கரோனா தொற்றினால் மிதமான பாதிப்பு என்றால் சிடி ஸ்கேன் தேவையில்லை: எய்ம்ஸ்

By செய்திப்பிரிவு

கரோனா தொற்று அறிகுறிகள் மிதமாக உள்ளவர்கள் தேவையில்லாமல் சிடி ஸ்கேன் எடுப்பதைத் தவிருங்கள் என்று எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பில் எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா இன்று பேசும்போது, “ஆய்வுகளின்படி 30 முதல் 40% மக்கள் கரோனாவுக்கான எந்த அறிகுறியும் இல்லாமல் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் எந்தவித மருத்துவ சிகிச்சையும் இல்லாமல் குணமடைந்து வருகின்றனர்.

கரோனா தொற்று அறிகுறிகள் மிதமாக உள்ளவர்கள் தேவையில்லாமல் சிடி ஸ்கேன் எடுப்பதைத் தவிருங்கள். உங்களுக்கு கரோனா தொடர்பாக சந்தேகம் இருந்தால் முதலில் எக்ஸ்ரே எடுங்கள். மருத்துவர்கள் அறிவுறுத்தினால் மட்டும் சிடி ஸ்கேன் எடுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,68,147 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 1,99,25,604 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கரோனாவிலிருந்து 1,62,93,003 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 3,00,732 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது 34,13,642 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் 3,417 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 2,18,959 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை மொத்தம் 15,71,98,207 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE