காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி | கோப்புப்படம் 
இந்தியா

மத்திய அரசு தனது பணியை சரியாகச் செய்திருந்தால், இந்தநிலை வந்திருக்காது: ராகுல் காந்தி சாடல்

பிடிஐ

நாட்டில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து உதவிகளைப் பெற்றுக்கொண்டு, மத்திய அ ரசு தொடர்ந்து தன் செயல்களுக்கு மார்த்தட்டிக் கொள்வது வேதனைக்குரியது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமடைந்து, நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கில் உயிரிழக்கிறார்கள். இதனையடுத்து உலக நாடுகள் ஆக்சிஜன் செறிவாக்கிகள், உயிர் காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள், பிபிஇ கிட், நிதியுதவி என ஏராளமானவற்றை இந்தியாவுக்கு வழங்கி வருகின்றன.

வெளிநாட்டு உதவிகள் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மத்திய அரசுக்கு ட்விட்டரில் கடந்த சில நாட்களுக்கு முன் கேள்விகளை எழுப்பி இருந்தார். அதில், “இந்தியாவுக்கு வெளிநாடுகள் அளிக்கும் உதவிகள் குறித்து சில கேள்விகளைக் கேட்கிறேன்.

என்ன மாதிரியான மருத்துவ உபகரணங்களை இந்தியா வெளிநாடுகளில் இருந்து பெற்றது?, இந்த மருத்துவ உபகரணங்கள், நிதியுதவியால் யார், எந்த மாநிலம் பயன்பெற்றது? எவ்வாறு, எந்த அடிப்படையில் மாநிலங்களுக்கு உதவிகள் ஒதுக்கப்பட்டன?, ஏன் வெளிப்படைத் தன்மை இல்லை?, மத்திய அரசிடம் இருந்து ஏதாவது பதில் இருக்கிறதா” எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்தநிலையில் கரோனா பரவலைத் தடுக்க வெளிநாட்டு உதவிகளைப் பெறும் மத்திய அரசுக்கு மீண்டும் கண்டனம் தெரிவித்து ராகுல் காந்தி ட்விட்ரில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அதில், “ கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க வெளிநாடுகளில் இருந்து உதவிகளைப் பெற்றுக்கொண்டு மத்திய அரசு தொடந்து தனது செயல்களுக்கு மார்தட்டிக் கொண்டு, பெருமையடிக்கிறது. மத்திய அரசு தனது கடமைகளை, பணிகளை முறையாகச் செயத்திருந்தால், இந்தியாவுக்கு இந்தநிலை வந்திருக்குமா” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியா கரோனா வைரஸின் பிடியில் சிக்கியிருக்கும் நிலையில், அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், அயர்லாந்து, பெல்ஜியம், ரோமானியா, சிங்கப்பூர், ஸ்வீடன், குவைத் ஆகிய நாடுகள் மருத்துவ உதவி செய்து வருகின்றன.

SCROLL FOR NEXT