'பிச்சை எடுங்கள்; திருடுங்கள்; ஆனால் மக்கள் உயிரைக் காத்திடுங்கள்' - டெல்லி உயர் நீதிமன்றம் காட்டம்

By செய்திப்பிரிவு

டெல்லியில் கரோனா நோயாளிகளுக்குத் தேவைப்படும் ஆக்சிஜனுக்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய அரசை மிகவும் காட்டமாக விமர்சித்துள்ளது டெல்லி உயர் நீதிமன்றம். பிச்சை எடுங்கள்; திருடுங்கள்; ஆனால், மக்கள் உயிரைக் காத்திடுங்கள் என மத்திய அரசைக் கண்டித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. இதைச் சமாளிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை மாலையில் அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது. நீதிபதிகள் விபின் சாங்வி, ரேகா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை விசாரித்தது.

நேற்று (புதன்கிழமை) இரவு 10 மணிவரை நீடித்த விசாரணை இன்று மதியம் மீண்டும் நடைபெறவிருக்கிறது.

நேற்றைய விவாதத்தின் விவரம்:

டெல்லியில் ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருகிறது. ஆனால், உண்மை நிலவரத்தை எப்படி மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் உயிரிழப்பதை அனுமதிக்க முடியாது. பிரச்சினையைப் புரிந்துகொண்டு உணர்வுபூர்வமாக அணுகுங்கள். மருத்துவமனைகளில் தேவை அதிகரித்துள்ளது எனக் கூறப்படுகிறது. இந்த வேளையில் தொழிற்சாலைகளில் இருந்து ஆக்ஸிஜன் சிலிண்டர்களை மருத்துவத் தேவைக்குத் திருப்பிவிடுமாறு நீதிமன்றம் உத்தரவிடுகிறது. மக்கள் உயிரைவிடப் பொருளாதார நலன் முக்கியமானது அல்ல. மத்திய அரசுக்கு மக்கள் உயிர் மீது அக்கறையில்லையா? என வினவினர். மேலும், மத்திய அரசின் தொழிற்துறை செயலாளர் ஆஜராகுமாறு உத்தரவிட்டு வழக்கை இரவு 9.20 மணிக்கு ஒத்திவைத்தனர்.

வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஆக்சிஜன் தட்டுப்பாட்டைச் சமாளிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்து டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்குத் தெரிவித்துள்ளதாகவும் விளக்கினார்.

அதற்கு நீதிபதிகள், ஒருசில மருத்துவமனைகள்தான் ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடர்பாக நீதிமன்றத்தை அணுகியுள்ளன. ஆனால், ஆக்சிஜன் தேவை 5 மடங்கு அதிகரித்துள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. ஒட்டுமொத்தமாகத் தட்டுப்பாட்டைச் சமாளிக்க வேண்டியது மத்திய அரசின் கடமை என்று கண்டிப்புடன் கூறினர்.

அப்போது சொலிசிட்டர் ஜெனரல் கூறுகையில், எல்லா அதிகாரமும் அதிகாரிகளுக்கு இல்லை. தற்போதைக்கு வழக்குத் தொடர்ந்துள்ள மருத்துவமனைகளின் நெருக்கடியைச் சமாளிக்கும் அளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் நேரம் கொடுத்தால் மத்திய அரசின் கருத்தைக் கேட்டுக் கூற முடியும் என்றார்.

அவரின் இந்த பதிலால் அதிருப்தியடைந்த நீதிபதிகள், நீங்கள் உங்களுக்குத் தேவையான இனிமையான நேரத்தைப் பொறுமையாக எடுத்துக் கொள்ளுங்கள். மக்கள் இங்கே மடிந்து கொண்டு இருக்கட்டும். இப்படி ஓர் இக்கட்டான நேரத்தில் வேறெங்கெல்லாம் ஆக்சிஜன் இருக்கிறதோ அங்கெல்லாம் பிச்சை எடுங்கள், கடனாகக் கேளுங்கள், இல்லை திருடுங்கள் என்று காட்டமாகத் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த சொலிசிட்டர் ஜெனரல், நமது நாட்டின் அன்றாட ஆக்சிஜன் உற்பத்தித் திறன் 7,200 மெட்ரிக் டன். பல்வேறு பகுதிகளில் உற்பத்தியாகும் ஆக்சிஜனைக் கொண்டுவர கால அவகாசம் வேண்டும் என்றார்.

பொறுப்பைத் தட்டிக் கழிப்பதால் மக்களின் உயிர்தான் பறிபோகும் என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே வழக்கு தொடர்ந்த தனியார் மருத்துவமனைக்குத் தேவையான ஆக்சிஜன் வழங்கப்பட்டிருந்தது தொடர்பான தகவலும் வந்தது.

அதேவேளையில், தட்டுப்பாடுகளைச் சமாளிக்கும் வகையில் ஆக்சிஜன் விநியோகத்துக்கான உத்தரவாதத்தை மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலும் வழங்கினார்.

இதனையடுத்து, விசாரணையை இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்