கேரளாவில் காற்றில் பறந்த கோவிட் விதிமீறல்: காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர், தொண்டர்கள் மீது வழக்குப் பதிவு 

By பிடிஐ

கோவிட் விதிமுறைகளைக் காற்றில் பறக்கவிட்டு கேரளாவில் ஊர்வலம் சென்ற கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளதற்கு அரசியல் நோக்கமே காரணம் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

கண்ணூர் மாவட்டத்தில் கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா தலைமையில் ஐஸ்வர்ய கேரள யாத்திரை நடைபெற்று வருகிறது. தலிபரம்பாண்ட் ஸ்ரீகண்டபுரம் பகுதியில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஆனால், இவர்கள் கோவிட் விதிமுறைகளைப் பற்றிக் கவலைப்படாமல் நெருக்கமாகச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தலிபரம்பாண்ட் ஸ்ரீகண்டபுரம் காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது:

''ஊர்வலத்தின்போது கட்சித் தொண்டர்கள் மற்றும் பெரும் கூட்டத்தினரின் தோள்களில் அமர்ந்து சென்னிதாலா அமர்ந்து செல்லும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலானது. இது பலரிடமும் கரோனா வைரஸ் பாதிப்புகள் மீண்டும் தொடங்கிவிடுமோ என்று கவலை எழுப்பியுள்ளது.

உள்ளூர் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மற்றும் கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா உள்ளிட்ட 500க்கும் மேலான காங்கிரஸ் தொண்டர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவிட்-19 சுகாதார நெறிமுறையை மீறியதற்காகவும், சமூக இடைவெளியைப் பராமரிக்காமல் பெரும் எண்ணிக்கையில் கூட்டத்தினரைத் திரட்டியதற்காகவும் யாத்திரையின் ஐஸ்வர்ய கேரள யாத்திரை அமைப்பாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது''.

இவ்வாறு காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து கேரள எதிர்க்கட்சித் தலைவர் சென்னிதாலா கூறுகையில், ''ஊர்வலத்தில் பெருமளவில் தொண்டர்கள் பங்கேற்பதைப் பார்த்து, அரசியல் நோக்கத்தோடு காங்கிரஸ் தொண்டர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 31-ல் தொடங்கிய எங்கள் யாத்திரை திட்டமிட்டபடி தொடரும். வரும் 22ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நிறைவடையும்'' என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE