உ.பி.யில் கரோனா குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: முதல்வர் யோகி தொடங்கிய இந்து யுவ வாஹினியினர் மீது புகார்

உத்தரப் பிரதேசத்தில் கரோனா மீது பாஜக மாநில அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய தொலைக்காட்சி செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கிய இந்து யுவ வாஹியினர் மீது புகார் எழுந்துள்ளது.

உ.பி.யின் சித்தார்த்நாரிலுள்ள துமரியாகன்சில் கோவிட் சிகிச்சை மையத்தைத் தொடங்க நேற்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஜெய் பிரதாப் சிங் வந்திருந்தார். விழாவிற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்தவரிடம் உள்ளூர் தொலைக்காட்சியைச் சேர்ந்தவரான அமீன் ஃபரூக்கி கேள்வி எழுப்பினார்.

அப்போது அவர், கரோனா பரவலுக்குத் தடுப்பூசி போடுவதில் ஆன தாமதம் காரணமா? எனக் கேள்வி எழுப்பினார். இதையடுத்து அமீனை காவி நிற முகக்கவசம் அணிந்த சிலர் தனியாக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அனைவரும் அமீன் மீது கடுமையாகத் தாக்குதலை நடத்தி உள்ளனர்.

இந்தக் காட்சிகள் வீடியோ பதிவுகளாகி உ.பி.யின் சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது. தாக்குதலில் ஈடுபட்ட உள்ளூர் பாஜக நிர்வாகியான லவ்குஷ் ஓஜா தலைமையிலான அனைவரும் இந்து யுவ வாஹினியைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

பிறகு அமீனின் வீட்டிற்குச் சென்ற காவலர்கள், அவரை துமரியாகன்ச் காவல்நிலையத்தினர் அழைத்து வந்துள்ளனர். அங்கு அவரிடம் தம் சக பத்திரிகையாளர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டதாக எழுதி வாங்கிவிட்டு அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது.

இதற்காக, பத்திரிகையாளரான அமீனைக் காவல்நிலையத்தில் மிரட்டி சுமார் 3 மணி நேரம் தரையில் அமர வைத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம், உள்ளூர் பாஜக எம்எல்ஏவான ராகவேந்திரா பிரதாப் சிங்கின் உத்தரவின் பேரில் நடைபெற்றதாகவும் புகார் உள்ளது. இவர், முதல்வராவதற்கு முன்பாக யோகி ஆதித்யநாத் தொடங்கிய இந்து யுவ வாஹினியின் மாவட்ட அமைப்பாளராக இருந்தவர்.

இந்த அமைப்பைத் தான் தொடங்கினாலும் முதல்வராக பிறகு யோகி அதில் இருந்து விலகி இருக்கிறார். அவர்களுக்கு ஆதரவும் அளிப்பதில்லை என்பதால் இப்பிரச்சனையில் முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE