மராத்தா சமூகத்தினருக்கு பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இடஒதுக்கீடு: மகாராஷ்டிர அரசு அறிவிப்பு

By செய்திப்பிரிவு

மராத்தா சமூகத்தினருக்கு தனி இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு வழங்கப்படும் 10 சதவீத இடஒதுக்கீட்டின் பலன் வழங்கப்படும் என மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தா பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவிகித இடஒதுக்கீடு வழங்கி 2018-ம்ஆண்டு அம்மாநில அரசு சட்டம்நிறைவேற்றியது. இந்தச் சட்டத்துக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

அதை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு செல்லும் என்றும் அதே நேரத்தில் இடஒதுக்கீடு அளவைக் குறைத்து கல்வியில் 13 சதவிகிதம் என்றும் வேலைவாய்ப்பில் 12 சதவிகிதம் இருக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்துஉச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் மராத்தா சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதிகள் அசோக் பூஷண், எல்.என்.ராவ், ஹேமந்த் குப்தா, அப்துல் நசீர், ரவீந்திர பட் ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து கடந்த மாதம் தீர்ப்பு வழங்கியது, மராத்தா சமூகத்துக்கான இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது. அந்த இடஒதுக்கீட்டை ரத்து செய்து தீர்ப்பளித்து.

மராத்தா சமூகத்திற்கு அதிக இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை, அதுபோன்ற காரணத்தையும் இடஒதுக்கீட்டை பரிந்துரைத்த கெய்க்வாட் ஆணையம் கூறவில்லை என்றும் கெய்க்வாட் ஆணையத்தின் பரிந்துரை ரத்து செய்யப்படுகிறது என்றும் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பு பெரியஅளவில் நாடுதழுவிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியது. இடஒதுக்கீடு விவகாரத்தில் மாநில அரசுகளின் அதிகாரம் குறித்த பல்வேறு தலைவர்களும் கேள்வி எழுப்பினர்.

இந்தநிலையில் மராத்தா சமூகத்தினருக்கு தனி இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு வழங்கப்படும் 10 சதவீத இடஒதுக்கீட்டின் பலன் வழங்கப்படும் என மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது.

நவாப் மாலிக்

இதுகுறித்து அம்மாநில அமைச்சர் நவாப் மாலிக் கூறியதாவது:

மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் இன்னமும் தெளிவு கிடைக்கவில்லை. அதுவரை அந்த சமூகம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது. எனவே பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு வழங்கப்படும். அந்த பிரிவின் கீழ் இவர்களுக்கு சலுகை வழங்கப்படும். ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய்க்கு கீழே உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இடஒதுக்கீட்டின் கீழ் இனி மராத்தா சமூதாய மக்களும் பயன்பெறுவர்.
இ்வ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE