வேலைவாய்ப்பில் மாநில மக்களுக்கு முன்னுரிமை: ஹரியாணா மாநில அரசின் சட்டம் இந்தியாவை பிளவுபடுத்தும்

By குர்சரண் தாஸ்

ஹரியாணா பாஜக முதல்வர் மனோகர் லால் கட்டார், தனியார் நிறுவனங்களில் 75 சதவீத வேலைவாய்ப்பை மாநில மக்களுக்கு வழங்கும் சட்டத்தை கொண்டு வந்துள்ளார். இந்த சட்டத்தால் தொழில் தொடங்கு வதற்கு கடினமான மாநிலமாக ஹரியாணா மாறும். அந்த மாநிலத்தைவிட்டு பல நிறுவனங்கள் வெளியேறக்கூடும். மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதற்குப் பதிலாக, புதிய சட்டமானது வேலையின்மையை உருவாக்கி விடுவதாக இருக்கிறது. மற்ற மாநிலங்களும் இந்தச் சட்டத்தைப் பின்பற்றத் தொடங்கினால் அது இந்தியாவை பிளவுபடுத்திவிடும். நீதிமன்றங்கள் இந்தச் சட்டத்தை அரசியலமைப்புக்கு எதிரானது என்று அறிவிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

ஹரியாணாவில் வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் தொழில் வளர்ச்சியின் மையமாக குருகிராம் உள்ளது. இந்த நகரின் வளர்ச்சிக்கு தகவல் தொழில்நுட்பத் துறைதான் முக்கியக் காரணம். குருகிராம் மூலம் ஹரியாணா மக்கள் மிகுந்த பலனை அனுபவித்து வருகின்றனர். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களால் குறிப்பிட்ட மக்கள்தான் பயனடைகின்றனர் என்று நினைப்பது தவறானது. தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ள ஒருவரின் நுகர்வு மூலம் மறைமுகமாக 3 முதல் 5 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது.

புதிய சட்டம் பற்றிய அறிவிப்பு வந்ததும், அங்குள்ள மென்பொருள் நிறுவனங்கள் நொய்டாவுக்கோ அல்லது வேறு இடங்களுக்கு செல்லலாமா என்று சிந்திக்கத் தொடங்கின. சுதாரித்து கொண்ட ஹரியாணா அரசு, புதிய சட்டத்தால் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு பாதிப்பு ஏற்படாது என்று உறுதி அளித்தது.

ஆனால், பிற துறையினர் கவலையில் இருக்கின்றனர். குருகிராமில் உள்ள வடிவமைப்பு நிறுவனம் ஒன்று திறன்மிக்க வடிவமைப்பாளர்களை இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து வேலைக்கு அமர்த்தி வருகிறது. புதிய சட்டம் இத்தகைய நிறுவனங்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இது போன்ற நிறுவனங்களுக்கு திறன்மிக்க ஊழியர்களே மூலதனம். அத்தகைய நிறுவனங்கள் ஹரியாணாவில் இருந்து வெளியேற சிந்தித்து வருகின்றன.

எதிர்திசையில் பயணம்

முந்தைய கால கட்டங்களில் ஹரியாணா அரசு, அங்கு தொழில் தொடங்குவதற்கான நடைமுறையை எளிமைப்படுத்தியது. அதனால், பல்வேறு நிறுவனங்கள் ஹரியாணாவை நோக்கி வந்தன. ஆனால், தனியார் நிறுவனங்கள் மாநில மக்களுக்கு 75 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற சட்டமானது, அரசு சென்றுகொண்டிருந்த பாதைக்கு எதிரானதாக உள்ளது.

புதிய சட்டம், அரசு அதிகாரிகளுக்கும் தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது. யார் உண்மையான ஹரியாணாகாரர் என்பதை எவ்வாறு முடிவு செய்வது? பெற்றோரில் ஒருவர் டெல்லியையோ, பஞ்சாபையோ, உத்தரப் பிரதேசத்தையோ சேர்ந்தவராக இருந்தால் அந்த நபரை எவ்வாறு அடையாளப்படுத்துவது?

சட்டம் நடைமுறைக்கு வந்தால், மாநில மக்களிடம், அவர்கள் ஹரியாணாகாரரா என்பதற்கான ஆதாரத்தை அரசு கேட்கும். எந்த ஆவணங்களையும் கொண்டிராத ஏழைகள் என்ன செய்வார்கள்? இந்தச் சட்டம் மூலம் வேலை தேடுபவர்கள் இடையே ஹரியாணா அரசு பதற்றத்தை ஏற்படுத்தி விட்டது.

இந்தியா பிளவுபடும்

பிரதமர் மோடியின் ‘ஒரே இந்தியா’ என்ற இலக்குக்கு இந்த சட்டம் எதிராக இருக்கிறது. மகாராஷ்டிராவில் சிவசேனா செய்ததை நினைவுகூர வேண்டியது அவசியமாகிறது. 1970-களில் அங்குள்ள வேலைவாய்ப்புகளில் மகாராஷ்டிரா மக்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற கோஷம் முன்வைக்கப்பட்டது. அதன் நீட்சியாக மாதுங்கா, தாதர் பகுதியில் வசித்த தமிழர்கள் தாக்குதலுக்கு உள்ளானார்கள். 1980-களில் சீக்கிய காரோட்டிகள் தாக்குதலுக்கு ஆளாகினர். 1990 களில் பிஹார், உத்தர பிரதேச தொழிலாளர்கள் பாதிப்பை எதிர்கொண்டனர்.

இத்தகையச் சட்டங்கள் இந்தியாவைப் பிளவுபடுத்தும். இந்த சட்டங்கள் பிராந்திய அடையாளத்தை முதன்மைப்படுத்துகிறது. பிராந்திய வாரியான அடையாளம் இந்திய தேசிய அடையாளத்தை அழித்துவிடும். அதன் பிறகு ஒருவர், இந்தியராக பெருமைகொள்ள முடியாது. பிற மாநிலத் தொழிலாளர்கள் அந்நியராக மாறுவார்கள். உள்நாட்டுக்குள்ளான இடம்பெயர்வு என்பது நாட்டின் பன்முகத்தின் வெளிப்பாடு என்று ஆய்வுகள் கூறுகின்றன. அந்த வகையில் இந்தச் சட்டம் பொருளாதார இழப்பை மட்டுமல்ல, சமூக ஒழுங்கையும் குலைக்கும்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று கூறும் சட்டப் பிரிவு 14, இந்திய குடிநபர் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் வசிக்கவும் வேலை செய்யவும் உரிமை வழங்கும் சட்டப் பிரிவு 19 போன்ற சட்டங்களை ஹரியாணா அரசின் புதிய சட்டம் மீறுகிறது. எப்படியும் பாதிப்புகள் ஏற்படும் முன்பே, நீதிமன்றங்கள் இந்தச் சட்டத்தை முறைகேடானது என்று அறிவித்துவிடும். ஹரியாணா அரசியல்வாதிகளுக்கும் இது நன்றாகவே தெரியும்.

அவர்கள் மக்களிடம் சென்று, ‘நாங்கள் எவ்வளவோ முயற்சித்தோம். நீதிமன்றங்களின் தலையீட்டால் நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை’ என்று சொல்வார்கள். ஆந்திராவும் ஜார்க்கண்ட் மாநிலமும் இதுபோன்ற சட்டத்தைக் கொண்டு வர இருப்பதாக தெரிகிறது. பிற மாநிலங்களும் இதைப் பின்பற்றக்கூடும்.

பொருளாதாரக் கொள்கை என்பது நீண்டகால நோக்கை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், அரசியல் என்பது குறுகிய கால நோக்கை அடிப்படையாகக் கொண்டது. அந்த வகையில் அரசியல்வாதிகளின் நோக்கமும் பொருளாதார சீர்திருத்தவாதிகளின் நோக்கமும் வேறுவேறானது.

என்டி. ராமாராவ், 1 கிலோ அரிசி 1 ரூபாய் என்ற அறிவிப்பின் மூலம் ஆட்சிக்கு வந்தார். அவர் ஆந்திராவின் கருவூலத்தை காலி செய்து திவாலாக்கினார். பஞ்சாப் அரசியல்வாதிகள் அம்மாநில விவசாயிகளுக்கு இலவச தண்ணீர், மின்சாரத்தை அறிவித்து அம்மாநிலத்தை திவாலாக்கினர். அந்த மாநில விவசாயிகள் நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சி மண்ணை வீணாக்கினர்; வளமிக்க மாநிலத்தை வறுமையை நோக்கித் தள்ளினர். இதுபோன்ற முரண்பாடுகளால்தான் ஜனநாயக நாட்டில் சீர்திருத்தம் கொண்டுவருவது என்பது கடினமானதாக உள்ளது. ஹரியாணா மக்களுக்கு 75 சதவீத வேலைவாய்ப்பு என்ற சட்டத்தை மாநில அரசு நடைமுறைப்படுத்தும்பட்சத்தில் அது மேற்கூறிய பாதிப்புகளை ஏற்படுத்தும். அந்த பாதிப்புகளை மக்கள் உணரத் தொடங்கும்போது, திட்டத்தை அறிவித்த அரசியல்வாதிகள் தேர்தலில் வெற்றிபெற்று நீண்ட காலம் ஆகியிருக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்