கரோனா பரவல் பிரதமர் மோடி ஆலோசனை கூட்டத்தை புறக்கணிக்க மம்தா பானர்ஜி முடிவு

கரோனா வைரஸ் பரவலை தடுக்க அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று முக்கிய ஆலோசனை நடத்தும் நிலையில் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மார்ச் இறுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. அப்போது பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் பலமுறை காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

எனினும் மக்களின் வாழ்வாதாரம், நாட்டின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு கடந்த ஜூன் முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. இதன்பின் கடந்த செப்டம்பரில் வைரஸ் பரவல் உச்சத்தை தொட்டது. அப்போது நாளொன்றுக்கு 90,000 முதல் ஒரு லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டது.

அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் கடந்த பிப்ரவரிமுதல் மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

மகாராஷ்டிராவில் தற்போதுநாள்தோறும் 15,000- க்கும்மேற்பட்டோருக்கு தொற்று ஏற்படுகிறது. பஞ்சாப், கேரளா, கர்நாடகா, குஜராத், தமிழகம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் தினசரி தொற்று அதிகமாக உள்ளது.

தினசரி தொற்று அதிகரித்து வருவதால் கரோனா நோயாளி களின் எண்ணிக்கை 2.23 லட்சமாக உயர்ந்திருக்கிறது. இதில் 59 சதவீத நோயாளிகள் மகாராஷ்டிராவில் உள்ளனர். வைரஸ் பரவலை தடுக்க மகாராஷ்டிராவில் மும்பை, நாக்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு அமல் செய்யப் பட்டிருக்கிறது.

குஜராத்தில் அகமதாபாத், வடோதரா, சூரத், உள்ளிட்ட நகரங்களில் வரும் 31-ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் ஜபல்பூர், குவாலியர், உஜ்ஜைன், ரத்லம், புர்கான்பூர் உள்ளிட்ட நகரங்களில் சந்தைகள் மூடப்பட்டுள்ளன. தலைநகர் போபால் மற்றும் இந்தூரில் புதன்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கு அமல் செய்யப்படுகிறது.

நாட்டின் சில மாநிலங்களில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

இதில் வைரஸ் பரவலை கட்டுப் படுத்துவது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு மாநில முதல்வர்கள், ஆளுநர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். ஆனால் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்கூட்டியே தேர்தல் பிரச்சாரம் செய்ய நேரம் ஒதுக்கியதால் கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பில்லை என மம்தா பானர்ஜி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால் மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

நந்திகிராம் தொகுதியில் போட்டியிடும் மம்தா பானர்ஜி கடந்த 10-ம் தேதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, மர்ம நபர்களால் தாக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, காலிலும், கழுத்திலும் காயம் ஏற்பட்டதாகக் கூறி மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மம்தா பானர்ஜியை யாரும் தாக்கவில்லை, அவர் நாடகமாடுகிறார் என்று பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மம்தா பானர்ஜி தாக்கப்பட்டது குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனுவும் அளிக்கப்பட்டது.

மத்திய அமைச்சர் அமித் ஷாவின் பொதுக்கூட்டத்துக்கு மக்கள் யாரும் வருவதில்லை, இதனால் திரிணமூல் காங்கிரஸ் தலைவர்களைத் துன்புறுத்தும் வேலையில் ஈடுபட்டு என்னைக் கொலை செய்யத் திட்டமிடுகிறார்கள் என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE