22 கோடிக்கும் மேற்பட்ட கோவிட் தடுப்பூசி டோஸ்கள் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், 1.77 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் மாநிலங்கள் வசம் இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
தேசியளவிலான தடுப்பூசி திட்டத்தின் ஒரு பகுதியாக, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கோவிட் தடுப்பூசிகளை மத்திய அரசு இலவசமாக வழங்கி உதவி வருகிறது.
மேலும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தடுப்பூசிகளை நேரடியாக கொள்முதல் செய்யவும், மத்திய அரசு உதவி வருகிறது.
ஒவ்வொரு மாதமும், மத்திய மருந்துகள் பரிசோதனைக்கூடம் அனுமதிக்கும் தடுப்பூசி நிறுவனங்களின் மருந்துகளில் 50 சதவீதத்தை மத்திய அரசு கொள்முதல் செய்கிறது. இது மாநிலங்களுக்கு தொடர்ந்து இலவசமாக அளிக்கப்படும்.
மத்திய அரசு இதுவரை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, இலவச விநியோகம் மற்றும் நேரடி கொள்முதல் முறைகள் மூலம் 22 கோடிக்கும் மேற்பட்ட (22,00,59,880) தடுப்பூசிகளை வழங்கியுள்ளது.
இவற்றில் மொத்த நுகர்வு, வீணான மருந்துகள் உட்பட 20,13,74,636 டோஸ்கள். 1.77 கோடிக்கும் மேற்பட்ட கோவிட் தடுப்பூசி டோஸ்கள் (1,77,52,594) மக்களுக்கு போடுவதற்காக மாநிலங்கள்/யூனியன் பிரதேச அரசுகளிடம் இன்னும் உள்ளன.
மேலும், 1 லட்சம் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் இன்னும் 3 நாட்களில் பெறவுள்ளன.
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது