2014 முதல் 2019 வரை இந்தியாவில் 326 தேசத்துரோக வழக்குகள் பதிவு: 6 பேர் மட்டுமே குற்றவாளிகளாக அறிவிப்பு

By பிடிஐ

இந்தியாவில் 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டுவரை 326 தேசத் துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 6 பேர் மட்டுமே குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தேசத்துரோக வழக்கு தொடர்பான விசாரணையின்போது கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் கடுமையான கருத்துகளைத் தெரிவித்திருந்தது. அதில், “சுதந்திரப் போராட்டக் காலத்தில் மகாத்மா காந்தி போன்ற தலைவர்களை அடக்க ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்ட ஐபிசி 124ஏ பிரிவு தேசத்துரோக சட்டத்தை ஏன் மத்திய அரசு நீக்கவில்லை” என்று கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:

“இந்தியாவில் 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டுவரை 326 தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக 54 வழக்குகள் அசாமில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 141 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த 6 ஆண்டுகாலத்தில் இதுவரை 6 பேர் மட்டுமே குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அசாம் மாநிலத்தில் பதிவான 54 தேசத்துரோக வழக்குகளில் 26 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 25 வழக்குகளில் விசாரணை முடிந்துள்ளது. ஆனால், 2014 முதல் 2019ஆம் ஆண்டுவரை அந்த மாநிலத்தில் தேசத்துரோக வழக்கில் ஒருவர்கூட தண்டிக்கப்படவில்லை.

ஜார்க்கண்ட்டில் 40 தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 29 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 16 வழக்குகளில் ஒருவர் மட்டுமே குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஹரியாணாவில் 31 தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 19 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 6 வழக்குகளில் விசாரணை நடந்து முடிந்துள்ளது. ஒருவர் மட்டுமே குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். பிஹார், ஜம்மு காஷ்மீர், கேரளாவில் தலா 25 தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பிஹார், கேரளாவில் எந்த வழக்கிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.

ஜம்மு காஷ்மீரில் 3 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒருவர் மட்டும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். கர்நாடகாவில் 22 தேசத்துரோக வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 17 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஒரு வழக்கில் மட்டும்தான் விசாரணை முடிந்துள்ளது. யாரும் குற்றவாளி என அறிவிக்கப்படவில்லை.

உத்தரப் பிரதேசத்தில் 17 தேசத்துரோக வழக்குகளும், மேற்கு வங்கத்தில் 8 வழக்குகளும் , டெல்லியில் 4 வழக்குகளும் பதிவாகியுள்ளன. மேகாலயா, மிசோரம், திரிபுரா, சிக்கிம், அந்தமான் நிகோபர், லட்சத்தீவு, புதுச்சேரி, சண்டிகர், டாமன் டையு, தாத்ரா நகர் ஹவேலி ஆகியவற்றில் ஒரு வழக்குகூட பதிவாகவில்லை.

2019-ம் ஆண்டில்தான் அதிகபட்சமாக 93 தேசத்துரோக வழக்குகள் பதிவாகின. 2018-ல் 70 வழக்குகளும், 2017-ல் 51 வழக்குகளும், 2016-ல் 35 வழக்குகளும், 2015-ல் 30 வழக்குகளும் பதிவாகின. 2019-ம் ஆண்டில் அதிகபட்சமாக 44 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 2018-ல் 38 வழக்குகளிலும், 2017-ல் 27 வழக்குகளிலும், 2016-ல் 16 வழக்குகளிலும், 2014-ல் 14 வழக்குகளிலும், 2015-ல் 6 வழக்குகளிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

2018-ம் ஆண்டில் 2 பேர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டனர். 2019, 2017, 2016, 2014 ஆகிய ஆண்டுகளில் தலா ஒருவர் குற்றவாளி என தேசத்துரோக வழக்கில் அறிவிக்கப்பட்டனர். 2015-ம் ஆண்டில் யாரும் குற்றவாளி என அறிவிக்கப்படவில்லை''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE