51 வருடங்களாக ஒரே தொகுதியில் போட்டியிட்டு வென்று வரும் உம்மன் சாண்டி: வழக்கம்போல் கைகொடுக்குமா ‘புதுப்பள்ளி’ தொகுதி?

By என்.சுவாமிநாதன்

கேரளத்தில் காங்கிரஸ், மார்க் சிஸ்ட் கட்சிகள் 40 ஆண்டுகளாக மாறி, மாறி ஆட்சியைப் பிடித்து வருகின்றன. ஆட்சிகள் மாறினாலும் புதுப்பள்ளி தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினர் மட்டும் மாறியதே இல்லை.

கடந்த 51 வருடங்களாக புதுப்பள்ளித் தொகுதியை தொடர்ந்து தக்க வைத்திருக்கும் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, 12வது முறையாக இதேதொகுதியில் களம் இறங்குகிறார். அவருக்கான வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கிறது என இந்து தமிழுக்காக புதுப்பள்ளி தொகுதியில் வலம்வந்தோம்.

புதுப்பள்ளித் தொகுதியில் கடந்த 11தேர்தல்களாக வென்று வரும் உம்மன் சாண்டி தொகுதி மக்களின் மத்தியில் மிகவும் நல்ல பெயர் எடுத்துள்ளார். தொகுதிக்குள் பலரும் தங்கள் குழந்தைகளுக்கே ‘உம்மன்சாண்டி’ என பெயர் வைக்கும் அளவுக்கு தொகுதிக்குள் வலம் வருகிறார். கேரளத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தில் உம்மன் சாண் டிக்கு வீடு இருக்கிறது. அந்த வீட்டின் பெயரையும் ‘புதுப்பள்ளி’ என்றே வைத்திருக்கிறார். அந்தவகையில் மாநிலத்தின் முதல்வராக இருந்தபோதும்கூட ‘புதுப்பள்ளி’யில் இருப்பதாக பெருமையாகச் சொல்வார் உம்மன்சாண்டி.

கோட்டயம் மாவட்டத்தில் இருக்கிறது புதுப்பள்ளி தொகுதி. மொத்த கோட்டயமும் மார்க்சிஸ்ட் கட்சி மிக வலுவாக இருந்த பகுதி. அப்போது கட்சியில் இளைஞராக இருந்த உம்மன் சாண்டிக்கு இந்தத் தொகுதியை ஒதுக்கினார்கள். மார்க்சிஸ்ட் கோட்டையில் காங் கிரஸ் ஜெயிக்காது என்பதால் கட்சியின் சீனியர் நிர்வாகிகளும் வேலை செய்யாமல் ஒதுங்கிக் கொண்டனர்.

ஆனால் சீட் கிடைத்ததும் தொகுதியின் மூலை, முடுக்கெல்லாம் பயணித்து ஓட்டுக் கேட்டார். அவரை உதாசீனமாக நினைத்து சிலர் சிரித்தனர். பதிலுக்கு அவரோ, ‘ஓட்டுப் போட்டு விடுங்கள்’ என கைகூப்பி சிரித்தார்.

ஒருகட்டத்தில் தொகுதிவாசிகள் உம்மன் சாண்டியை ரசிக்க துவங்கினர். 1970-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கோட்டையாக இருந்த புதுப்பள்ளியில் 7,288 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று முதன் முதலாக சட்டப் பேரவைக்குள் நுழைந்தார் உம்மன் சாண்டி. இதேதொகுதியில் தொடர்ந்து 51 ஆண்டுகள் வென்று, இப்போது 12-வது முறையாக களத்தில் இருக்கிறார்.

உம்மன் சாண்டி இரண்டு முறை கேரளத்தின் முதல்வராக இருந்தார். அதேநேரம் புதுப்பள்ளித் தொகுதி மக்களிடம் இருந்து அவர் அன்னியப்பட்டது இல்லை. முதல்வராக இருந்த போதும் கூட ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் புதுப்பள்ளித் தொகுதிக்குள் சுற்றி வருவார்.

குழந்தைகள் தாத்தா என்றும் தொகுதிவாசிகள் உறவு சொல்லி அழைக்கும் வகையிலும் நெருக்கத்தில் இருக்கிறார் உம்மன் சாண்டி. 2004-ம் ஆண்டுதான் முதன்முதலாக கேரளத்தின் முதல்வர் ஆனார் உம்மன்சாண்டி. அதற்கு 34 ஆண்டுகளுக்கு முன்பே இந்த ்தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்திருக்கிறார்.

கேரளத்தில் சோலார் பேனல் மோசடி வழக்கு 2016-ம் ஆண்டு தேர்தலில் உச்சத்தில் இருந்தது. கேரள காங்கிரஸ்(எம்) தலைவர் மாணி கிளப்பிய பார் மோசடி வழக்கும் உம்மன் சாண்டிக்கு கடும் குடைச்சலைத் தந்தது. எனினும் புதுப்பள்ளியில் கரை சேர்ந்தார் உம்மன்சாண்டி. தொகுதிவாசிகளோடு தனக்கு இருக்கும் பிணைப்பு இம்முறையும் கைகொடுக்கும் என ஆழமாக நம்புகிறார் உம்மன்சாண்டி.

கேரளாவில் காங்கிரஸில் உம்மன் சாண்டி தலைமையில் ஒரு அணியும், ரமேஷ் சென்னிதலா தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டு வருகின்றன. இதில் ரமேஷ் சென்னிதலா இப்போது எதிர்கட்சித் தலைவராக உள்ளார். கேரள காங்கிரஸின் தலைவர் பதவி முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் வசம் உள்ளது. அந்தவகையில் உம்மன் சாண்டியிடம் கேரள காங்கிரஸில் அதிகாரம் செலுத்தும் எந்த பதவியும் கடந்த ஐந்தாண்டுகளாக இல்லை.

எனினும் சட்டப்பேரவையில் தன் 50 ஆண்டு பொன்விழாவையும் கொண்டாடினார் உம்மன்சாண்டி.அது தந்த உற்சாகத்தில் புதுப்பள்ளிவாசிகளோடு இன்னும் அதிகநேரம் செலவு செய்தார். அது முதல் முறை வாக்களிக்கச் செல்வோரிடமும் உம்மன் சாண்டி மீதான நேசத்தை உருவாக்கி யிருக்கிறது.

புதுப்பள்ளியில் இருந்தாலும், தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்தாலும் உம்மன்சாண்டியின் புதுப்பள்ளி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் தினமும் திறக்கப்பட்டு முழுவீச்சில் இயங்குகிறது.

இதேபோல் கேரள காங்கிரஸ் (எம்) தலைவரான மாணியும், பாலா தொகுதியில் இருந்து தொடர்ந்து தேர்வுசெய்யப்பட்டு 54 ஆண்டுகள் எம்.எல்.ஏவாக செயல்பட்டவர். 1965-ம் ஆண்டு தொடங்கிய இவரது பயணத்தில் 2019-ம் ஆண்டு மாணி இறக்கும்வரை அவர்தான் பாலா தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தார். அவரது மறைவுக்குப்பின் கேரள அரசியலில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக எம்.எல்.ஏவாக தொடர்ந்து இருப்பவர் உம்மன் சாண்டி மட்டும்தான். அதுவும் ஒரே தொகுதியில் இருந்து தொடர்ந்து அவர்பெறும் வெற்றி கவனம் குவித்துள்ளது. அதேநேரம் கேரளத்தில் மார்க்சிஸ்ட் கட்சியோ தொடர்ந்து பத்து ஆண்டுகள் எம்.எல்.ஏவாக இருந்தவர்களுக்கு போட்டியிடவே வாய்ப்பு வழங்குவ தில்லை என்னும் நிலைப்பாட்டை வைத்திருக்கிறது.

மார்க்சிஸ்ட் வகுக்கும் வியூகம்

கேரளத்தில் அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி அதிக இடங் களை வென்றது. அதில், புதுப் பள்ளித் தொகுதிக்குட்பட்ட 6 பஞ்சாயத்துக்களையும் கைப்பற்றி உம்மன் சாண்டிக்கு அதிர்ச்சி கொடுத்தது. 78 வயதாகும் உம்மன் சாண்டியை எதிர்த்து போட்டியிட 31 வயது இளையவரான ஜெய்க் தோமஸ்க்கு வாய்ப்பு கொடுத்துள்ளது மார்க்சிஸ்ட். கடந்த தேர்தலில் இவரை 27,092 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார் உம்மன் சாண்டி. இந்த முறை உள்ளாட்சித் தேர்த லில் கணிசமாக புதுப்பள்ளித் தொகுதிக்குள் பெற்றிருக்கும் வெற்றி மார்க்சிஸ்ட் வேட்பாளரை நம்பிக்கையோடு சுற்றவைக்கிறது.

ஆனால் உம்மன் சாண்டியோ தொகுதிக்குள் இருக்கும் செல் வாக்கால் அதை எளிதாகக் கடக்கிறார். மார்க்சிஸ்ட் வேட்பாளர் ஜெய்க் தோமஸ் பிறக்கும்போதே இந்தத் தொகுதியில் உம்மன் சாண்டிதான் எம்எல்ஏ என காங்கிரஸார் முன்வைக்கும் பிரச் சாரமும், கரோனா நேரத்தில் இந்த வயதில் ஓட்டுக் கேட்டு நீங்களே வரவேண்டுமா என தொகுதி வாசிகள் பொழியும் அன்பும் புதுப்பள்ளி மக்களோடு உம்மன்சாண்டிக்கு இருக்கும் பரிச்சயத்தைக் காட்டுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

இந்தியா

14 mins ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்