பசுவின் கோமியம் கரோனாவை குணப்படுத்துகிறதா என்று விளக்கம் கேட்டு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தனுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச தலைநகர் போபால் மக்களவை தொகுதி பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், ‘‘கரோனாவால் பாதிக்கும் சுவாசக் குழாயை பசுவின் கோமியம் குணப்படுத்தும். எனவே, நாட்டு பசுவின் கோமியத்தை தினமும் அருந்த வேண்டும். நானும் அன்றாடம் பசு கோமியத்தை அருந்துகிறேன்’’ என்று தெரிவித்திருந்தார்.
ஏற்கெனவே பசு சாணத்தில் குளியல் தொடர்பான கருத்துக்கு குஜராத்தில் விமர்சனங்கள் கிளம்பிய நிலையில், துறவி பிரக்யா கூறியதிலும் சர்ச்சை கிளம்பியது. இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு, போபாலின் தென் மேற்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ பி.சி.சர்மா நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், பசு கோமியம் கரோனாவை குணப்படுத்துகிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதை, மத்திய அரசின் முக்கிய அமைப்புகளான இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்), மத்திய ராணுவ ஆய்வு மற்றும் வளர்ச்சி நிறுவனம் (டிஆர்டிஓ) ஆகியவை ஏற்றுக் கொள்கிறதா என்றும் கேட்டிருக்கிறார். ஒரு பாட்டிலில் கோமியத்தையும் நிரப்பி கடிதத்துடன் அனுப்பிய சர்மா, ம.பி.யில் காங்கிரஸ் ஆட்சியில் சட்டத் துறை அமைச்சராக இருந்தவர்.
தனது கடிதத்தில் பி.சி.சர்மா கூறுகையில், ‘‘கரோனாவை பசு கோமியம் குணப்படுத்துவதாகக் கூறிய பிரக்யா, பாஜக.வின் மக்களவை எம்.பி. என்பதால் அவரது கருத்தை புறக்கணிக்க முடியாது. பசு அனைவருக்கும் ஒரு கோமாதா என்பதை நான் ஏற்கிறேன். அதன் பால், மிகவும் சத்தான உணவு என்பதையும் ஒப்புக் கொள்கிறேன். பசுவின் கோமியமும், சாணமும் ஆன்மீக உணர்வுகள் கொண்டவை. ஆனால், இதை வைத்து நம் நாட்டின் அப்பாவி மக்களை தவறாக வழிநடத்தக் கூடாது. எனவேதான் அதை பாட்டிலில் நிரப்பி தங்களுக்கு அனுப்பியுள்ளேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
பி.சி.சர்மா மேலும் கூறுகையில், ‘‘இனி கரோனா, கருப்பு பூஞ்சை தொற்றுகளுக்கு ஆக்சிஜன், ரெம்டெசிவிர் உள்ளிட்டவற்றுக்கு பதிலாக பசு கோமியத்தை அளிக்க மத்திய, மாநில சுகாதாரத் துறைகள் முன்வருமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். பசு கோமியம், எந்த நோயையும் குணப்படுத்தும் என மருத்துவ ஆய்வுகளில் நிரூபிக்கப்படவில்லை என்று இந்திய மருத்துவ சங்கத்தினர் ஏற்கெனவே கூறியுள்ளனர். கடந்த டிசம்பர் 2020-ல் பிரக்யாவுக்கு கரோனா அறிகுறிகள் ஏற்பட்டன. இதனால் அவர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
49 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago