பிரச்சார மேடையில் மயங்கிச் சரிந்து விழுந்த குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு கரோனா பாதிப்பு

By பிடிஐ

குஜராத் மாநிலம், வதோதரா நகரில் நேற்று நடந்த பிரச்சாரக் கூட்டத்தி்ல பேசியபோது மயங்கி சரிந்த முதல்வர் விஜய் ரூபானிக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

வதோதராவில் இருந்து அகமதாபாத் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதல்வர் ரூபானி அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு நடத்தப்பட்ட கரோனா ப பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

வதோதரா உள்ளிட்ட 6 மாநகராட்சிகளுக்கு வரும் 21-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக முதல்வர் விஜய் ரூபானி நேற்று வதோதரா நகரில் பிரச்சாரம் செய்தார். அப்போது, மேடையில் பேசிக்கொண்டிருந்த போது, திடீரென விஜய் ரூபானி மயங்கிச் சரிந்தார். முதல்வர் ரூபானி மயங்கி சரிந்தவுடன் அருகே இருந்த பாதுகாவலர்கள் அவரை தாங்கிப் பிடித்தனர்.

இதையடுத்து, உடனடியாக முதல்வர் விஜய் ரூபானிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ஹெலிகாப்டர் மூலம் அகமதாபாத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள யுஎன் மேத்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

முதல்வர் விஜய் ரூபானி மயங்கி விழுந்த செய்தி அறிந்ததும், பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல்நலம் குறித்து விசாரித்தார்.

விஜய் ரூபானிக்கு மருத்துவமனை சார்பில் கரோனா பரிசோதனை உள்ளிட்ட பல பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் ரூபாயின் உடல்நிலை இயல்பாக இருக்கிறது.அவருக்கு சற்று ஓய்வு தேவை என்று மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

விஜய் ரூபானிக்கு எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனை முடிவு இன்று வெளியானது. அதில் அவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தாலும் ரூபானிக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருக்கின்றன என மருத்துவமனை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 நாட்களாகவே முதல்வர் விஜய் ரூபானி மிகவும் சோர்வாகக் காணப்பட்டுள்ளார். பொதுக்கூட்டங்களில் பேசுவதை ரத்து செய்யலாம் என்று பாஜக மூத்த தலைவர்கள் அறிவுறுத்தியும், சனிக்கிழமை ஜாம்நகரிலும், நேற்று வதோதராவிலும் ரூபானி பேசியுள்ளார். அப்போதுதான் முதல்வர் ரூபானி மயங்கிச் சரிந்துள்ளார் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE