சிறையில் இருந்தவாறே பாஜகவை வென்ற அகில் கோகய்: அசாமில் சிஏஏ போராட்டத்துக்காகக் கைதானவர்

By பிடிஐ

அசாம் தேர்தல் வரலாற்றில் இதுவரை சிறையில் இருந்துகொண்டு, மக்களைச் சந்திக்காமல், பிரச்சாரம் செய்யாமல் தேர்தலில் எந்த வேட்பாளரும் வென்றதில்லை. ஆனால், முதல் முறையாக சுயேச்சை வேட்பாளர் ஒருவர் சிறையில் இருந்தவாறே தேர்தலைச் சந்தித்து வென்றுள்ளார்.

அசாமில் நடந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டத்தில் இறங்கிய அகில் கோகய் கைது செய்யப்பட்ட நிலையில், சிறையில் இருந்தவாறே சிப்சாஹர் தொகுதியில் போட்டியிட்டு பாஜக வேட்பாளரை வீழ்த்தி வாகை சூடியுள்ளார்.

ஆர்டிஐ ஆர்வலரான அகில் கோகய் தேர்தலுக்கு முன்பாக ராய்ஜோர் தள் எனும் கட்சியைத் தொடங்கினார். ராய்ஜோர் தள் கட்சி சார்பில் சப்சஹர் தொகுதியில் போட்டியிட்ட அகில் கோகய் 57,219 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

2019-ம் ஆண்டு நடந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் அகில் கோகய் தேசதுரோகச் சட்டத்தின் கீழ் பாஜக அரசால் கைது செய்யப்பட்டார். அதன்பின் தேர்தலின்போது, ராய்ஜோர் தள் எனும் கட்சியைச் தொடங்கினார்.

இந்தக் கட்சியின் சார்பில் சப்சஹர் தொகுதியில் அகில் கோகய் போட்டியிட்டார். பிரச்சாரத்துக்கு செல்லவில்லை, மக்களைச் சந்திக்காமல் கடிதம் மூலம் மட்டுமே மக்களுடன் அகில் கோகய் உரையாடினார். என்னென்ன பிரச்சினைகள் இருக்கின்றன, அவற்றை எவ்வாறு களைய வேண்டும், பாஜக அரசின் தோல்விகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்துக் கடிதம் மூலம் அகில் கோகய் மக்களைத் தொடர்பு கொண்டார். தேர்தல் முடிவுகளில் பாஜக வேட்பாளர் சுரபி ராஜ்கோன்வாரியை விட 11,875 வாக்குகள் வித்தியாசத்தில் அகில் கோகய் வெற்றி பெற்றுள்ளார்.

தேர்தலில் போட்டியிட்டபோது அகில் கோகய் பிரமாணப் பத்திரத்தில் தன்னிடம் ரூ.60,497 டெபாசிட் இருப்பதாக மட்டும் தெரிவித்திருந்தார்.

தேர்தல் நேரத்தில் அகில் கோகய்க்கு ஆதரவாக அவரின் 85 வயது தாயார் பிரச்சாரத்தில் இறங்கினார். 85 வயது மூதாட்டி தனது மகனுக்காகப் பிரச்சாரம் செய்வதைப் பார்த்த இளைஞர்கள், தன்னார்வலர்கள் அகில் கோகய்க்கு வீடு வீடாகப் பிரச்சாரம் செய்யத் தொடங்கினர். அகில் கோகயின் தாயார் பிரியதா கோகாயின் உருக்கமான பேச்சு, தீர்மானம் ஆகியவை மக்கள் மத்தியில் பெரிதாக ஈர்க்கப்பட்டன.
அதுமட்டுமல்லாமல் சமூக ஆர்வலர் மேதாபட்கர், சந்தீப் பாண்டே ஆகியோரும் தேர்தல் பிரச்சாரத்தில் அகில் கோகய்க்கு ஆதரவாக இறங்கினர்.

மற்றொரு பக்கம் சப்சஹர் தொகுதியில் பாஜக பணத்தை வாரி இறைத்துப் பிரச்சாரம் செய்தது. மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உள்ளிட்ட பல்வேறு பாஜக தலைவர்கள் வந்து பாஜக வேட்பாளர் ராஜ்கோன்வருக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தனர். ஆனால், யாருடைய பிரச்சாரமும் எடுபடாமல் அகில் கோகயிடம் பாஜக வேட்பாளர் தோல்வி அடைந்தார்.

46 வயதான ராய்ஜோர் தள் கட்சியின் தலைவர் அனில் கோகாய் குவஹாட்டியில் உள்ள காட்டன் கல்லூரியில் படித்தவர். படிக்கும் காலத்திலேயே 1995-96ஆம் ஆண்டு மாணவர் தேர்தலில் போட்டியிட்டு அனில் கோகாய் வென்றுள்ளார்.

ஊழலுக்கு எதிராகவும், ஏழைகள், பழங்குடி மக்களின் நில உரிமைக்காகவும் பல்வேறு போராட்டங்களை அகில் கோகய் நடத்தியுள்ளார். உயிரியல் சூழலில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அணைகள் எழுப்பக் கூடாது என வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்தார்.

இந்நிலையில் மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், அந்தச் சட்டம் குறித்தும் மக்களிடம் பல்வேறு பிரச்சாரங்களை அகில் கோகய் முன்னெடுத்தார். இதையடுத்து, தேசிய பாதுகாப்பு முகமை 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அகில் கோகயை தேசதுரோகச் சட்டத்தில் கைது செய்தது.

இந்தியாவில் இதற்குமுன் சிறையில் இருந்துகொண்டே தேர்தலைச் சந்தித்து முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் வெற்றி பெற்றுள்ளார். அவசரநிலை காலத்துக்குப் பின் நடந்த 1977ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பிஹாரின் முசாபர்பூர் தொகுதியில் போட்டியிட்டு பெர்னாண்டஸ் வென்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்