ஆக்சிஜன் பதுக்கல் வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் நவ்நீத் கர்லாவுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
கரோனா 2வது அலையால் டெல்லி கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் அங்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது.
இதனிடையே, சீனாவிலிருந்து அனுமதியின்றி இறக்குமதிசெய்யப்பட்ட கான்சென்ட்ரேட்டர் கள் பதுக்கி வைக்கப்பட்டு அதிக விலைக்கு இணையதளம் வழியாக விற்கப்படுவதாக டெல்லி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, டெல்லியில் ‘கான் சாச்சா’ எனும் பெயரிலான பிரபல உணவு விடுதிகளில் சோதனை செய்யப்பட்டது. அப்போது அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 524 ஆக்ஸிஜன் கான்சென்ட்ரேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வழக்கில், பிரபல உணவு விடுதியின் அதிபர் நவ்நீதி கல்ரா கைது செய்யப்பட்டார். நவ்நீத் கல்ரா, டெல்லியில் மிகவும் பிரபலமானவர் ஆவார். 1972-ல் ஹாஜி பாந்தா ஹசன் என்பவரால் துவங்கி பிரபலமான கான் சாச்சா உணவு விடுதியை அவர்களிடம் இருந்து 2009 -ல் ஏமாற்றி நவ்நீத் பறித்ததாகப் புகார் உள்ளது. கிரிக்கெட் புக்கிஸ் எனப்படும் சூதாட்டக்காரர்களுடனும் தொடர்புகள் இருப்பதாக புகார்கள் உண்டு.
மேலும், இந்த உணவு விடுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி காத்திருந்து ‘கபாப்' வகை இறைச்சிகளை சாப்பிடுவது உண்டு எனக் கூறப்படுகிறது.
பலவிதமாக அறியப்பட்ட இந்த உணவகத்தின் உரிமையாளரான நவ்நீத் கல்ரா உள்ளிட்ட 48 முக்கியஸ்தர்களை அர்விந்த் கேஜ்ரிவால் 2020-ல் முதல்வராகப் பதவி ஏற்ற போது சிறப்பு அழைப்பாளராக்கி கவுரவித்தார்.
இந்நிலையில், ஆக்சிஜன் பதுக்கல் வழக்கில் அவர் கைதானது பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 16ம் தேதி முதல் சிறையில் இருந்த நவ்நீத் கர்லாவுக்கு பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் டெல்லி நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியுள்ளது.