கரோனா பரவல் அதிகரித்து வருவதை கருத்தில்கொண்டு, நாட்டில் உள்ள 80 கோடி ஏழை மக்களுக்கும் மே, ஜூன் மாதங்களுக்கு 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ரூ.26 ஆயிரம் கோடியில் இத்திட்டம் செயல்படுத்த பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை பரவல் தீவிரமடைந்துள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்து பதிவாகி வருகிறது. வைரஸ் பரவலை தடுப்பதற்காக சில மாநிலங்களில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கும், பல மாநிலங்களில் பகுதி நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், தீவிர ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து பல்வேறு மாநிலங்கள் பரிசீலித்து வருகின்றன.
மே மாதத்தில் இந்தியாவில் கரோனா பாதிப்பு உச்சத்தை தொடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதன் காரணமாக வரும் நாட்களில் நாடு முழுவதும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரோனா பாதிப்பை எதிர்கொள்வது குறித்து மத்திய சுகாதாரம், உணவு பாதுகாப்பு ஆகிய துறைகளின் உயரதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தார். அசாதாரண சூழல் நிலவிவரும் நேரத்தில் ஏழை மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக தேசிய அளவிலான திட்டத்தை வகுக்குமாறு பிரதமர் அறிவுறுத்தியிருந்தார்.
இதையடுத்து, இதற்கான வரைவுத் திட்டம் சில தினங்களுக்கு முன்பு தயாரிக்கப்பட்டது. இதை பரிசீலித்த பிரதமர் நரேந்திர மோடி, இத்திட்டத்துக்கு நேற்று ஒப்புதல் அளித்துள்ளார்.
அதன்படி, ‘கல்யாண் அன்ன யோஜனா’ திட்டத்தின்கீழ் நாட்டில் உள்ள 80 கோடி ஏழை மக்களுக்கும் மே, ஜூன் மாதங்களில் 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும், ரூ.26 ஆயிரம் கோடி செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஓரணியில் திரள அழைப்பு
இதனிடையே, கரோனா பரவல் விவகாரம் குறித்து மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், கேரளா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், டெல்லி, மேற்கு வங்கம், தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
கரோனா வைரஸ் முதல் அலையின்போது, அஞ்சாமல் விழிப்புடன் செயல்பட்டு, பேரிடரை எதிர்கொண்டோம். கட்சி பேதங்களை மறந்து ஒற்றுமையுடன் போரிட்டதால்தான் வைரஸ் பரவலை பல மடங்கு குறைக்க முடிந்தது. மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, நம் நாட்டில் மட்டுமே உயிரிழப்புவிகிதம் குறைவாக இருந்தது. ஒற்றுமையின் பலத்தை இயற்கை அன்று நமக்கு உணர்த்தியது. இப்போது, கரோனா வைரஸின் இரண்டாவது அலை நம் முன்பு பெரும் சவாலாக உருவெடுத்திருக்கிறது. இந்த முறையும், அரசியல் வேறுபாடுகளை கடந்து நாம் ஓரணியில் நின்றால் பெருந்தொற்றை எளிதில் வெற்றி கொள்ளலாம்.
ஆக்சிஜன் உற்பத்தியில் கவனம்
அனைத்து மாநிலங்களுக்கும் ஆக்சிஜனின் தேவை இருக்கிறது. இதை கருத்தில்கொண்டு, ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்கவும், அவற்றை விரைவாக விநியோகிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அதேநேரத்தில் மற்ற மாநிலங்களுக்கு அனுப்பப்படும் ஆக்சிஜன் டேங்கர் லாரிகள் தடுக்கப்படும் சம்பவங்கள் அதிக அளவில் நடப்பதாக கேள்விப்படுகிறேன். இது மிகவும் மோசமான செயல். இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆக்சிஜன் டேங்கர் லாரிகளின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.
ஆக்சிஜன் சிலிண்டர்கள் பதுக்கப்படுவதையும், கள்ளச்சந்தைகளில் விற்கப்படுவதையும் மாநில அரசுகள் இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும். ஆக்சிஜன்சிலிண்டர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு கொண்டு சேர்க்கப்படுவதை உறுதி செய்ய, உயர்நிலைக் குழுக்களை மாநில அரசுகள் அமைக்க வேண்டும்.
மாநிலங்களின் அவசர தேவை கருதி, ஆக்சிஜன் சிலிண்டர்கள் ரயில்களிலும், விமானப் படை விமானங்களிலும் கொண்டு செல்லப்படுகின்றன. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
மன்னிப்பு கேட்ட முதல்வர்
ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமருடன் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நடத்தியஉரையாடலை மத்திய அரசின் அனுமதியின்றி டெல்லி முதல்வர் அலுவலகம் தொலைக்காட்சியில் நேரலையில் ஒளிபரப்பியது. இதையறிந்த பிரதமர் மோடி, கேஜ்ரிவால் பேசிக்கொண்டிருந்தபோதே குறுக்கிட்டார்.
“இந்த ஆலோசனை கூட்ட நிகழ்ச்சிகளை ஒரு முதல்வர் கட்டுப்பாடுகளை மீறி நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டு இருக்கிறார். இது சட்டத்துக்கு புறம்பானது. நாம் அனைவரும் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும்’’ என கோபமாக கூறினார். இதையடுத்து, நேரலை உடனடியாக ரத்து செய்யப்பட்டது. பின்னர் தனது செயலுக்காக பிரதமரிடம் முதல்வர் கேஜ்ரிவால் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago