காங்கிரஸ் கட்சியின் தலைமை மீது அதிருப்தி அடைந்து, குழுவாகச் செயல்பட்டு வரும் மூத்த தலைவர்கள் தங்கள் அடுத்த கூட்டத்தை ஹரியாணா மாநிலம் குருஷேத்ரா மாவட்டத்தில் நடத்த முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
ஆனால், தனிக்குழுவாகச் செயல்பட்டுவரும் அதிருப்தி தலைவர்கள் கட்சிக்குள் மூத்த உறுப்பினர்கள் என்பதால், அவர்கள் மீது எடுக்கும் நடவடிக்கை கட்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால், கட்சித் தலைமை தொடர்ந்து அவர்களைக் கண்காணித்து வருகிறது.
காங்கிரஸ் கட்சிக்குப் புதிய தலைமை தேவை, மாற்றம் தேவை எனக் கோரி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சோனியா காந்திக்கு மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத், கபில் சிபல், மணிஷ் திவாரி உள்ளிட்ட 23 தலைவர்கள் கடிதம் எழுதினர். இந்தக் கடிதத்தால் காங்கிரஸ் தலைமை இந்தத் தலைவர்கள் மீது மிகுந்த அதிருப்தியுடன் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த அதிருப்தியால்தான் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த குலாம் நபி ஆசாத் பதவிக்காலம் முடிந்த பின்னும், அவருக்கு எம்.பி. பதவி வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், சமீபத்தில் கேரளாவுக்குச் சென்றிருந்த காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி, வடக்கு, தெற்கு எம்.பி. பதவி எனப் பிரித்துப் பேசினார். இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆனந்த் சர்மா, கபில் சிபல் எதிர்ப்பு தெரிவித்து விளக்கம் அளிக்கக் கோரியிருந்தனர்.
காங்கிரஸ் கட்சிக்குப் புதிய தலைமை தேவை என சோனியா காந்திக்குக் கடிதம் எழுதிய 23 மூத்த தலைவர்களில் பலர் கடந்த வாரம் ஜம்முவில் கூடினர். காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தின் அறக்கட்டளை சார்பில் நடக்கும் சாந்தி சம்மேளனம் நிகழ்ச்சியில் அதிருப்தி தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய குலாம் நபி ஆசாத், "அனைத்துச் சாதி, மதங்கள், மக்களையும் காங்கிரஸ் கட்சி ஒரே மாதிரியாகத்தான் நடத்துகிறது. மரியாதை அளிக்கிறது" எனத் தெரிவித்து ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்தார்.
மூத்த தலைவர் கபில் சிபல் பேசுகையில், "காங்கிரஸ் கட்சி உண்மையில் பலவீனமடைந்துவிட்டது. அதற்காகத்தான் நாங்கள் இங்கு கூடியுள்ளோம், கட்சியை வலுப்படுத்தக் கூடியுள்ளோம்" எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் அபிஷேக் சிங்வியும் பதில் அளித்தார். "காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தக் கூடியதாகக் கூறும் தலைவர்கள், 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சியை வெற்றி பெறச் செய்ய உழைத்தால் உதவியாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் ஜம்முவில் கூடி ஆலோசனை நடத்திய அதிருப்தி தலைவர்கள் அடுத்தகட்டமாக ஹரியாணா மாநிலம் குருஷேத்ரா மாவட்டத்தில் கூட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிருப்தி தலைவர்களில் ஒருவர் கூறுகையில், "ஹரியாணாவின் குருஷேத்ராவில் அடுத்ததாகக் கூட இருக்கிறோம். இன்னும் எங்கு நடத்துவது என முடிவு செய்யவில்லை. ஜம்முவில் கூடி ஆலோசித்தபின், கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பதற்றத்தைக் குறைப்பதான எந்த முடிவையும் மூத்த தலைவர்கள் எடுக்கவில்லை.
5 மாநிலத் தேர்தலில் எங்களைப் பணியாற்ற காங்கிரஸ் தலைமை கோருகிறது. ஆனால், எங்களில் யாரையும் நட்சத்திரப் பேச்சாளர்களாக மாற்ற விரும்பவில்லை. நாங்கள் பிரச்சாரத்துக்குச் சென்றால்கூட அது வேட்பாளர் கணக்கில்தான் வரும். ஆதலால் எங்களுக்குத் தனிப்பட்ட முறையில் எந்தப் பணியும் வழங்கப்படவில்லை. ஆதலால், தொடர்ந்து கட்சியை வலுப்படுத்தக் குரல் கொடுப்போம்" எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே, அதிருப்தி தலைவர்கள் ஜம்முவில் கூடிப் பேசியது, ஆலோசனை நடத்தியது உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் கட்சித் தலைமை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. தேர்தல் நேரத்தில் மூத்த தலைவர்கள் மீது எந்த நடவடிக்கை பாய்ந்தாலும் அது கட்சிக்கு பெரும் சரிவாகச் செல்லும் என்பதால் மவுனம் காத்து வருகிறது காங்கிரஸ் தலைமை என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago