கரோனாவை காரணம் காட்டி கர்நாடக அரசு அமுல்படுத்தியுள்ள கட்டுப்பாடுகளை நீக்ககோரி பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
கேரள மாநிலத்தில் அதிகரித்து வரும் கரோனா வைரஸ் பரவலால், மங்களூரு உள்ளிட்ட கர்நாடக எல்லைக்குள் வரும் கேரளப் பயணிகளுக்குக் கடும் கட்டுப்பாடுகளைக் கர்நாடக அரசு விதித்துள்ளது.
கேரளாவில் இருந்து வரும் மக்கள் அனைவரும் கர்நாடக மாநிலத்துக்குள் நுழைவதற்கு கரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மங்களூரு சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கின்றன.
தட்சின கன்னடா - கேரளா எல்லை வழிச்சாலையும் மூடப்பட்டது. 72 மணி நேரத்துக்கு முன் கரோனா பரிசோதனை செய்த நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனக் கர்நாடக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் இருக்கும் மக்கள் தங்களின் சிறப்பு மருத்துவ சிகிச்சைக்கும் உயர்ந்த தரத்திலான மருத்துவமனைகளுக்கும் மங்களூருக்குத்தான் சென்று வருகிறார்கள். ஆனால், இன்று காலை முதல் திடீரென கேரளா-கர்நாடகா எல்லை மூடப்பட்டதையடுத்து, மக்கள் பெரிய சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
காசர்கோட்டிலிருந்து 10 முதல் 50 கி.மீ. தொலைவில்தான் மங்களூரு இருக்கிறது. கண்ணூர் செல்ல வேண்டுமென்றால் 100 கி.மீ. தொலைவு செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே இதேபோன்ற கடுமையான கட்டுப்பாடுகளைக் கர்நாடக அதிகாரிகள் கொண்டு வந்தனர். அப்போது, மிகவும் ஆபத்தான நிலையில் நோயாளிகள் மருத்துவ சிகிச்சைக்கு செல்ல வேண்டுமென்றால்கூட, கரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியமாக்கப்பட்டது.
இந்தநிலையில் கரோனாவை காரணம் காட்டி கர்நாடக அரசு அமுல்படுத்தியுள்ள கட்டுப்பாடுகளை நீக்ககோரி பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடித்தில் ‘‘கர்நாடக அரசின் கெடுபிடியால் வடக்கு கேரளாவில் உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கேரள மாணவர்கள் கல்வி தொடர்பாக கர்நாடக செல்ல முடியாத நிலை உள்ளது. கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு பொருட்கள் கொண்டு வர முடியவில்லை.
மங்களூரு சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கின்றன. ஆபத்தான நிலையில் நோயாளிகள் மருத்துவ சிகிச்சைக்கு செல்ல முடியவில்லை. மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ள நிலையில் கர்நாடகா இதுபோன்ற கெடுபிடிகளை அமல்படுத்துவதை ஏற்க முடியாது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறியுள்ளார்.