சங்பரிவாரங்களைச் சேர்ந்து சந்திப்போம்; அஹிம்சை போராட்டம் விவசாயிகளை அச்சமற்றதாக்கும்: ராகுல் காந்தி நம்பிக்கை

சங்பரிவார் அமைப்புகளைச் சேர்ந்து சந்திப்போம். உங்கள் அஹிம்சை போராட்டம் உங்களை அச்சமற்றதாக்கும் என்று விவசாயிகளுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த நவம்பர் மாதத்திலிருந்த டெல்லியின் சிங்கூர், காஜிப்பூர், சிக்ரி ஆகிய எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் இதுவரை 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே இதுவரை 12 சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்தும் எதிலும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்துக்கு பாரதிய கிசான் அமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத் கடந்த சில நாட்களுக்கு முன் சென்றிருந்தார். அப்போது, ராகேஷ் திகைத்தின் காரை, பாஜகவின் இளைஞர் பிரிவான ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்கள், கல்வீசித் தாக்கினர். அதன்பின் போலீஸார் தலையிட்டதையடுத்து, ஏபிவிபி அமைப்பினர் அங்கிருந்து சென்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "அஹிம்சை போராட்டம் விவசாயிகளை அச்சமற்றதாக்கும்போது, தாக்குதல் நடத்துவது பற்றி சங் அமைப்பு ஏபிவிபி அமைப்புக்குக் கற்றுக்கொடுக்கிறது. நாம் ஒன்றாகச் சேர்ந்து சங்பரிவாரங்களை எதிர்கொள்வோம். 3 வேளாண் சட்டங்கள், தேசத்துக்கு எதிரான சட்டங்கள் நீக்கப்பட்டால்தான் நாம் போராட்டத்தை நிறுத்த வேண்டும்" எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE