கர்ப்பிணிப் பெண்களும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்: மத்திய அரசு ஒப்புதல்

கர்ப்பிணிப் பெண்களுக்கு கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MoHFW) இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

நோய்த்தடுப்பு தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் (NTAGI) பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த முடிவை மத்திய அரசு எட்டியுள்ளதாகத் தெரிகிறது.

இதற்கு கரோனா தடுப்பூசி நிர்வாகம் குறித்த தேசிய நிபுணர் குழுவும் (NEGVAC) ஒருமனதாக பரிந்துரைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் இந்த முடிவு மூலம், கர்ப்பிணிப் பெண்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியும். இதுதொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

முன்னதாக, இது தொடர்பாக, தேசிய அளவிலான ஆலோசனை கூட்டமும் நடத்தப்பட்டது. இதில், மாநில அரசுகளின் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என பல தரப்பினரும் கலந்து கொண்டனர்.

கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போட, நோய்த்தடுப்பு தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் (NTAGI) பரிந்துரைக்கு இந்த கூட்டத்தில் ஒருமனதாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த பரிந்துரைகளை ஏற்றுக் கொண்ட மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான வழிகாட்டுதல்கள், மருத்துவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கான ஆலோசனை சாதனங்கள், கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடுவது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான தகவல் பொருட்கள் ஆகியவற்றை தயாரித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE