கொச்சியில் கடந்த வாரம் கல்லூரிப் பெண்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் நடத்தியதைக் கொச்சைப்படுத்திப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.பி. ஜாய்ஸ் ஜார்ஜ், ராகுல் காந்தி ஏன் பெண்கள் பயிலும் கல்லூரிக்கே செல்கிறார் என்று சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
கேரளாவில் 140 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயகக் கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் கடும் போட்டி இருந்து வருகிறது.
வாக்குகள் மாறிச் சென்றுவிடக்கூடாது என்பதற்காக இரு தரப்பிலும் குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் மாறி மாறிக் கூறி வந்தனர். இந்நிலையில் இந்த விமர்சனம் தற்போது தனி நபர் தாக்குதலாகவும், தரம் தாழ்ந்த விமர்சனங்களாகவும் மாறியுள்ளன.
இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி குறித்து இடுக்கி முன்னாள் எம்.பி.யும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த நிர்வாகியுமான ஜாய்ஸ் ஜார்ஜ் பேசியுள்ளார்.
கடந்த வாரம் ராகுல் காந்தி, கொச்சியில் உள்ள ஒரு கல்லூரிக்கே சென்று மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். அந்தச் சம்பவத்தை மிகவும் முகம் சுளிக்கும் வகையில் ஜார்ஜ் விமர்சித்துள்ளார்.
இடுக்கி மாவட்டம் இரட்டையார் பகுதியில் மின்துறை அமைச்சர் மாணிக்கு ஆதரவாக ஜாய்ஸ் ஜார்ஜ் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், "ராகுல் காந்தி ஏன் எப்போதும் பெண்கள் படிக்கும் கல்லூரிக்குச் சென்று பேசுகிறார். பெண்களுக்கு தற்காப்பு கலையை கற்றுக்கொடுக்கிறேன் என்று கூறி நேராக நில்லுங்கள், குனிந்து, வளைந்து நில்லுங்கள் என்று பெண்கள் அருகே ராகுல் செல்கிறார். பெண்கள் அருகே ராகுல் காந்தி செல்லக்கூடாது. இதுபோன்றும் செய்யக்கூடாது. ராகுல் காந்தியுடன் பேசும்போது பெண்கள் சற்று முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். ராகுல் காந்தி திருமணமாகாதவர், சிக்கலை உருவாக்கக்கூடியவர். " எனத் தெரிவித்தார்.
கொச்சியில் உள்ள புகழ்பெற்ற தெரஸா மகளிர் கல்லூரிக்குக் கடந்த வாரம் ராகுல் காந்தி சென்றிருந்தார். அங்குள்ள மாணவிகள் கோரிக்கையை ஏற்று தான் பயின்ற அகிடோ கலையைக் கற்றுக்கொடுத்தார். இதைக் குறிப்பிட்டு ஜார்ஜ் பேசியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகி ராகுல் காந்தி குறித்துத் தரக்குறைவாகப் பேசியது குறித்து காசர்கோட்டில் நேற்று பிரச்சாரம் செய்த முதல்வர் பினராயி விஜயனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் பதில் அளிக்கையில், "இடதுசாரி ஜனநாயக முன்னணியின் கருத்து அல்ல. இந்தக் கூட்டணி ராகுல் காந்தியைத் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை. அரசியல்ரீதியாகத்தான் விமர்சிப்போம். இது ஜார்ஜின் தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம்" என்று பினராயி விஜயன் தெரிவித்தார்.
ஜாய்ஸ் ஜார்ஜ் பேசியதற்குக் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறுகையில், "ராகுல் காந்தி மீது பாலியல்ரீதியாக குற்றச்சாட்டு வைப்பது என்பது துரதிர்ஷ்டமானது, ஏற்க முடியாதது. ஜாய்ஸ் ஜார்ஜ் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
இளைஞர் காங்கிரஸ் தலைவரும், எம்.பி.யுமான டீன் குரியகோஸ் கூறுகையில், "ஜார்ஜ் தனது குணத்தைப் பற்றிப் பேசியுள்ளார் என்று நினைக்கிறேன். அவரிடம் இருந்த வக்கிரம் வெளியே வந்துள்ளது. ராகுல் காந்தியை விமர்சிக்க ஜார்ஜுக்கு என்ன தகுதி இருக்கிறது. மாணியின் வழிகளைப் பின்பற்ற ஜார்ஜ் முயல்கிறார் என நினைக்கிறேன். இதுபோன்ற தரக்குறைவான பேச்சுகளை மாணிதான் பேசும் வழக்கம் கொண்டவர். இதுபோன்ற கருத்துகள் ராகுல் காந்தியை மட்டுமல்ல, கல்லூரிப் பெண்களையும் அவமானப்படுத்தும், காயப்படுத்தும் கருத்துகள். இது தொடர்பாகத் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
5 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago