கேரள தேர்தல்: பாஜக கூட்டணியிலிருந்து பிசி தாமஸ் திடீர் விலகல்: காங்கிரஸ் கூட்டணியில் இணைகிறது

By பிடிஐ


கேரளாவில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 3 வாரங்களே இருக்கும் நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்த பிசி தாமஸ் தலைமையிலான கேரள காங்கிரஸ் கட்சி திடீரென விலகியது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியில் (யுடிஎப்) உள்ள மூத்த தலைவர் பி.ஜே.ஜோஸப் தலைமையிலான கேரள காங்கிரஸ் கட்சியில் தன்னுடைய கட்சியை இணைத்துக் கொள்ளப் போவதாக பி.சி. தாமஸ் தெரிவித்துள்ளார்.

பி.சி.தாமஸ் தலைமையிலான கேரள காங்கிரஸ் கட்சி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணி அரசில் இடம் பெற்றிருந்தது. அப்போதைய அரசில் பி.சி.தாமஸ் மத்திய சட்டத்துறை இணைஅமைச்சராக இருந்தார். கடந்த 2016-ம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் 4 இடங்கள் பிசி தாமஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த முறை ஒரு இடம் கூட பாஜக கூட்டணியில் ஒதுக்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த பி.சி.தாமஸ் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.

ஜோஸப், பிசி தாமஸ்,

இதுகுறித்து பி.சி.தாமஸ் நிருபர்களிடம் கூறுகையில் " கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பாலா தொகுதியில் என்னைப் போட்டியிட பாஜக கேட்டுக்கொண்டது. ஆனால், தனிப்பட்ட காரணங்களால் என்னால் போட்டியிட முடியாது எனத் தெரிவித்தேன். ஆனால், இந்த தேர்தலில் 4 இடங்களில் போட்டியிட வாய்ப்புக் கேட்டோம். பாஜக வழங்கவில்லை.

கூட்டணி தர்மத்தை மதிக்காமல் பாஜக நடக்கிறது. அதனால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகிவிட்டோம். எங்களுடைய கட்சியை ஜோஸப் தலைமையிலான கேரள காங்கிரஸ் கட்சியுடன் இணைக்க முடிவு செய்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.

கேரள மாணி காங்கிரஸின் தலைவராக இருக்கும் ஜோஸ் தன்னுடைய கட்சியில் தாமஸ் தலைமையிலான காங்கிரஸ் கட்சி இணையப்போவதை உறுதி செய்துள்ளார்.

கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் வாழும் கிறிஸ்தவ குடும்பங்களுக்கு மத்தியில் பி.சி.தாமஸ் கேரள காங்கிரஸ் கட்சிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இதனால் தாமஸ் தலைமையிலான காங்கிரஸ் கட்சி மூலம் அந்த வாக்குகளைக் கவர பாஜக திட்டமிட்டிருந்தது.

ஆனால், இப்போது காங்கிரஸ் தலைமையிலான ஜோஸப் காங்கிரஸ் கட்சியில் தாமஸ் காங்கிரஸ் இணைவது பாஜகவுக்கு பின்னடைவையே ஏற்படுத்தும். இடுக்கி, கோட்டயம் மாவட்டங்களில் பாஜக பெறும் வாக்குகளின் அளவை மேலும் குறைக்கும்.

கேரளாவில் மட்டும் கேரள காங்கிரஸ் என்ற பெயரில் மட்டும் 6 சிறிய கட்சிகள் இருக்கின்றன. இந்த சிறிய கட்சிகள் இடதுசாரிகள் கூட்டணியிலும், காங்கிரஸ் கூட்டணியிலும் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE