முழு வட்டித் தள்ளுபடி இல்லை; கடன் தவணைக் காலம் நீட்டிப்பு கிடையாது: கூட்டு வட்டி, அபராத வட்டி கூடாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

By பிடிஐ

கரோனா காலத்தில் வங்கிகளில் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த ரிசர்வ் வங்கி வழங்கிய சலுகைக் காலம் 2020, ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு மேல் நீட்டிக்கப்படாது. சலுகைக் காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு வட்டிக்கு வட்டி, அபராத வட்டியை வங்கிகள் வசூலிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

அதே நேரத்தில் ஊரடங்கு காலத்தில் பெற்ற கடனுக்கான வட்டியை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வங்கிகளுக்கு உத்தரவிடுங்கள் என்று மத்திய அரசைக் கேட்டுக்கொள்ள முடியாது. அரசின் நிதிக் கொள்கையில் நீதிமன்றம் தலையிடாது என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.

கரோனா காலத்தில் வங்கியில் கடன் பெற்றவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்த மார்ச் முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ரிசர்வ் வங்கி சலுகை அளித்திருந்தது. ஆனால், அந்தச் சலுகை காலத்தில் கடன் தவணையைச் செலுத்தாமல், ஒத்திவைப்புச் சலுகை பெற்றவர்களுக்குக் கூட்டு வட்டி விதிக்கப்பட்டது.

வட்டிக்கு வட்டி விதிப்பதைத் தள்ளுபடி செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சிறு, குறுந்தொழில், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் எனப் பல்வேறு தரப்பினரும் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையில் நீதிபதிகள் ஆர்.சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர்.ஷா அமர்வு இந்த மனுவை விசாரித்து வந்தது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த மத்திய அரசு ரூ.2 கோடி வரை வங்கியில் கடன் பெற்றவர்களுக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப்படாது என்று தெரிவித்தது.

மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையின்படி, “இந்தத் திட்டத்தில் 8 பிரிவினர் பயன்பெறுவார்கள். அதில் வீட்டுக் கடன் பெற்றவர்கள், கிரெடிட் கார்டு தவணை செலுத்தியவர்கள், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பெற்ற கடன், நுகர்வோர் பொருட்கள் வாங்கி தவணை செலுத்துவோர், நுகர்வோர் கடன், கல்விக் கடன், வாகனக் கடன் ரூ.2 கோடிவரை பெற்றவர்கள் பயன்பெறுவார்கள்" எனத் தெரிவித்திருந்தது.

உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், ‘‘6 மாதக் கடன் தவணை செலுத்துவதில் வழங்கப்பட்ட சலுகையில் வட்டிக்கு வட்டி விதிப்பதில் இருந்து அனைத்துத் துறைகளுக்கும் தளர்வு வழங்கினால், மத்திய அரசுக்கு ரூ.6 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்படும். இதனால், நாடு முழுவதும் வங்கிகளின் நிதி நிலை கடுமையாக பாதிக்கப்படும்’’ எனக் கூறியிருந்தது.

இந்த வழக்கை வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு கடந்த ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் நீதிபதிகள் அசோக் பூஷண் தலைமையில் நீதிபதிகள் ஆர்.சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர்.ஷா அமர்வு இன்று தீர்ப்பளித்தனர்.

அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

''கரோனா லாக்டவுன் காலத்தில் 2020, மார்ச் 31 முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை வங்கியில் கடன் பெற்றவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்த அளிக்கப்பட்ட சலுகைக் காலம் நீட்டிக்கப்படாது.

கரோனா லாக்டவுன் காலத்தில் வாடிக்கையாளர்கள் வங்கியில் பெற்ற கடனுக்கான வட்டி முழுவதையும் தள்ளுபடி செய்யுங்கள் என்று வங்கிகளுக்கு உத்தரவிடுங்கள் என்று மத்திய அரசை நாங்கள் கேட்டுக்கொள்ளவும் முடியாது.

மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி எடுக்கும் நிதிக் கொள்கை சார்ந்த முடிவுகளில் நீதிமன்றம் தலையிடாது. ரூ.2 கோடி வரை கடன் பெற்றவர்களுக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப்படாது என மத்திய அரசு எந்த வகையில் அளவுகோல் வைத்துள்ளது என எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. ரூ.2 கோடிவரை கடன் செலுத்தியவர்கள் நிலை குறித்தும் தெளிவாக இல்லை.

கடன் தவணை சலுகைக் காலமான மார்ச் 31 முதல் ஆகஸ்ட் 31 தேதி வரை வாடிக்கையாளர்கள் கடன் தவணை செலுத்தச் சலுகை பெற்றிருந்து அவர்களிடம் இருந்து கூட்டு வட்டி, அல்லது அபராத வட்டியை வங்கிகள் வசூலித்து இருந்தால் அவர்களிடம் அந்த வட்டித்தொகையைத் திருப்பி அளிக்க வேண்டும். அல்லது அடுத்த இஎம்ஐ செலுத்தும்போது அதைக் கழித்துக்கொள்ள வேண்டும்.

நிதி, பொருளாதார மற்றும் வர்த்தகரீதியான விஷயங்களில் நீதிபதிகள் வல்லுநர்கள் அல்ல. ஆதலால், தன்னிச்சையாக மற்றும் தவறான நம்பிக்கையூட்டுவதாக இருந்தால்தான் நீதிமன்றம் தலையிடும். மற்ற வகையில் மத்திய அரசு, ரிசர்வ் வங்கி எடுக்கும் நிதி சார்ந்த கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது''.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE