மேற்கு வங்க பாஜக இளைஞர் பிரிவு தலைவர் பமீலா கோஸமீ கோக்கைன் போதைப் பொருள் வைத்திருந்ததாக போலீஸாரால் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், அவரின் தந்தையின் புகாரின் அடிப்படையில்தான் கைது செய்யப்பட்டார் என்று போலீஸார் விளக்கம் அளித்துள்ளனர்.
பாஜக இளைஞர் பிரிவு தலைவர் பமீலா கோஸாமியும், அவரின் நண்பர் பிரபீர் குமார் தே இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலே சேர்ந்து வாழ்ந்துள்ளனர். இருவரும் நேற்று காரில் வந்தபோதுதான் போலீஸாரால் சோதனை செய்யப்பட்டு கோகைன் போதை மருந்தோடு கைதுசெய்யப்பட்டனர்.
பாஜக இளைஞர் பிரிவு தலைவரான பமீலா கோஸாமி, சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆர்வத்துடன் இருப்பார். மாடிலிங் தொழிலில் ஈடுபட்டும், பல்வேறு திரைப்படங்கள், நாடகங்களிலும் பமீலா நடித்து வந்தார்.
சமீபத்தில் அமெரிக்க பாடகி ரிஹானா, விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தபோது கடுமையாகக் கண்டித்து கருத்துக்களைப் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் பமீலா கோஸாமி, அவரின் நண்பர் பிரபீர் மற்றும் பாதுகாவலர் சோம்நாத் சாட்டர்ஜி ஆகிய மூவரும் நேற்று காரில் வந்தபோது போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்களை போலீஸார் சோதனையிட்டபோது காரில் 90 கிராம் கோகைன் போதைப் பொருள் இருந்ததைக் கண்டுபிடித்து 3 பேரையும் கைது செய்தனர்.
இதில் பமீலா கோஸாமி உள்ளிட்ட மூவரையும் போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நேற்று அழைத்துச் சென்றபோது, பமீலா கோஸாமி கூறுகையில் " தன்னை சிக்கவைக்க ஏதோ சதி நடக்கிறது. பாஜக மாநிலப் பொறுப்பாளர் விஜய்வர்க்கியாவின் உறவினர் ராகேஷ் சிங் சதி செய்கிறார். அவருக்கும் இதில் தொடர்பு இருக்கிறது, அவரும் போதைப்பொருட்களை வைத்துள்ளார். இதில் சிஐடி விசாரணை தேவை. என்னிடம் ஆதாரங்கள் இருக்கின்றன " எனக் கோரினார்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பமீலா கோஸாமியை வரும் 25-ம்தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
பமீலா கோஸாமி குற்றச்சாட்டுக்கு ராகேஷ் சிங் பதில் அளிக்கையில் " கொல்கத்தா போலீஸாரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரும் சேர்ந்து பமீலா கோஸாமியை மூளைச்சலவை செய்துவிட்டனர். நான் அவருடன் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக எந்தத் தொடர்பும் இல்லை. எந்த விசாரணையையும் நான் சந்திக்கத் தயார். நான் இதில் ஈடுபட்டிருந்தால், நிச்சயம் அமித் ஷா, விஜய் வர்க்கியா என்னை அழைப்பார்கள். திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் உத்தரவின்படி கொல்கத்தா போலீஸார் செயல்படுகிறார்கள். இது ஆதாரங்களற்ற குற்றச்சாட்டு" எனத் தெரிவித்தார்.
பாஜக மேலிடப் பொறுப்பாளர் விஜய்வர்க்கியா கூறுகையில் " நான் நீதியின் மீது நம்பிக்கைவைத்துள்ளேன். சட்டம் அதன் கடமையைச்செய்யும். என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை இப்போது என்னால் ஏதும் கூற முடியாது" எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே கொல்கத்தா போலீஸார் கூறுகையில் " பாஜகஇளைஞர் பிரிவு தலைவர் பமீலா கோஸாமியும் அவரின் நண்பர் பிரபீரும் போதை மருந்துக்கு அடிமையாகி உள்ளார்கள் அவர்களைக் கண்காணிக்க வேண்டும் எனக் கோரி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பமீலாவின் தந்தை போலீஸிடம் புகார் அளித்திருந்தார். கொல்கத்தா மாநகர போலீஸ் ஆணையர் கவுசிக் கோஸாமிக்கும் பமீலாவின் தந்தை புகார் அனுப்பி இருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் நீண்டகாலமாக பமீலாவை போலீஸார் கண்காணித்து வந்துள்ளனர்.
பிரபீர் ஏற்கெனவே திருமணமானவர். பிரபீர் அவரின் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு பமீலாவை திருமணம் செய்து கொள்கிறேன் என்று வாக்குறுதி அளிக்கவில்லை. இருவரின் செயல்பாடு சந்தேகமாக இருக்கிறது எனக் கடிதத்தில் தெரிவித்திருந்தார். இதையடுத்து, பமீலா, பிரபீர் இருவரையும் கண்காணித்ததில் இருவரும் போதைமருந்து கடத்தலில் ஈடுபடுவது தெரியவந்தது.
இருவரையும் தொடர்ந்துவிசாரித்தால் போதை மருந்து எங்கு கிடைத்தது, இதில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது. மாநிலங்களுக்கு இடையே, நாடுகளுக்கு இடையே தொடர்பு இருக்கிறதா என்ற விவரம் தெரியவரும்" எனத் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
9 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago