கரோனா பாதிப்பு ஏற்ப மாநிலங்களுக்கு தடுப்பூசி: புதிய வழிகாட்டு நெறிமுறை வெளியீடு 

கரோனா பாதிப்புகளுக்கேற்ப மாநிலங்களுக்கு கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஜூன் 21 முதல் புதிய தடுப்பூசி கொள்கை அமலாக உள்ள நிலையில், கரோனா தடுப்பூசிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

கரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி முக்கிய பங்காற்றி வருகிறது. கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வரும் அதேசமயம் தடுப்பூசி செலுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் பேசியதாவது:

கரோனா நமது மிகப்பெரிய எதிரி. அதை வீழ்த்த நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. தடுப்பூசி மூலம் பல லட்சகணக்கான உயிர்களை காப்பாற்றியிருக்கிறோம். தடுப்பூசியை இதற்கு முன் இல்லாத வகையில் விரைவாக உற்பத்தி செய்து பயன்படுத்துகிறோம்.

தடுப்பூசியை பொறுத்தவரையில் சில இடங்களில் பற்றாக்குறை நிலவுகிறது. இது விரைவில் சரி செய்யப்படும். தடுப்பூசியை வாங்குவது உள்ளிட்டவற்றை நாங்களும் செய்கிறோம் என சில மாநில அரசுகள் வலியுறுத்தின. மத்திய அரசின் தடுப்பூசி கொள்கையில் சில மாநிலங்களுக்கு மாற்று கருத்து இருந்தன.

தடுப்பூசி பற்றாக்குறையை போக்க தங்களுக்கும் உரிமை வேண்டும் என மாநிலங்கள் கோரின. இதனையடுத்து அவர்களுக்கும் உரிமை வழங்கப்பட்டது.

ஆனால் தற்போது அதில் உள்ள சிக்கல்களை மாநில அரசுகள் உணர்ந்து விட்டன. தற்போது மத்திய அரசே இதனை செய்யட்டும் என்று அந்த மாநில அரசுகள் கூறுகின்றன.

இதனால் மத்திய அரசே மீண்டும் தடுப்பூசியை தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டு வாங்கி மாநிலங்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கையை தொடரும். ஜூன் 21-ம் தேதி முதல் இரண்டு வாரங்களுக்கு இது அமலில் இருக்கும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

ஜூன் 21 முதல் புதிய தடுப்பூசி கொள்கை அமலாக உள்ள நிலையில், கரோனா தடுப்பூசிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, மக்கள் தொகை எண்ணிக்கை, கரோனா பாதிப்பு அடிப்படையில் மாநிலங்களுக்கு தடுப்பூசி ஒதுக்கப்படும் என விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

தடுப்பூசிகளை மாநிலங்கள் வீணடித்தால் ஒதுக்கப்படும் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகள் சரியான விலையில் தடுப்பூசி செலுத்துவதை மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE