அரசின் கருத்து மாறாக குரல் கொடுப்பது தேசத்துரோகக் குற்றமாகாது: பரூக் அப்துல்லாவுக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து

அரசின் கருத்து மாறாகக் குரல் கொடுப்பதும், எதிர்ப்பைத் தெரிவிப்பதும் தேசத்துரோக குற்றம் ஆகாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவின் எம்.பி.பதவியை பறிக்க வேண்டும், அவர் மீது தேசத்துரோக குற்றம் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்து இந்த கருத்தை உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்த மனுவைத் தாக்கல் செய்த மனுதாரர்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

பரூக் அப்துல்லா : கோப்புப்படம்

மனுதாரர்கள் ராஜத் சர்மா, நே ஸ்ரீவஸ்தவா இருவரும் உச்ச நீதிமன்றத்தில் பரூக் அப்துல்லாவுக்கு எதிராக மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவில், "ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தபின், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவின் கருத்துக்கள் மத்திய அரசின் செயல்பாட்டுக்கு விரோதமாக இருக்கிறது.

இவர் தேசத்துக்கு விரோதமாகப் பேசுகிறார், தேசிய விரோத செயல்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டால், அது தேசத்தின் ஒற்றுமைக்கு விரோதமாக அமையும். பருக் அப்துல்லாவைத் தொடர்ந்து எம்.பி.யாக இருக்க அனுமதிக்கக் கூடாது. சீனா, பாகிஸ்தான் ஆதரவை பரூக் அப்துல்லா கோருகிறார்" எனத் தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி சஞ்சய் கிஷன் அமர்வு பிறப்பித்த உத்தரவில், " ஓர் அரசின் கருத்துக்கு எதிராகக் குரல் எழுப்புவதும், மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவிப்பதும் தேசத்துரோக குற்றமாகாது. பருக் அப்துல்லா மீது தேசத்துரோக குற்றத்தைப் பதிவு செய்ய உத்தரவிட முடியாது. இந்த மனுவைத் தள்ளுபடி செய்கிறேன். இந்த மனுவைத் தாக்கல் செய்த மனுதாரர்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது" என உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE