நூற்றாண்டுக்கு ஒரு முறை பரவும் எதிரி; இந்தியா நெருக்கடியான காலங்களில் நம்பிக்கை இழக்கும் நாடு அல்ல: பிரதமர் மோடி 

By செய்திப்பிரிவு

நூற்றாண்டுக்கு ஒரு முறை பரவும் இந்தப் பெருந்தொற்று உலகத்துக்கு சவால் விடுத்துள்ளது, இந்தியா நெருக்கடியான காலங்களில் நம்பிக்கை இழக்கும் நாடு அல்ல என பிரதமர் மோடி கூறினார்.

2019ஆம் ஆண்டு, பிப்ரவரி 24ஆம் தேதி பிஎம்-கிசான் திட்டத்தை மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு கொண்டுவந்தது. இதன்படி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி 3 தவணைகளாகப் பிரித்து வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.1.15 லட்சம் கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிஎம்-கிசான் திட்டத்தில் 8-வது தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை இன்று பிரதமர் மோடி காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமரும் பங்கேற்றார். 8-வது தவணை திட்டத்தில் 9.5 கோடி விவசாயிகளுக்கு ரூ.19 ஆயிரம் கோடியை பிரதமர் மோடி நேரடியாக வங்கிக் கணக்கு மூலம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி விவசாய பயனாளிகளுடன் காணொலி மூலம் கலந்துரையாடினார். உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவைச் சேர்ந்த அரவிந்தை, தனது பகுதி இளம் விவசாயிகளுக்கு புதிய வேளாண் தொழில்நுட்பம் குறித்து பயிற்சி அளித்து வருவதற்காகப் பாராட்டினார். அந்தமான் நிக்கோபார் தீவுகளின் கார் நிக்கோபாரைச் சேர்ந்த பாட்ரிக், பெரிய அளவில் இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு வருவதை அவர் புகழ்ந்துரைத்தார்.
ஆந்திர மாநிலம் அனந்தப்பூரைச் சேர்ந்த என்.வென்னுராமா, தனது பகுதியில் 170-க்கும் மேற்பட்ட ஆதிவாசி விவசாயிகளுக்கு வழிகாட்டியாகத் திகழுவதை அவர் பாராட்டினார். மேகாலயா மலைப்பிரதேசத்தில், இஞ்சித்தூள், மஞ்சள், லவங்கப்பட்டை போன்ற மசாலா பொருட்களை தயாரித்து வரும் ரெவிஸ்டார் என்பவரின் முயற்சிகளை பிரதமர் பாராட்டினார். ஜம்மு காஷ்மீரில், குடைமிளகாய், பச்சை மிளகாய்,வெள்ளரிக்காய் ஆகியவற்றை விளைவித்து வரும் ஶ்ரீநகரைச் சேர்ந்த குர்ஷித் அகமதுவுடனும் அவர் கலந்துரையாடினார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், முதன்முறையாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைய உள்ளதைச் சுட்டிக்காட்டினார். பெருந்தொற்று காலத்திலும், உணவு தானியங்கள் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் உற்பத்தியில் சாதனை படைத்துள்ள விவசாயிகளின் முயற்சிகளை அவர் பாராட்டினார். ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்வதில் அரசும் புதிய சாதனைகளை நிகழ்த்தி வருவதாக அவர் கூறினார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது:

குறைந்தபட்ச ஆதரவு விலையில் நெல் கொள்முதலில் புதிய சாதனை படைக்கப்பட்டது. தற்போது, கோதுமை கொள்முதலிலும் புதிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டு, இதுவரை, குறைந்தபட்ச ஆதரவு விலையில் கடந்த ஆண்டைக் காட்டிலும் 10 சதவீதம் அதிக அளவு கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை, கோதுமை கொள்முதலுக்கு ரூ.58,000 கோடி விவசாயிகளின் கணக்கில் நேரடியாகச் சென்றடைந்துள்ளது.

வேளாண்மையில் புதிய தீர்வுகளையும், புதிய வாய்ப்புகளையும் வழங்குவதில் அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதும் அத்தகைய முயற்சிகளில் ஒன்றாகும். இயற்கை வேளாண்மை அதிக ஆதாயத்தை வழங்குகிறது. நாட்டில் தற்போது இளம் விவசாயிகளால் இந்த வேளாண் முறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கங்கை நதியின் இரு கரைகளிலும் 5 கி.மீ ஆரச்சுற்றளவில் ,தற்போது இயற்கை வேளாண்மை மேற்கொள்ளப்பட்டு வருவதால், கங்கை நதியும் சுத்தமாகிறது.

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில், கிசான் கடன் அட்டைகளின் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30-ம் தேதி வாக்கில் தவணைகளை தற்போது புதுப்பித்துக் கொள்ளலாம். சமீபத்திய ஆண்டுகளில், 2 கோடிக்கும் அதிகமான கிசான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

நூற்றாண்டுக்கு ஒரு முறை பரவும் இந்தப் பெருந்தொற்று உலகத்துக்கு சவால் விடுத்துள்ளது. நம் முன்பு உள்ள கண்ணுக்குத் தெரியாத எதிரியாக அது உள்ளது. கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிராகப் போராடுவதில் அரசு இயன்ற அனைத்தையும் செய்து வருகிறோம். நாட்டின் வேதனையைக் குறைப்பதில், அரசின் ஒவ்வொரு துறையும் இரவு பகலாக பாடுபட்டு வருகிறது.

மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுடன் இணைந்து, அதிக அளவில் நாட்டு மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதை உறுதி செய்வதில் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது வரை நாடு முழுவதும் சுமார் 18 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொருவரும் தடுப்பூசிக்காக பதிவு செய்து, தங்களது முறை வரும்போது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய பிரதமர், எல்லா நேரத்திலும் கோவிட் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். இந்த தடுப்பூசி கரோனாவுக்கு எதிராக முக்கிய பாதுகாப்பை வழங்குகிறது. தீவிர நோய் பாதிப்பு அபாயத்தை இது குறைக்கும்.

இந்தக் கடினமான நெருக்கடி காலத்தில், ஆக்சிஜன் விநியோகத்தை உறுதி செய்வதில் ஆயுதப் படையினர் முழு ஆற்றலுடன் பணியாற்றி வருகின்றனர். ரயில்வே ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்கி வருகிறது. நாட்டின் மருந்து துறை அதிக அளவில் மருந்துகளை உற்பத்தி செய்து விநியோகித்து வருகிறது. மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களைப் பதுக்கும் கள்ளச்சந்தைக்கு எதிராக மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தியா நெருக்கடியான காலங்களில் நம்பிக்கை இழக்கும் நாடு அல்ல. இந்தச் சவாலை ஆற்றலுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் சமாளிக்க முடியும். ஊரகப் பகுதிகளிலும் கோவிட்-19 பரவி வருகிறது. கிராமப் பஞ்சாயத்துக்கள் தங்கள் பகுதிகளில் சுகாதாரத்தைப் பேணி, முறையான விழிப்புணர்வை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்