உத்தரப் பிரதேசம், காஜியாபாத்தில் உள்ள ஹின்டன் நகரில் கரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடல் தகனத்துக்காக வரிசையில் வைக்கப்பட்டிருந்தபோது நாய் கடித்துக் குதறிய கொடுமை நடந்துள்ளது.
நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. நாள்தோறும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆயிரக்கணக்கில் உயிரிழக்கின்றனர். இதில் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதில் உ.பி.யின் காஜியாபாத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடல் தகனத்துக்காக வரிசையில் வைக்கப்பட்டிருந்தபோது நாய் கடித்துக் குதறிய சம்பவம் நடந்துள்ளது. உ.பி.யின் பல்வேறு நகரங்களில் கரோனாவில் இறந்தவர்களை எரியூட்ட இடமில்லாமல் டோக்கன் வழங்கப்பட்டு வரிசையில் வந்துதான் தகனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
காஜியாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் ஆடர்லியாகப் பணியாற்றிய 51 வயது நிரம்பிய ஒருவர், கடந்த வியாழக்கிழமை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவருக்கு சுவாசப் பிரச்சினை இருந்ததையடுத்து, சனிக்கிழமை சந்தோஷ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.
தொடக்கத்தில் அவரின் உடலில் முன்னேற்றம் இருந்தது. ஆனால், திடீரென நள்ளிரவு உடல்நிலை மோசமடைந்து, ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். கரோனா விதிமுறைகளின்படி மருத்துவமனை நிர்வாகம் அவரின் உடலைக் குடும்பத்தினரிடம் வழங்கினர். பிபிஇ கிட்டில் உடலைச் சுற்றி, அதற்கு மேல் பாலித்தீன் கவரால் சுற்றி உடல் வழங்கப்பட்டது.
அடுத்து நடந்த சம்பவம் குறித்து, கரோனாவில் உயிரிழந்தவரின் நண்பர் திரிலோக் சிங் கூறுகையில், “நாங்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணி வரை ஆம்புலன்ஸுக்காகக் காத்திருந்தோம், வரவில்லை. இறுதியாக நேற்று காலை 8 மணிக்கு ஆம்புலன்ஸ் கிடைத்தது. அதில் உடலை ஏற்றிக்கொண்டு ஹின்டன் தகனப் பகுதிக்குச் சென்றோம்.
அங்கு சென்றபின் எங்களுக்கு முன் ஏராளமான உடல்கள் வரிசையில் வைக்கப்பட்டிருந்தன. எங்களுக்கு 10 மணிக்கு டோக்கன் வழங்குவார்கள் எனத் தெரிவித்தனர். இதனால் அருகே இருந்த பிளாட்ஃபார்மில் உடலை வைத்துவிட்டோம்” எனத் தெரிவித்தார்.
உயிரிழந்தவரின் குடும்பத்தினர் கூறுகையில், “நாங்கள் இறந்த எங்கள் உறவினரின் உடலை பிளாட்ஃபார்மில் வைத்துவிட்டு, வெயில் கடுமையாக இருந்ததால் நிழலில் ஒதுங்கி நின்றோம். ஏராளமான உடல்கள் இருந்ததால், நாங்கள் தகனம் செய்ய மாலை 6 மணி ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டது. பிற்பகலின்போது அந்த வழியாகச் சென்ற ஒருவர் எங்களிடம் வந்து, நீங்கள் பிளாட்ஃபார்மில் வைத்திருந்த உடலை நாய் கடித்துக் குதறிவிட்டது, முகத்தைச் சிதைத்துவிட்டது எனத் தெரிவித்தார்.
உடனே நாங்களும், எங்கள் உறவினர் உள்ளிட்ட ஏராளமானோர் ஓடிச் சென்று உடலுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டதா எனப் பார்த்தோம். அப்போது பிபிஇ ஆடை, பிளாஸ்டிக் கவர் அனைத்தையும் கடித்து, இறுதியாக முகத்தையும் கடித்து நாய் குதறிச் சாப்பிட்டிருந்தது. உடனடியாக இந்த விவகாரத்தை மாவட்ட நிர்வாகத்திடம் கொண்டு சென்றோம். ஆனால் எங்கள் டோக்கன் வரிசை வந்ததால், மாலை 3.30 மணி அளவில் உடலை எரியூட்டினோம்” எனத் தெரிவித்தனர்.
உடலை நாய் கடித்துக் குதறிய சம்பவம் அறிந்ததும், குடும்பத்தினர், உறவினர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இந்த விவகாரம் அறிந்த உயர் அதிகாரிகள் வந்து, தெருநாய்கள் வராத வகையில் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago