கங்கை கரைகளில் புதைக்கப்பட்ட உடல்களின் மேலிருந்த காவி துணி உ.பி. அரசால் அகற்றம்: வைரலான வீடியோ; முதல்வர் யோகி மீது எதிர்கட்சிகள் விமர்சனம்

By ஆர்.ஷபிமுன்னா

கங்கை கரைகளில் புதைக்கப்பட்ட உடல்களில் சுற்றப்பட்டிருந்த காவிநிறத் துணிகளை உத்தரப்பிரதேச அரசின் பணியாளர்கள் அகற்றி வருகின்றனர். இதன் படக்காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

கரோனாவின் இரண்டாவது பரவல் நாடு முழுவதிலும் பல உயிர்களை பலியாக்கி வருகிறது. இதன் பாதிப்பு, உத்தரப்பிரதேசத்தின் பல மாவட்டங்களிலும் ஏற்பட்டு வருகிறது.

அதிக உயிர்கள் பலியானதால், அவர்களின் இறுதி சடங்குகளை உறவினர்களால் முறையாக செய்ய முடியவில்லை. இதனால், சடலங்களை கங்கை நதியில் வீசுவதும், அதன் கரைகளில் புதைப்பதும் நடைபெற்றன.

இந்த செய்திகள் வெளியாகி சர்ச்சையானதால், உ.பி.யின் முதல்வர் யோகி உத்தரவின் பேரில் அதுபோன்ற செயல்கள் தடுக்கப்படுகிறது. இவை வாரணாசி, அலகாபாத், கான்பூர், உன்னாவ் மற்றும் பலியா ஆகிய நகரங்களின் கங்கை கரைகளில் அதிகமாகப் புதைக்கப்பட்டன.

ஓரிரு அடிகள் ஆழத்தில் புதைக்கப்பட்ட சடலங்கள் சில நாட்களுக்கு முன் பெய்த மழை மற்றும் வீசியக் காற்றாலும் வெளியில் தெரியத் துவங்கின. இதை மறைக்க, அந்த உடல்களில் சுற்றப்பட்டக் காவி அல்லது மஞ்சள் நிறத்துணிகளை அகற்ற பணியாளர்களை அம்மாவட்ட நகராட்சிகள் அமர்த்தியுள்ளனர்.

இவர்கள் புதைக்கப்பட்டவர்களின் தலைப்பகுதியில் அடையாளத்திற்கு வைக்கப்படும் மூங்கில்களையும் பிடுங்குகின்றனர். போலீஸ் பாதுகாப்புடன் செய்யப்படும் இதன் படக்காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உடலில் சுற்றப்படும் துணிகளில் ‘ராம் ராம்’ என்ற எழுத்துக்கள் அச்சிடப்பட்டுள்ளன. இதன் காரணமாக அந்த துணியை ‘ராம்நாமி’ என இந்தியில் அழைக்கிறார்கள். இதை குறிப்பிட்டு முதல்வர் யோகியை உ.பி.யின் எதிர்கட்சிகள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இது குறித்து காங்கிரஸின் தேசியப் பொதுச்செயலாளரும் உ.பி. மாநிலப் பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி வத்ரா கூறும்போது, ‘‘இவர்கள் உயிருடன் இருந்த போது தேவையான மருத்துவ சிகிச்சை கிடைக்கவில்லை.

இதில் பெரும்பாலனவர்களுக்கு உகந்த மரியாதையுடனான இறுதிச்சடங்குகளும் செய்யப்படவில்லை. அரசு பதிவேட்டிலும் அவர்கள் இறப்பு பதிவாகவில்லை. இப்போது, அவர்களது ராம்நாமி துணியும் பிடுங்கப்படுகிறது’’ எனத் தெரிவித்துள்ளார்.

இதுபோல், உ.பி.யின் இந்துக்களில் இறந்தவர்களின் உடல்களை புதைக்கும் சமூகப் பிரிவினர்களும் உண்டு. இந்த உடல்களுடன் கரோனாவால் பலியானவர்களும் புதைக்கப்பட்டதால் அதன் எண்ணிக்கை மிகவும் அதிகமாகத் தெரிவது, உ.பி. அரசிற்கு சிக்கலாகி விட்டது.

ராம்நாமி அகற்றலை கண்டித்து உ.பி.யின் முக்கிய எதிர்கட்சியான சமாஜ்வாதியினர் அலகாபாத்தின் கங்கை நதியில் நின்று ஆர்பாட்டம் செய்கின்றனர். மாநில துணைத் தலைவரான சந்தீப் யாதவ் தலைமையில் இறந்த உடல்களை உ.பி. அரசு அவமதிப்பாகக் கோஷம் எழுப்பினர்.

இவர்கள் மீது ஊரடங்கை மீறியதாக தொற்று சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவாகி உள்ளன. இந்த போராட்டம் உ.பி.யின் வேறு சில நகரங்களிலும் தொடர்கிறது.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் பிரயாக்ராஜ் மாநகராட்சி வட்டாரங்கள் கூறும்போது, ‘‘காவி அல்லது மஞ்சள் நிறத்துணிகள் கங்கை கரையின் சாம்பல் நிறமணலில் எடுப்பாகத் தெரிகின்றன.

இவை, கங்கை நதியில் படகுகளிலும், அருகிலுள்ள பாலங்களில் வாகனங்களிலும் செல்பவர்கள் கண்களில் எடுப்பாகப்படுகின்றன. இதனால், வைரலானதை மறைக்க அந்த துணிகளை உடல்களில் இருந்து உருவி எடுக்கப்பட்டதற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்தனர்.

கங்கையில் வீசுவதை தடுக்கப்பட்டது போல், அதன் கரைகளில் புதைப்பதையும் தடுக்க, ட்ரோன்கள் மூலம் உ.பி. அரசு கண்காணிக்கத் துவங்கி உள்ளது.

இதுபோல், கரைகளின் குறைந்த ஆழத்தில் உடல்களை புதைப்பது சுற்றுச்சூழலுக்கு உகந்ததல்ல என இந்து சமய மடங்களின் துறவிகள் மூலமாகவும் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களும் துவங்கி உள்ளன.

இந்த விவகாரங்களால், பிரதமர் நரேந்தர மோடியின் தொகுதியான வாரணாசிக்கு முதல்வர் யோகி சென்றிருந்தார். இருதினங்கள் விஜயத்தில் அவர் தனது அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை இட்டு வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்