கடந்த 1967 முதல் தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள்தான் ஆட்சி செய்கின்றன. திமுக, அதிமுக என்று மாறி மாறி ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து வருகிறார்கள். தேசிய கட்சிகள் ஏதாவது ஒரு திராவிட கட்சியின் முதுகில் ஏறி சவாரி செய்கின்றன.
காமராஜர் ஆட்சி - காங்கிரஸ் தலைவர்கள் எப்போதாவது இந்த வார்த்தையை கூறுவது வழக்கம். ஆனால், தேர்தல் காலங்களில் இந்த கோஷத்தை தங்கள் வசதிக்காக மறந்துவிடுகின்றனர். காமராஜர் ஆட்சி எங்கள் கனவு என்பதற்கு கதர் என்ன செய்தது? விழித்து கொண்டால்தானே... தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஒற்றுமை என்றால் அது என்ன கட்சி? அவர்களுடன் கூட்டணி வைத்தால் எத்தனை தொகுதிகள் தருவார்கள்? அதில் எங்கள் கோஷ்டிக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்பார்கள். இதனாலேயே தற்போதைய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பதவியேற்றதும் கோஷ்டி அரசியலில் எனக்கு நம்பிக்கையில்லை என்றார்.
இந்திரா, ராஜிவ், சோனியா, ராகுல் தலைமையை தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் இவர்களால் நியமிக்கப்பட்ட தமிழக காங்கிரஸ் தலைவரை ஏற்றுக் கொண்டதாக இதுவரை வரலாறு இல்லை. ப.சிதம்பரம் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தாலே, அது செய்தி. தமிழக காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்கு அவர் என்ன செய்தார் என்றால், அவருக்கே பதில் சொல்ல தெரியாது. அவர் ஒரு கோஷ்டி தலைவர், அவ்வளவே. டெல்லி தலைவர்கள் சத்தியமூர்த்தி பவன் இருக்கும் சாலை வழியாக கூட போக மாட்டார்கள். ஆனால், அறிவாலயம் போவார்கள். போயஸ் தோட்டம் கூட போனார்கள்.
திமுக மனம் கோணாமல் இருக்க வேண்டும் என்பதில்தான் டெல்லி காங்கிரஸ் தலைவர்ககளின் முழு கவனமும் இருக்கும். காரணம், திமுக தயவில்தான் அவர்கள் கட்சி எம்.பி.க்கள் வெற்றி பெறுகிறார்கள் என்ற கரிசனம். மத்திய அமைச்சராக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திமுக.வை கடுமையாக விமர்சித்தார். கோபப்பட்ட திமுக, இளங்கோவனை கண்டித்து தீர்மானம் போட, டெல்லி உத்தரவின் பேரில் அவர் கருணாநிதியிடம் போய் மன்னிப்பு கேட்டார். பெரியார் பேரனுக்கே இந்த மரியாதைதான்.
ஒரு முறை அருண்குமார் என்ற ஆந்திராவைச் சேர்ந்த காங்கிரஸ்காரரை தமிழக பொறுப்பாளராக காங்கிரஸ் தலைமை நியமித்தது. அவர் அறிவாலயத்தில் கருணாநிதியை சந்திக்கவில்லை. எனவே, திக தலைவர் வீரமணியை விட்டு, தமிழக கூட்டணியின் எஜமானர் கருணாநிதிதான். அவரை ஏன் இதுவரை அருண்குமார் சந்திக்கவில்லை என்று கண்டித்து திமுக அறிக்கை வெளியிட வைத்தது.
‘‘தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி மலர வேண்டும் என்ற உணர்வு தொண்டர்களுக்கு இருக்கிறது. ஆனால், தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு இல்லை’’ என்று தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த கிருஷ்ணசாமி ஒரு முறை உண்மையை கூறினார்.
தமிழக காங்கிரஸ் தலைவர்களாக இருந்த மூப்பனார் மற்றும் அவர் மகன் ஜி.கே.வாசன் இருவரும் காங்கிரஸ் கட்சியை தன்மானமுள்ள கட்சியாக நடத்த முயற்சி செய்தார்கள். ஒரு முறை தமிழக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் நியமனம் பற்றி பேச டெல்லிக்கு அழைக்கப்பட்டார் ஜி.கே.வாசன். அவர் டெல்லி தலைமையிடம் காங்கிரஸ் கட்சியில் பெரும்பான்மையினர் எனது ஆதரவாளர்கள். எனவே, 70 சதவீத நிர்வாகிகள் என்னுடையை ஆதரவாளர்களாகவே நியமிக்க வேண்டும். அப்படியில்லை என்றால் கட்சி தேர்தலை நடத்துங்கள்; எனது ஆதரவாளர்கள் 100 சதவீதம் வெற்றி பெறுவார்கள் என்றார். அதன் பிறகு டெல்லி தலைமை நிர்வாகிகள் நியமனம் பற்றிய பேச்சையே விட்டுவிட்டது. ஜி.கே.வாசன் அதிருப்தியாளர் பட்டியலில் வைக்கப்பட்டார். அதன் பிறகு அவர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை மீண்டும் தொடங்கினார் வாசன்.
தேசிய கட்சியான காங்கிரஸ் தனது ஆட்சி காலத்தில் வருமான வரித் துறையை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்தியது. இந்தி திணிப்பு, மாநிலங்களுக்கான நிதியுதவியில் பாரபட்சம் என்று தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தியது. திமுக அதிமுக இரண்டு கட்சிகளின் ஆட்சியையும் டிஸ்மிஸ் செய்தது. அவர்களுடன் தேர்தல் கூட்டணியும் வைத்தது.
பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த ஏ.கே.மூர்த்தி, ரயில்வே இணைஅமைச்சராக இருந்த போதுதான் தமிழகத்துக்கு நிறைய புதிய ரயில்கள் விடப்பட்டன. தமிழக காங்கிரஸ் தலைவர்கள் யாரும் தமிழ் நாட்டுக்காக எதையும் கேட்டதில்லை. ஒரே ஒரு விதிவிலக்கு. காவிரி பிரச்சினையில் மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் செய்கிறது என்று சொல்லி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் வாழப்பாடி ராமமூர்த்தி.
ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது தமிழகத்துக்கு எந்த சலுகையும் தரவில்லை. தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சியை பிடிப்பதை பற்றி யோசிப்பதையே விட்டுவிட்டார்கள்.
தொகுதி பங்கீடு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை ரொம்பவும் அவமானப்படுத்தியது திமுக. இதற்கு காரணம்... காங்கிரஸ் வேண்டாம். அதை கழற்றி விடுங்கள் என்று பிரசாந்த கிஷோரின் ஐ.பேக் குழு சொல்லியதுதான். இதுபற்றி கட்சி நிர்வாகிகளிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, “திமுக.வினர் காங்கிரஸையும் காங்கிரஸ் கட்சியினரையும் மதிக்கவில்லை. அவர்கள் சொல்லும் எண்ணிக்கைக்கு நாம் சம்மதித்தால் நாளை கட்சியே இருக்காது” என்று சொல்லி கண்ணீர் விட்டார்.
‘‘இருபத்தி ஐந்து தொகுதிகள்தான் தந்திருக்கிறார்களே?’’ என்ற கேள்விக்கு, அதிக தொகுதிகளில் போட்டியிட்டு தோற்பதற்கு இது பரவாயில்லை என்று கருத்து தெரிவிக்கிறார் மணிசங்கர் அய்யர். சிதம்பரம் கருத்தும் இதுதான். இவர்களை எல்லாம் இன்னும் காங்கிரஸ் தொண்டர்கள் நம்பி கொண்டிருகிறார்கள் பாவம்.
தொகுதிகள் குறைவாக இருக்கிறதே என்ற கேள்விக்கு நிருபர்களிடம் பதில் சொல்லும் போது, “தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா கட்சி, கரோனா நோயைவிட மோசமான நோய். அது இங்கு வரக் கூடாது என்பதற்காக இந்த தேர்தலில் கூட்டணி அமைத்துள்ளோம். எதிர் காலத்தில் நாங்கள் 200 தொகுதிகளிலும் போட்டியிடும் சூழ்நிலை வரக் கூடும் என்று கூறி தொண்டர்களை உற்சாகப்படுத்தி பேசுகிறார்” கே.எஸ். அழகிரி.
பாஜக, தமிழ்நாட்டில் நோட்டாவுக்கும் குறைவான வாக்கு வாங்கியுள்ள கட்சி. இப்போது கூட அதிமுகவை தனது கிளை கழகமாகதான் பார்க்கிறது. வேளாண்மை என்பது மாநில அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்டது. புதிய வேளாண் சட்டம் மூலம் மத்திய அரசின் அதிகார வரம்புக்கு கொண்டு சென்றுவிட்டது பாஜக. அதற்கு அதிமுக துணை போனது. துணை முதல்வர் ஓ.பி.எஸ். மத்திய நிதியமைச்சரை சந்திக்க அவரது அலுவலக அறை வாசலில் காத்திருந்தார். ஆனால், நிதியமைச்சர் அவரை சந்திக்க மறுத்து திருப்பி அனுப்பிவிட்டார். அதன் பிறகும் பாஜக - அதிமுக கூட்டணி இன்று வரை தொடர்கிறது.
ஏற்கனவே, மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி, மத்திய பட்டியலுக்கு போனதற்கு காரணம் அதிமுகதான். அந்த மசோதாவை அதிமுக ஆதரித்து வாக்களித்தால்தான் அது சத்தியமாயிற்று. பாஜக 60 இடங்கள், ஆட்சியில் பங்கு என்று எல்லாம் பேசியது. மத்திய அமைச்சர் அமித் ஷா வந்து பேசி மிரட்டி வாங்கிவிடுவார் என்று எல்லாம் பேச்சு வந்தது. சசிகலா, டி.டி.வி.தினகரனை கட்சிக்குள் சேர்க்க அமித் ஷா வற்புறுத்தினார். முதல்வர் என்ற முறையில் மத்திய அரசு செய்த எல்லா துரோகத்தையும் சகித்துக் கொண்டார். ஆனால் தொகுதி பங்கீட்டில் எடப்பாடி பழனிசாமி, அமித் ஷாவின் பூச்சாண்டிக்கு பயப்படவில்லை. இதேபோல சசிகலா, தினகரன் விஷயத்திலும் வேண்டாம் என்பதில் உறுதியாக இருக்கிறார். இருபது தொகுதிகளை பாஜக வாங்கியதும் சுப்பிரமணியாசாமி ஒரு தொகுதியிலும் பாஜக ஜெயிக்காது என்று வாழ்த்தினர்!
தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக இரண்டும் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தங்கள் நினைப்பதை இதுவரை சாதித்து கொண்டுதான் இருக்கின்றன. தமிழ்நாட்டில் தேசிய கட்சிகள் வளராமல் போனதற்கும், அது ஆட்சி அதிகாரத்துக்கு தமிழ்நாட்டில் வர முடியாமல் போனதற்கும் திராவிட கட்சிகளின் ஆளுமை மட்டும் காரணமல்ல தேசிய கட்சிகள் தமிழ்நாட்டுக்கு செய்கின்ற துரோகமும் ஒரு முக்கிய காரணம்.
தருமபுரி, கிருஷ்ணகிரி மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண ‘ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் திட்டம்’ மற்றும் புளோரைடு பாதிப்பு தடுப்பு திட்டத்தை கருணாநிதி கொண்டு வந்தார். ஆனால், அந்த நேரத்தில் கர்நாடகாவில் தேர்தல் சீசன்... வாக்கு வங்கி அரசியலுக்காக ஒகேனக்கல் எங்களுக்கே சொந்தம் என்ற கோஷத்தை பாஜக.வினர் எழுப்பினார்கள். அப்போதைய காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் எஸ்.எம்.கிருஷ்ணா ஒகேனக்கல் திட்டத்தை நிறுத்துங்கள் என்று கருணாநிதிக்கு யோசனை சொன்னார். தமிழக காங்கிரஸ் அப்போது இதுபற்றி பெரிதாக கவலைப்படவில்லை.
தேசிய கட்சிகளான பாஜக.வும் காங்கிரஸும் தங்களின் சொந்த அரசியல் நலனுக்காக தமிழக அரசின் திட்டதையே நிறுத்துமாறு வற்புறுத்தின. அழுத்தம் காரணமாக அந்த திட்டத்தை கருணாநிதி தள்ளிவைத்தார்.
அதனால்தான் தேசிய கட்சிகள் தமிழ்நாட்டுக்கு ஆட்சி அதிகாரத்துக்கு இதுவரை வர முடியவில்லை.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago