடைகள் இரவு 8 மணிவரை திறக்க அனுமதித்தது.

கேரள அரசின் இந்த உத்தரவுக்கு மாநிலத்தின் மருத்துவர்கள் கூட்டமைப்பு, இந்திய மருத்துவ கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்தன. இதுபோன்ற தளர்வுகள் கரோனா பரவலை மேலும் அதிகப்படுத்தும் என்று எச்சரித்தன.

இந்நிலையில் பி.கே.டி நம்பியார் என்பவர் தரப்பில் வழக்கறிஞர் விகாஸ் சிங் உச்ச நீதிமன்றத்தில், கேரள அரசின் ஊரடங்கு தளர்வுக்கு எதிராக மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், “ கேரளாவில் கரோனா பாஸிட்டிவிட்டி விகிதம் 10.96 சதவீதமாக இருக்கும் போது, பக்ரீத் பண்டிகை, ஓணம் பண்டிகையை காரணம் காட்டி ஊரடங்கில் மாநில அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது வியப்பாக இருக்கிறது.

கேரளாவில் நாள்தோறும் 10 ஆயிரம் பேர் பாதிக்கப்படும் நிலையில் இந்த மாநிலத்தோடு ஒப்பிடுகையில் உத்தரப் பிரதேசத்தில் தொற்று குறைவுதான். ஆனாலும் அங்கு கன்வர் யாத்திரை நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதிக்க அறிவுறுத்தியது.

கேரள அரசு மருத்துவத்துறையை ஆலோசித்து தளர்வுகளை அறிவிப்பதற்குப் பதிலாக கேரள வியாபாரிகள் சங்கத்தினரிடம் ஆலோசித்து தளர்வுகளை அறிவித்துள்ளார். இந்த நாட்டில் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் அரசியல் நலனுக்காகவும்அதை காரணம் கூறியும் மீறக்கூடாது.

கேரள அரசின் செயல்பாடு, அரசியல் நோக்கம் சார்ந்தது. நாட்டின் கரோனா சூழலை உணர்ந்து இந்த நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுக்கு முற்றிலும் மாறானதாக கேரள அரசின் செயல்பாடு இருக்கிறது. ஆதலால் தளர்வுகளை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

கேரள அரசு தரப்பில் வழக்கறிஞர் பரிகாஷ் ஆஜராகினார்.அவர் கூறுகையில் “ பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கடைகளைத் திறக்கவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் இந்த அனுமதியில்லை. கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் தீவிரமாகக் கடைபிடிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ரோஹின்டன் எப் நாரிமன், “ இன்று இரவுக்குள் கேரள அரசு பதில் அளிக்க வேண்டும். நாளை மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படும்” என உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE