ஒவ்வோர் ஆண்டு முடிவிலும் அந்த ஆண்டின் சிறந்த..., ஆண்டின் மோசமான.., ஆண்டின் மிக அதிகமான..., மிகக் குறைவான... இப்படியான பல்வேறு தளம் சார்ந்த பற்பல பட்டியல்களும் வெளியாவது வழக்கமே.
அந்த வகையில், இந்த ஆண்டு இந்தியாவில் அதிகம் சலசலக்கப்பட்ட வார்த்தை ஒன்று இருக்கிறது. அது, உலக அளவில் நம் நாட்டின் மீது கவனம் ஏற்படுத்தியதும் கூட.
2015-ம் ஆண்டில் அறிவுஜீவிகள் பலர் தங்கள் விருதுகளை திருப்பியளிக்கவும், நடிகர்கள் பலர் சர்ச்சையில் சிக்கவும், எப்போதுமே கூச்சல் குழப்பத்துடன் இருக்கும் நாடாளுமன்றம் இன்னும் கூடுதலாக அமளி துமளியாக இருக்கவும் பின்னணியாக ஒரு வார்த்தை ஆதிக்கம் செலுத்தியது. அந்த வார்த்தை 'சகிப்பின்மை'.
இது எல்லாம் எங்கிருந்து ஆரம்பித்தது என்று பார்ப்போம். 'சகிப்பின்மை' வார்த்தையின் வரலாற்று சிறு குறிப்பு வரைய தேவையான மூன்று முக்கிய அம்சங்கள் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம். கல்புர்கி.
இவர்கள் மூவரும் முற்போக்கு சிந்தனையை பரப்பியதற்காகவும், மூட நம்பிக்கையை எதிர்த்ததற்காகவும் கொல்லப்பட்டனர். அப்படியென்றால் அவர்களை கொலை செய்தவர்களுக்கு சகிப்புத்தன்மை இல்லை. இங்கேதான் ஆரம்பித்தது சமகால 'சகிப்பின்மை'யின் வரலாறு.
இவர்கள் கொலையை மத்திய அரசு கையாண்டவிதம் எழுத்தாளர்களை கொந்தளிக்க வைத்தது. விளைவு, 39 எழுத்தாளர்கள் தங்களது சாகித்ய அகாடமி விருதுகளை திருப்பி அளித்தனர். ஒரு கலைஞர் தனது லலித் கலா அகாடமி விருதை திருப்பி அளித்தார். இதுதவிர சினிமா பிரபலங்கள் சிலர் தேசிய விருதினை திருப்பியளித்தனர்.
வெறும் வாய்க்கு அவல் கிடைத்தது போல் எதிர்க்கட்சிகள் அசைபோடத் தொடங்கின. "மதச்சார்பின்மைதான் இந்தியாவின் அடையாளம். வேற்றுமையில் ஒற்றுமைதான் நம் பண்பாடு. அதை ஆளும் பாஜக கட்சி தூக்கி எறிந்துவிட்டது. ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி.யின் கைப்பாவையாகிவிட்டது பாஜக. பிரதமர் மோடி செயலற்றவர் ஆகிவிட்டார்" என்றெல்லாம் விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கின.
சும்மா இருப்பாங்களா பாஜகவினர்? பதிலுக்கு பதில், அறிக்கைக்கு அறிக்கை, இஷ்டமிருந்தால் இங்கே இருங்கள் இல்லாவிட்டால் பாகிஸ்தான் செல்லுங்கள் என்றெல்லாம் பேசி, டீக்கடை பெஞ்ச் தேய்ப்பவர்களை 'சபாஷ் சரியான போட்டி' எனச் சொல்ல வைத்தனர்.
போதாத குறைக்கு மகாராஷ்டிரா, ஜம்மு - காஷ்மீர் போன்ற மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு தடை விதித்த அரசின் செயல்பாடு பரவலாக விமர்சிக்கப்பட்டது. நான் எதைச் சாப்பிட வேண்டும் என்பதை அரசாங்கம் எப்படி தீர்மானிக்க முடியும் என குரல் கொடுத்த போராளிகள் பீப் திருவிழாக்களை முன்னெடுத்தனர். இதற்கு அரசியல்வாதிகளிலும் விதிவிலக்கல்ல. காஷ்மீரில் பீப் விருந்து நடத்தி சட்டப்பேரவைக்குள் அடி வாங்கிய எம்.எல்.ஏ.வை யாரும் மறந்திருக்க முடியாது.
அட, இங்க நம்ம தலைநகர் டெல்லியில்கூட கேரள பவனில் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டது. சாப்புட்டுல பசுமாட்டு இறைச்சி இருக்கா? அப்படின்னு சோதனை செய்தார்கள்.
அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் தாத்ரி எனும் இடத்தில் வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக முதியவர் ஒருவர் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தாத்ரி தாத்தா பேசப்பட்டார். ஆங்காங்கே போராட்டங்களும் நடைபெற்றன.
"அவர் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிக்கிட்டே இருந்தார், வெளிநாட்டு நாடாளுமன்றங்களில் சிறப்புரையாற்றினார், மிக நீண்ட சுதந்திர தின உரையை வாசித்தார்... அதெல்லாம் முடிந்தது தாத்ரி சம்பவம் குறித்து மட்டும் ஏன் பதில் சொல்லாமல் இருக்கிறார்?" என்று அறிவுசார் சமூகமும், எதிர்க்கட்சியினரும், ஃபேஸ்புக் போராளிகளும் போர்க்கொடி உயர்த்தினர்.
ஏன் குடியரசுத் தலைவர்கூட சகிப்புத்தன்மையின் அவசியம் குறித்து பேசினார்.
அப்போதுதான் பிஹார் தேர்தல் களம் சூடுபிடித்திருந்தது. நவாடாவில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மோடி, "இதை நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். தாங்கள் போராட வேண்டியது முஸ்லிம் மக்களுக்கு எதிராகவா அல்லது வறுமைக்கு எதிராகவா என இந்துக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அதே போல் முஸ்லிம் மக்கள் எதை எதிர்த்து போராட வேண்டும் என்பதையும் அவர்களே முடிவு செய்ய வேண்டும். நாட்டு மக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். சமூக நல்லிணக்கம், சகோதரத்துவம் மட்டுமே தேசத்தை முன்னெடுத்துச் செல்லும். அரசியல்வாதிகள் சுயலாபத்துக்காக வெளியிடும் கருத்துகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்" என்றார்.
அவரது விளக்கமும் விவாத மேடைகளுக்கு வந்து சென்றன.
பிஹார் தேர்தல் முடிவுகூட பாஜகவின் சகிப்பின்மைக்கு கிடைத்த பேரிடி எனப் பேசப்பட்டது. அப்படியே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. கூட்டத்தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னரே எதிர்க்கட்சிகள் சொல்லிவிட்டன சகிப்பின்மை விவகாரத்தால் நாடாளுமன்றத்தை முடக்குவோம் என்று. (சகிப்புத்தன்மை!)
அரசியல் சாசன தினத்தை கொண்டாடும் வகையில் முதல் இரு தினங்கள் சிறப்பு அமர்வு கூட்டப்பட்டதால், சகிப்பின்மை விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பாமல் அமைதி காத்தன.
அந்த சிறப்பு அமர்வு முடிந்த மறுநாளே, நாட்டில் பெருகிவரும் சகிப்பின்மைக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் இடதுசாரி எம்.பி.க்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
மக்களவையில் நடந்த சகிப்பின்மை விவாதம் கடைசியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கும், மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினர் முகமது சலீமுக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான சொற்போருடன் முடிந்தது.
பாலிவுட் நடிகர் அமீர் கான் கருத்தும் விவாதிக்கப்பட்டது. "நாட்டில் பெருகி வரும் சகிப்பின்மை பாதுகாப்பு இல்லாத உணர்வை அளிக்கிறது. குழந்தைகள் நலன் கருதி இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் எனக் கேட்கிறார் என் மனைவி" என்று சொன்னார்.
அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் மீண்டும் 'சகிப்பின்மை' வார்த்தை சலசலக்கப்பட்டது.
ஒருவழியாக அந்த பிரச்சினையும் நமத்துப்போக, இதோ இப்போ ரொம்ப சமீபமா நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதாக ஷாருக்கான் கருத்து தெரிவித்திருந்தார்.
விளைவு பல்வேறு திரை விமர்சகர்களும் எச்சரித்ததால் யாருமே பார்க்கத் தயாராக இல்லாத தில்வாலே திரைப்படத்தை மெனக்கெட்டு திரையிடவிடாமல் தடுத்து நிறுத்தினர் சிலர்.
இப்படியாக சகிப்பின்மை விவகாரம் டிசம்பர் 21, 2015 வரை நீண்டிருக்கிறது. இன்னும் ஒரு வாரம் மிச்சமிருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.
சரி, ஓர் ஆண்டில் ஒட்டு மொத்த தேசப் பிரச்சினையாக 'சகிப்பின்மை' உருவெடுத்து ஓய்ந்துள்ளதே, இதனால் வளர்ச்சி சார்ந்த பணிகளுக்கான நேரம் விரயம் ஆகிவிட்டதே என்று சிலர் சிந்தித்துக் கேட்கக் கூடும்.
அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு மக்கள் அமைதியான உயிர் வாழ உத்தரவாதம் கிடைக்கும் வகையில், 'வல்லமை' பொருந்தியவர்களுக்கு பாடம் புகட்டப்பட்டதுதான் உண்மை என்றால், இந்த ஓராண்டில் இந்த ஒரு வார்த்தை ஆதிக்கம் செலுத்தியதில் தப்பில்லை என்றே தோன்றுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
26 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago