உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியில்தொல்லியல் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க இந்திய தொல் லியல் ஆய்வுக் கழகத்துக்கு (ஏஎஸ்ஐ) வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யவிருப்பதாக மசூதி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்துக்களின் புனித தலமாக கருதப்படும் காசி எனும் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில்உள்ளது. இதன் கர்ப்பகிரகப் பகுதியை ஒட்டியபடி முஸ்லிம்களின் கியான்வாபி மசூதி உள்ளது. இது, காசி விஸ்வநாதர் கோயிலை இடித்து முகலாய மன்னர் அவுரங்கசீப்பால் கட்டப்பட்டதாக பல ஆண்டுகளாக புகார் உள்ளது. இது தொடர்பாக 2019 டிசம்பரில் வாரணாசி மாவட்ட சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதன் மீது ஒரு முக்கிய உத்தரவை நீதிபதி அசுதோஷ் திவாரி நேற்று முன்தினம் பிறப்பித்துள்ளார்.
மத்திய அரசின் ஏஎஸ்ஐ இயக்குநர் ஜெனரலுக்கு பிறப்பித்த அந்தஉத்தரவில், “கியான்வாபி மசூதியானது, வேறு எந்த மதத்தினரின் புனித சின்னங்களை மாற்றி அமைத்தோ அல்லது அதை இடித்துவிட்டு அதன் மீதோ கட்டப்பட்டுள்ளதா என நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும். இதற்காக அறிவியல் மற்றும் தொல்லியல் அனுபவம் கொண்ட 5 பேர் குழுவை அமைக்க வேண்டும். இதில் இருவர் சிறுபான்மை சமூகத்தினராக இருந்தால் நல்லது” என நீதிபதி அசுதோஷ் குறிப்பிட்டுள்ளார்.
இந்த உத்தரவு வாரணாசி மாவட்ட நிர்வாகம் மற்றும் உ.பி.யின் ஏஎஸ்ஐ அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டு அதன் மீது எடுக்கப் பட்ட நடவடிக்கையை மே 31-க்கு முன் நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு கூறப்பட்டுள்ளது. மேலும் முழு ஆய்வையும் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளுடன் நடத்தி, விரைந்து அறிக்கை தயாரித்து சீலிட்ட உறையில் சமர்ப்பிக்குமாறு கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவ்வழக்கின் முக்கிய மனுதாரரான வழக்கறிஞர் விஜய் சங்கர் ரஸ்தோகி கூறும்போது, “இந்த முக்கிய உத்தரவால்இந்துக்களுக்கு பெரும் வெற்றிகிடைத்துள்ளது. ஏனெனில், இவ்வழக்கின் எதிர்மனுதாரர்களான முஸ்லிம்கள் தொடக்கம் முதல்,இந்த மசூதி இடித்துக் கட்டப்படவில்லை என மறுத்து வருகின்றனர். இப்பிரச்சினை தொடர்பான முக்கிய வழக்கு விஸ்வநாதர் கோயிலின் அர்ச்சகர் உள்ளிட்ட மூவரால் கடந்த 1991-ல் தொடுக்கப்பட்டு அலகாபாத் உயர் நீதிமன்றத்தால் நிலுவைக்கு உள்ளானது” என்றார்.
உ.பி.யின் அயோத்தியில் பல ஆண்டுகளாக நடைபெற்ற ராமர் கோயில் மற்றும் பாபர் மசூதி நிலம் மீதான வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த 2019 நவம்பரில் தீர்ப்பு கூறியது. அதில் ராமர் கோயில் கட்ட இந்துக்களுக்கு அனுமதி கிடைத்தது. இதைத் தொடர்ந்து காசி எனும் வாரணசியிலுள்ள கியான்வாபி மசூதி, மதுராவின் கிருஷ்ணர் கோயிலுக்கு அருகிலுள்ள ஷாயி ஈத்கா மசூதி ஆகியவற்றின் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் மத்திய அரசின் மதச்சின்னங்கள் பாதுகாப்பு சிறப்புச் சட்டம் 1991-ஐ காரணம் காட்டி இந்த வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்டு வந்தன.
முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம் தவறானது எனவும் அதை ரத்து செய்யவும் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதன் மீது மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு ஒரு மாதமே முடிந்துள்ள நிலையில், வாரணாசி கியான்வாபி மசூதி வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
எனவே இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யபோவதாக முஸ்லிம்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உ.பி. சன்னி முஸ்லிம் மத்திய வக்பு வாரியத்தின் ஜுபர் பரூக்கீ கூறும்போது, “இந்த உத்தரவு 1991-ம் ஆண்டு மதச்சின்னங்கள் பாதுகாப்பு சிறப்பு சட்டத்துக்கு எதிரானது. இச்சட்டம் அயோத்தி வழக்கிலும் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ஏஎஸ்ஐ செய்த அகழாய்விலும் அங்கு கோயில் இருந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. எனவே வாரணாசி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம்” என்றார்.
வாரணாசியை போல், மதுரா ஷாபி ஈத்கா மசூதி மீது மதுரா மாவட்ட சிவில் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு ஏப்ரல் 19-ல் விசாரணைக்கு வரவுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago