நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்; 18-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்: மத்திய அரசு அறிவிப்பு

By செய்திப்பிரிவு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்பாக வரும் 18-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார்.

கரோனா பரவல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மழைக்காலக்கூட்டத்தொடர் தொடங்கி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. குளிர்காலக்கூட்டத்தொடர் நடத்தப்படவில்லை.

இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 8ஆம் தேதிவரை நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், இரு பிரிவுகளாக நடத்த முடிவு செய்யப்பட்டும், கரோனா வைரஸ் பரவல் காரணமாக மார்ச் 8ஆம்தேதியோடு கூட்டத்தொடர் முடித்துக்கொள்ளப்பட்டது.

இந்தநிலையில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் 19-ஆம்தேதி தொடங்குகிறது, 20 அமர்வுகள் வரை நடத்தப்படும் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13ஆம்தேதிவரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது

கரோனா வைரஸ் 2-வது அலையின் தாக்கம் படிப்படியாகக் குறைந்துவரும் நிலையில் கூட்டத்தொடர் நடத்தப்படுகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்துவதும் வேகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை மக்களவை எம்.பி.க்கள் 444 பேர், மாநிலங்களவை எம்.பி.க்கள் 218 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு இன்னும் செலுத்தப்பட வில்லை.

இந்த முறை மழைக்காலக்கூட்டத்தொடரிலும் எம்.பி.க்கள் சமூக விலகலைக் கடைபிடித்தல் உள்ளிட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாகக் கடைபிடிக்கப்படும் எனத் தெரிகிறது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரானது ஜூலை 19 ஆம் தொடங்கி ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை மொத்தம் 19 நாட்கள் நடைபெறும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் போது அன்றாடம் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை இரு அவைகளும் செயல்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 40 மசோதாக்கள், 5 அவசர சட்டங்கள் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடருக்கு முன்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வரும் 18-ம் தேதி காலை 11 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார்.

கூட்டத்தில் பாஜக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் பங்கேற்கின்றனர். நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்துவது பற்றி விவாதிக்கப்படவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE