உ.பி.யில் பேச்சுத்திறனற்ற சிறுமி பலாத்காரக் கொலை வழக்கு: 17 வயது சிறுவன் போக்ஸோ சட்டத்தில் கைது

By ஆர்.ஷபிமுன்னா

உத்தரப்பிரதேசத்தில் பேச்சுத் திறனற்ற 14 வயது சிறுமி கடந்த மாதம் 28-ம் தேதி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அருகிலுள்ள கிராமத்தின் 17 வயது சிறுவன் போக்ஸோ சட்டத்தில் இன்று கைதாகி உள்ளார்.

உ.பி.யின் அலிகர் அருகே 14 வயது தலித் சிறுமி புல்வெட்டச் சென்றிருந்தார். பேச்சுத்திறனற்ற இவர் மாலையில் தேடப்பட்ட போது அரை நிர்வாண ஆடையுடன் கோதுமை வயலில் கொலை செய்யப்பட்டு கிடைந்துள்ளார்.

கிராமத்தில் அவரது வீட்டின் அருகில் நடந்த சம்பவத்தில் 72 மணி நேரத்திற்கு பின் துப்பு துலங்கியுள்ளது. இதில், அருகிலுள்ள தொராய் எனும் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

வயல்வெளிக்கு தன் 10 வயது ஒன்றுவிட்ட சகோதரனுடன் காலை 11.00 மணிக்கு நீர்பாய்ச்ச இந்த சிறுவன் வந்துள்ளார். உடன்வந்த சிறுவன் சற்று தள்ளி கால்நடைகள் மேய்த்துக் கொண்டிருக்க இவன் தனது கைப்பேசியில் ஆபாச வீடியோ பதிவுகளை பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது தன் கண்முன் புல்வெட்டிக் கொண்டிருந்த அச்சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றதாகவும், வெறி பிடித்த நிலையில் இருந்தவனிடம் அச்சிறுமி இணங்காததால் கடும் கோபம் எழுந்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.

இதனால், சிறுமியின் கழுத்தை துப்பாட்டாவால் நெருக்கி சிறுவன் கொலை செய்து விட்டதாகவும் அலிகர் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடந்த வருடம் செப்டம்பரில் உ.பி.யில் ஹாத்ரஸ் கிராமத்து தலித் கிராமத்து பெண் 4 உயர் சமூகத்து இளைஞர்களால் பலாத்காரமாகி கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், அருகிலுள்ள அலிகர் கிராமத்தின் இந்த சம்பவத்திலும் பதட்ட சூழல் உருவானது.

இதன் காரணமாக, அலிகர் எஸ்எஸ்பியும் தர்மபுரியை சேர்ந்த தமிழரான ஜி.முனிராஜ்.ஐபிஎஸ் நேரடியாக தலையிட்டு வழக்கை விசாரித்தார். இவரும் சரியான துப்பு கிடைக்காமல் இரண்டு தினங்களுக்கும் மேலாகத் திணறி வந்தார்.

இதுபோன்ற பதிவுகளை காண அப்பகுதி கிராமங்களின் சிறுவர்கள் ஒரு வாட்ஸ் அப் குழுமத்தை உருவாக்கி அன்றாடம் பதிவுகளை பகிர்ந்துள்ளனர். ஆபாச இணையதளங்களை காண 18 வயது வரை இருக்கும் தடையை மீறி இச்சிறுவன் பார்த்தது சம்பவத்திற்கு காரணமாகி விட்டது.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் கூறும்போது, ‘இச்சிறுவன் மீது சந்தேகம் இருந்தாலும் அவர் அப்பாவியாக இருந்து தண்டிக்கப்படக் கூடாது என ஆதாரங்கள் தேடியதால் கால தாமதானது.

பலாத்காரம், போக்ஸோ மற்றும் கொலை ஆகிய மூன்று வழக்குகளின் பிரிவுகள் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கை திசைதிருப்ப உடலை அருகிலுள்ளவரது வயல்வெளியில் வீசியுள்ளதும் தெரிந்தது.

சுமார் 3 மணி நேரத்தில் நடைபெற்ற இந்த முழுச்சம்பவமும் உடன்வந்த சிறுவன் கால்நடை மேய்த்துக்கொண்டிருந்தால் தெரியவில்லை. அந்த வாட்ஸ்அப் குழுமத்தில் 18 வயதிற்கும் குறைவாக உள்ள சிறுவர்கள் பற்றியும் விசாரித்துக் கொண்டிருக்கிறோம்.’ எனத் தெரிவித்தார்.

கைதான 17 வயது குற்றவாளிக்கு 18 வயது நிரம்பவில்லை என்பதால் அவர் சிறுவன் என்றே கருதப்படுகிறார். எனினும், 16 முதல் 18 வயதுக்குள்ளானவர்கள் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்களும் பலாத்கார வழக்கில் தண்டனை அடைவதில் தப்ப முடியாது என சட்டதிருத்தம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE