பிரதிநிதித்துவப் படம் | படம் உதவி: ட்விட்டர். 
இந்தியா

பசுக்களைப் பாதுகாக்கும் கோசாலைகளுக்கு ஆக்ஸிமீட்டர், தெர்மல் ஸ்கேனர்களை வழங்கிய உ.பி. அரசு

பிடிஐ

உத்தரப் பிரதேசத்தில் கரோனா வைரஸ் பரவல் கட்டுக்கடங்காமல் செல்லும் நிலையில், அங்குள்ள பசுக்களைப் பாதுகாக்கும் கோசாலைகளுக்கு ஆக்ஸிமீட்டர்களையும், தெர்மல் ஸ்கேனர்களையும் மாநில அரசு வழங்கியுள்ளது.

இதுகுறித்து நிருபர்களிடம் அதிகாரிகள் கூறுகையில், “கோசாலைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக இந்தக் கருவிகள் வழங்கப்பட்டன” என்று தெரிவித்தனர்.

உ.பி.முதல்வர் அலுவலகம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், “பசுக்களின் நலனுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் உதவி மையம் ஏற்படுத்த வேண்டும். பசுக்களைப் பாதுகாக்கும் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

மாநிலத்தில் உள்ள அனைத்துக் கோசாலைகளில் பணியாற்றுவோரும் கண்டிப்பாக கரோனா விதிகளைப் பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணிந்து பணியாற்றுதல், கோசாலைக்குள் வரும்போது தெர்மல் ஸ்கேனிங் செய்து வருதல் கட்டாயமாகும்.

அதுமட்டுமல்லாமல், அனைத்துக் கோசாலைகளில் உள்ள பசுக்கள், உள்ளிட்ட பிற விலங்குகளுக்காக ஆக்ஸிமீட்டர்கள், தெர்மல் ஸ்கேனர்கள் வழங்கப்படும். தற்போது நிலவும் கரோனா தொற்று காரணமாகப் பசுக்களின் நலனுக்காக 700 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 51 ஆக்ஸிமீட்டர்கள், 341 தெர்மல் ஸ்கேனர்கள் போன்றவை பசுக்களின் நலனுக்காக வழங்கப்பட்டுள்ளன.

தெருக்களிலும், சாலைகளிலும் ஆதரவற்றுத் திரியும் பசுக்கள் முதல்வரின் முயற்சியால் கோசாலைகளில் வளர்க்கப்பட்டு வருகின்றன. ஆதரவற்று இருக்கும் பசுக்களைக் குறைக்க கூடுதலாக கோசாலைகளை உருவாக்கவும் அரசு முயற்சி எடுத்து வருகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உ.பி.யில் தற்போது 5,268 கோசாலைகளில், 5 லட்சத்து 73 ஆயிரத்து 417 பசுக்கள் உள்ளிட்ட விலங்குகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. பசுக்களுக்கு உணவு வழங்குவதற்காக 3,452 உணவு வழங்கும் மையங்களும் முதல்வர் ஆதித்யநாத் அரசில் உருவாக்கப்பட்டுள்ளன. சாலையில் திரியும் பசுக்களைப் பராமரிக்க விவசாயிகளுக்கு மாதம் 900 ரூபாய் வழங்கப்படுகிறது.

SCROLL FOR NEXT