கரோனா தடுப்பூசி பற்றி மக்களுக்கு பல்வேறு சந்தேங்கள் உள்ளன. ஒவ்வாமை இருப்பவர்கள் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாமா, கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் கோவிட்-19 தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாமா என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன.
கோவிட் தொற்று ஏற்பட்டிருந்தால், எத்தனை நாட்கள் கழித்து தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம் உள்ளிட்டவை கோவிட் தடுப்பூசி பற்றி அடிக்கடி கேட்கப்படும் சில கேள்விகளாகும்.
இந்தநிலையில் டிடி நியூஸ் தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கோவிட்-19 தடுப்பூசிகள் சம்பந்தமான பல்வேறு சந்தேகங்களுக்கு நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி கே பால், எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா ஆகியோர் விளக்கமளித்தனர்.
சரியான தகவல்களைப் பெற்று, தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணையதளத்தில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளித்தனர். அதன் விவரம்:
» கரோனா தொற்று 1 லட்சத்திற்கும் கீழ் குறைந்தது; 62 நாட்களுக்குப் பிறகு 86,498 ஆக சரிவு
» கரோனா பாதிப்பு ஏற்ப மாநிலங்களுக்கு தடுப்பூசி: புதிய வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
ஒவ்வாமை இருப்பவர்கள் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாமா?
டாக்டர் பால்: யாரேனும் ஒருவருக்குக் குறிப்பிடத்தக்க ஒவ்வாமைப் பிரச்சனை இருந்தால் போதிய மருத்துவ ஆலோசனைக்குப் பிறகு கோவிட் தடுப்பூசியை அவர் போட்டுக் கொள்ளலாம். எனினும், சளி, சரும ஒவ்வாமை போன்ற சிறிய பிரச்சினைகள் இருந்தால், தயக்கமில்லாமல் ஒருவர் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம்.
டாக்டர் குலேரியா: ஒவ்வாமை பிரச்சினைக்கு தொடர் மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள், அவற்றை எடுத்துக்கொண்டே தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம். தடுப்பூசியால் ஏற்படும் ஒவ்வாமையின் மேலாண்மைக்காக அனைத்துத் தடுப்பூசி மையங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எனவே தீவிரமான ஒவ்வாமை இருந்தாலும் அதற்குரிய மருந்தை எடுத்துக் கொண்டு, நீங்கள் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
கர்ப்பிணிப் பெண்கள் கோவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாமா?
டாக்டர் பால்: நமது தற்போதைய வழிகாட்டுதலின்படி (மே 19, 2021 அன்று வெளியிடப்பட்ட பத்திரிகை தகவல் அலுவலக கர்ப்பிணிப் பெண்கள் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளக்கூடாது. தடுப்பூசி சோதனையிலிருந்து பெறப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் சமூகத்தினரால் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தடுப்பூசியைப் பரிந்துரைக்க இயலவில்லை. எனினும் புதிய அறிவியல் தரவுகளின் அடிப்படையில் இந்த சூழ்நிலையை இந்திய அரசு தெளிவுபடுத்தும்.
பல்வேறு கோவிட்- 19 தடுப்பூசிகள் கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பாக இருப்பது தெரியவந்துள்ளது. இதே நிலை நமது இரண்டு தடுப்பூசிகளுக்கும் வரும் என்று நம்புகிறோம். நமது தடுப்பூசிகள் வெகு குறைவான நாட்களிலேயே தயாரிக்கப்பட்டதாலும், பாதுகாப்பு காரணத்தால் தடுப்பூசிகளின் சோதனையில் கர்ப்பிணிப் பெண்கள் பொதுவாக உட்படுத்தப்பட மாட்டார்கள் என்பதாலும், பொதுமக்கள் பொறுமையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
டாக்டர் குலேரியா: கர்ப்பிணிப் பெண்களுக்குத் தடுப்பூசிகளை செலுத்தும் பணியை பல்வேறு நாடுகள் தொடங்கியுள்ளன. அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம், ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தொடர்பான தரவுகளும் விரைவில் வெளியிடப்படும். ஒரு சில தரவுகள் ஏற்கெனவே கிடைத்துள்ளன, இந்தியாவில் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக தேவையான தரவுகளும், ஒப்புதல்களும் விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறோம்.
பாலூட்டும் தாய்மார்கள் கோவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாமா?
டாக்டர் பால்: பாலூட்டும் தாய்மார்களுக்கு இந்தத் தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது என்று ஒரு தெளிவான வழிகாட்டுதல் தெரிவிக்கிறது. இது குறித்து அச்சப்படத் தேவையில்லை. தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட பிறகோ அல்லது அதற்கு முன்போ பாலூட்டுவதை நிறுத்தத் தேவையில்லை.
தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட பிறகு போதிய நோய் எதிர்ப்புத்தன்மை எனக்கு உருவாகுமா?
டாக்டர் குலேரியா: நோய் எதிர்ப்புத்தன்மை உருவாவதை வைத்து மட்டுமே தடுப்பூசியின் செயல்திறனை மதிப்பிடக்கூடாது என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம். தடுப்பூசிகள் பல்வேறு விதமான பாதுகாப்பை வழங்குகிறது. அதாவது உயிரணுக்களுடன் இணைக்கப்பட்ட எதிர்ப்புத்திறன் மற்றும் நினைவாற்றல் உயிரணுக்கள். (நமக்கு தொற்று ஏற்படும்போது அதிக எதிர்ப்புத்தன்மைகளை உருவாக்குவது) மேலும் இதுவரை கிடைக்கப் பெற்றுள்ள செயல்திறன் முடிவுகள், சோதனைகளின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன. ஒவ்வொரு சோதனையின் ஆய்வு வடிவமும் மற்றவற்றில் இருந்து வேறுபட்டதாக இருக்கும்.
கோவாக்சின், கோவிஷீல்டு அல்லது ஸ்புட்னிக் வி அனைத்துத் தடுப்பூசிகளின் செயல்திறனும் ஏறக்குறைய சமமாக இருப்பதாகவே இதுவரை கிடைக்கப் பெற்றுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. எனவே குறிப்பிட்ட தடுப்பூசியை தான் போட்டுக்கொள்ள வேண்டும் என்று இல்லாமல் உங்கள் பகுதியில் எந்தத் தடுப்பூசி போடப்படுகிறதோ அதனை செலுத்திக்கொண்டு, உங்களையும் உங்களது குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
டாக்டர் பால்: தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட பிறகு ஒரு சிலர் நோய் எதிர்ப்புத்தன்மை பரிசோதனையை மேற்கொள்வது குறித்து சிந்திக்கிறார்கள். நோய் எதிர்ப்புத்தன்மை மட்டுமே ஒருவரது எதிர்ப்பு ஆற்றலை குறிக்கவில்லை என்பதால் இந்த சோதனையை செய்யத் தேவையில்லை. டி-செல்ஸ் அல்லது நினைவாற்றல் உயிரணுக்களே இதற்குக் காரணம்; நாம் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளும்போது இவை குறிப்பிட்ட மாற்றங்களை நிகழ்த்துகின்றன.
அதிக ஆற்றல் பெற்று நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுகின்றன. டி-செல்ஸ் எலும்பு மஜ்ஜையில் காணப்படுவதால் நோய் எதிர்ப்புத்தன்மை பரிசோதனைகளில் அவற்றைக் கண்டறிய முடியாது. எனவே தடுப்பூசி போடுவதற்கு முன்போ அல்லது பிறகோ எதிர்ப்புத்தன்மை பரிசோதனைகளை மேற்கொள்ளும் போக்கை கடைபிடிக்க வேண்டாம் என்றும், எந்தத் தடுப்பூசி கிடைக்கிறதோ அதனை இரண்டு டோஸ்களும் உரிய நேரத்தில் போட்டுக்கொண்டு கோவிட் சரியான நடத்தை விதிமுறையைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்கிறோம். கொவிட்- 19 தொற்று ஏற்பட்ட ஒருவருக்குத் தடுப்பூசி தேவை இல்லை என்ற தவறான கருத்தை நம்ப வேண்டாம்.
தடுப்பூசியை செலுத்திக்கொண்ட பிறகு ரத்தம் உறைவது இயல்பானதா?
டாக்டர் பால்: இது சம்பந்தமாக ஒரு சில நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன, குறிப்பாக, ஆஸ்ட்ரா-ஜெனேக்கா தடுப்பூசி குறித்து. ஐரோப்பாவில் இளைய சமூகத்தினரிடையே அவர்களது வாழ்வியல், உடல் மற்றும் மரபணு கட்டமைப்பினால் அந்நாட்டில் இந்தப் பிரச்சனை எழுந்தது. எனினும் இந்தியாவில் நாம் இந்தத் தரவை முறையாக ஆராய்ந்து இதுபோன்ற ரத்தம் உறையும் நிகழ்வுகள் மிக குறைவானது என்பதைக் கண்டறிந்துள்ளோம். யாரும் இதனால் கவலை கொள்ளத் தேவையில்லை என்று உறுதியளிக்கிறேன். ஐரோப்பிய நாடுகளில் இந்தப் பிரச்சனை இந்தியாவை விட 30 மடங்கு அதிகமாகக் காணப்பட்டது.
டாக்டர் குலேரியா: அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய மக்களுடனும் ஒப்பிடுகையில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு இந்திய மக்களிடையே ரத்தம் உறையும் பிரச்சினை குறைவாக இருப்பது ஏற்கனவே தெரியவந்துள்ளது. தடுப்பூசியால் ரத்தம் உறைவது அல்லது த்ராம்போசைட்டோபீனியா என்று அழைக்கப்படும் இந்த பக்கவிளைவு, இந்தியாவில் மிகவும் அரிதானது, ஐரோப்பாவைவிட குறைந்த அளவிலேயே ஏற்படும். எனவே இதனால் பயப்படத் தேவையில்லை. முன்கூட்டியே இந்தப் பிரச்சனையைக் கண்டறிந்துவிட்டால் இதற்கான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளலாம்.
எனக்கு கோவிட் தொற்று ஏற்பட்டிருந்தால், எத்தனை நாட்கள் கழித்து தடுப்பூசியை நான் போட்டுக் கொள்ளலாம்?
டாக்டர் குலேரியா: கோவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தது முதல் மூன்று மாதங்கள் கழித்துத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம் என்று அண்மைய வழிகாட்டுதல்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன. இதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் வலுவடைவதுடன் தடுப்பூசியின் செயல் திறனும் மேம்படும்.
இதுவரை இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள உருமாற்றம் அடைந்துள்ள தொற்றுக்களை எதிர்க்கும் தன்மையை நமது தடுப்பூசிகள் பெற்றிருப்பதாக டாக்டர் பால் மற்றும் டாக்டர் குலேரியா ஆகிய இரண்டு நிபுணர்களும் உறுதிபடத் தெரிவித்தனர்.
தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட பிறகு நமது எதிர்ப்பு ஆற்றல் வலுவிழந்து மக்கள் உயிரிழக்க நேரிடும் என்று சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகளால் ஊரகப் பகுதிகள் மற்றும் தொலைதூர பகுதியில் வசிக்கும் மக்களிடையே தவறான கருத்து நிலவி வருவதை சுட்டிக்காட்டி, இது முற்றிலும் பொய்யான தகவல் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago