மேற்குவங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை: 12 பேர் பலி: ஆளுநரிடம் பிரதமர் மோடி கவலை

மேற்கு வங்காளத்தில் தேர்தல் முடிவுகளுக்கு பின் நடந்த வன்முறைகளில் பாஜகவினர் மற்றும் ஆதரவாளர்கள் 12பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் அம்மாநில ஆளுநர் ஜெகதீப் தன்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி பேசியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் 292 தொகுதிகளுக்கும் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 212 இடங்களில் வென்றது. ஆட்சி அமைக்க 148 எம்எல்ஏக்கள் இருந்தாலே போதுமானது. ஆனால், திரிணமூல் காங்கிரஸ் கட்சி 213 இடங்களில் வென்று அசுரபலத்துடன் 3-வது முறையாக ஆட்சியில் அமர்கிறது.

தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குக் கடும் போட்டியளித்த பாஜக 77 இடங்களில் மட்டுமே வென்று எதிர்க்கட்சி வரிசையில் அமர்கிறது. மாநிலத்தில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன் முதல்வர் மம்தா பானர்ஜி 3-வது முறையாக ஆட்சியமைக்க உள்ளார்.

முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் போது மாநிலத்தின் பல பகுதிகளில் தங்கள் மீது ஆளும் திரிணாமூல் தொண்டர்கள் தாக்குதல் நடத்தியதாக பாஜக தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இத்தாக்குதலில் பாஜக கட்சி தொண்டர்கள், ஆதரவாளர்கள் என 12 பேர் கொல்லப்பட்டதாகவும் ஏராளமான கடைகள், வீடுகள் சூறையாடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜெகதீப் தன்கர்

இதனை கண்டித்து நாடு முழுவதும் பாஜக சார்பில், அனைத்து கோவிட்-19 நெறிமுறைகளையும் பின்பற்றி போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது. இதுற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தற்போது மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த தேர்தலில் மம்தா பானர்ஜியின் வெற்றியைத் தொடர்ந்து அங்கு தீவிரமான வன்முறைச் சம்பவங்கள் நடப்பது குறிப்பது கங்கணா ட்வீட் செய்திருந்தார்.

குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும் என தொடர் ட்வீட்டுகளைப் பகிர்ந்தார். அவர் பகிர்ந்திருக்கும் விஷயங்கள் ட்விட்டரின் விதிமுறைகளுக்கு எதிராக இருப்பதால், கங்கணாவின் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பிரதமர் மோடி மேற்குவங்க ஆளுநர் ஜெகதீப் தன்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதுகுறித்து தன்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

‘‘பிரதமர் மோடி தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு மேற்குவங்கத்தில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்களுக்கு வேதனை தெரிவித்தார். சட்டம்- ஒழுங்கை பராமரிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். நானும் எனது கவலைகைள பகிர்ந்து கொண்டேன். வன்முறையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ எனக் கூறினார்.

வன்முறை தொடர்பாக விளக்கமளிக்குமாறு அம்மாநில தலைமைச் செயலாளருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE