பிரதமர் மோடி நாளை தமிழகம், கேரளாவில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்: முழு பயண விவரம்

By செய்திப்பிரிவு

பிரதமர் நரேந்திர மோடி நாளை (பிப்ரவரி 14-ம் தேதி) தமிழகம், கேரள மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

சென்னையில் காலை 11.15 மணியளவில், பிரதமர், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மாலை 3.30 மணியளவில், கொச்சியில், பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளதாவது:


தமிழகத்தில் பிரதமர் மோடி

பிரதமர், ரூ.3770 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ள சென்னை மெட்ரோ ரயில் பகுதி-1 விரிவாக்கத்தைத் தொடங்கி வைத்து, வண்ணாரப்பேட்டையிலிருந்து, விம்கோ நகர் வரையிலான பயணிகள் ரயில் சேவையை துவக்கி வைக்கிறார். 9.05 கி.மீ. தூர மெட்ரோ பாதை, வட சென்னையை விமான நிலையம் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்துடன் இணைக்கும்.

சென்னை கடற்கரைக்கும், அத்திப்பட்டுக்கும் இடையிலான நான்காவது ரயில் பாதையையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இந்த 22.1 கி.மீ. நீள பிரிவு, ரூ.293.40 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் வழியாகச் செல்லும் இந்தப்பாதை சென்னை துறைமுகத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும். இந்த ரயில் பாதை சென்னை துறைமுகம், எண்ணூர் துறைமுகத்தை இணைப்பதுடன், முக்கிய தளங்கள் வழியே செல்லும். இது, எளிதான ரயில் போக்குவரத்து இயக்கத்துக்கு உதவும்.

விழுப்புரம்-கடலூர்-மயிலாடுதுறை-தஞ்சாவூர், மயிலாடுதுறை-திருவாரூர் பிரிவுகளில் ரூ.423 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ள ஒற்றை லைன் மின்மயமாக்கத்தையும் பிரதமர் துவக்கி வைக்கிறார். இந்த 228 கி.மீ. தூர ரயில் பாதை மின்மயமாக்கம் விரைவான போக்குவரத்துக்கு உதவும். மேலும், இதனால், சென்னை எழும்பூருக்கும், கன்னியாகுமரிக்கும் இடையே ரயில்வே லைனை மாற்றவேண்டிய அவசியமிருக்காது. இதன் பயனாக, எரிபொருளுக்காக செலவாகும் தொகையில், நாளொன்றுக்கு ரூ.14.61 லட்சம் மிச்சமாகும்.

இந்த நிகழ்ச்சியில், நவீன அர்ஜூன் முக்கிய போர் பீரங்கி வண்டியை ( எம்கே-1ஏ) இந்திய ராணுவத்திடம் பிரதமர் ஒப்படைப்பார். உள்நாட்டிலேயே இந்த பீரங்கி வண்டி வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு, டிஆர்டிஓ-வின் சிவிஆர்டிஇ மற்றும் 15 நிறுவனங்கள், 8 ஆய்வகங்கள் மற்றும் எம்எஸ்எம்இ-க்களால் தயாரிக்கப்பட்டது.

கல்லணை வாய்க்காலை புதுப்பித்து, நவீனப்படுத்தி, விரிவாக்கம் செய்வதற்கான பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். டெல்டா மாவட்ட பாசனத்துக்கு இந்தக் கால்வாய் மிகவும் முக்கியமானதாக திகழ்கிறது. இந்தக் கால்வாயை நவீனப்படுத்தும் பணிகள் ரூ.2640 கோடி செலவில் மேற்கொள்ளப்படுகிறது. கால்வாய்களுக்கு தண்ணீர் எடுத்துச் செல்லும் திறனை இது மேம்படுத்தும்.

சென்னை ஐஐடி டிஸ்கவரி வளாகத்துக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். சென்னைக்கு அருகே, தையூர் என்னுமிடத்தில், ரூ.1000 கோடி மதிப்பில் இந்த வளாகத்தின் முதல் பகுதி, 2 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்படுகிறது.

தமிழக ஆளுநர், முதலமைச்சர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.

கேரளா பயணம்

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் புரோப்லின் டெரிவேடிவ் பெட்ரோகெமிகல் திட்டத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த வளாகத்தில் அக்ரிலேட், அக்லிக் அமிலம், ஆக்சோ- ஆல்கஹால் ஆகியவை தயாரிக்கப்படும். இந்தப் பொருட்கள் தற்போது அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம், ஆண்டுக்கு ரூ.3700 கோடி முதல் ரூ.4000 கோடி வரை அந்நியச் செலாவணி மிச்சமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.6000 கோடி முதலீட்டு செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வளாகம், சுத்திகரிப்பு ஆலைக்கு அருகே அமைக்கப்பட்டுள்ளது. இதனால், உற்பத்தி பொருட்கள் விநியோக ஒருங்கிணைப்பு மற்றும் இதர வசதிகளுக்கு பயனுள்ளதாக அமையும். தீவனங்கள் தயார் நிலையில் இருப்பதற்கும், அதன் விநியோகத்தை தடங்கல் இல்லாமல் மேற்கொள்ளவும் உதவும் என்பதால், பெருமளவு செலவும் சேமிக்கப்படும். இந்த வளாகத்தை அமைத்ததன் மூலம், கொச்சி சுத்திகரிப்பு ஆலை முக்கிய பெட்ரோ கெமிகல் பொருட்களை உற்பத்தி செய்யும் முதல் இந்திய நிறுவனமாக இருக்கும்.

கொச்சி வில்லிங்டன் தீவில் ரோ-ரோ வாகனங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். தேசிய நீர்வழி- 3-ல், பொல்கோட்டிக்கும், வில்லிங்டன் தீவுக்கும் இடையே ரோல் ஆன்/ரோல் ஆப் வாகனங்கள் இரண்டை இந்திய சர்வதேச நீர்வழி ஆணையம் பணியில் ஈடுபடுத்தும். எம்வி ஆதி சங்கரா, எம்வி சி.வி.ராமன் என்ற பெயர் கொண்ட இரண்டு ரோ ரோ வாகனங்கள் ஒவ்வொன்றும், ஆறு 20 அடி லாரிகள், மூன்று 20 அடி டிரெய்லர் லாரிகள், மூன்று 40 அடி டிரெய்லர் லாரிகள் மற்றும் 30 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டவை. வர்த்தகத்துக்கு உதவும் இந்த சேவை, போக்குவரத்து செலவு, பயண நேரம் ஆகியவற்றை குறைக்கும். கொச்சி சாலைகளில் போக்குவரத்து நெரிசலையும் இது வெகுவாகக் குறைக்கும்.

கொச்சி துறைமுகத்தில் ‘‘சாகரிகா’’ சர்வதேச கப்பல் முனையத்தையும் பிரதமர் தொடங்கி வைப்பார். வில்லிங்டன் தீவு மீதான எர்ணாகுளம் தளத்தில் அமைந்துள்ள இது, இந்தியாவின் முதலாவது முழு அளவிலான சர்வதேச கப்பல் முனையமாகும். நவீன வசதிகளைக் கொண்ட இந்த முனையம், ரூ.25.72 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. இது, சுற்றுலாவை மேம்படுத்துவதுடன், வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் இருக்கும். வேலை உருவாக்கத்துக்கு வழி வகுத்து, வருவாயையும், அன்னியச் செலாவணியையும் ஈட்டித் தரும்.

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் விஞ்ஞான சாகர் என்னும் கடல்சார் பொறியியல் பயிற்சி நிறுவனத்தை பிரதமர் தொடங்கி வைப்பார். இது ஒரு முக்கிய கடல்சார் கற்றல் மையமாகும். இந்தியாவில், கப்பல் கட்டும் தளத்தில் இயங்கும் ஒரே நிறுவனமாகவும் இது திகழும். கப்பல் கட்டுமானம், பழுது நீக்குதல் பிரிவில், பல்வேறு கப்பல்களின் பயிற்சி பெறுவோருக்கு நவீன பயிற்சி அளிக்கும் வசதிகளை இது கொண்டிருக்கும். ரூ.27.5 கோடி மூலதன மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நிறுவனம் 114 புதிய பட்டதாரிகளை உருவாக்கும் திறன் கொண்டது. இந்தியா மற்றும் வெளிநாடுகளின் கடல்சார் தொழிலுக்கு தேவையான திறமையான கடல்சார் பொறியாளர்களையும், பணியாளர்களையும் இது உருவாக்கும்.

கொச்சி துறைமுகத்தில் தெற்கு நிலக்கரி தள கட்டுமானத்துக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவார். சாகர்மாலா திட்டத்தின் கீழ், ரூ.19.19 கோடி செலவில் இது மறு கட்டுமானம் செய்யப்படுகிறது. இந்த திட்டம் நிறைவடைந்த பின்னர், கொச்சி துறைமுகத்தில், பிரத்தியேக ரசாயன கையாளுதலுக்கு இது பயன்படும். இந்த மறு கட்டுமானம், சரக்குகளை வேகமாகவும், குறைந்த செலவிலும் கையாளும் திறனைப் பெறும்.

இந்த நிகழ்ச்சியில், கேரள மாநில ஆளுநர், முதல்வர், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயுத் துறை அமைச்சர் ஆகியோர் பங்கேற்பார்கள்.

இவ்வாறு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

57 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

மேலும்