மேற்கு வங்கத் தேர்தல்: காங்கிரஸ் - மார்க்சிஸ்ட் இடையே சுமுகமாக முடிந்த தொகுதி உடன்பாடு 

மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே தொகுதி உடன்பாடு சுமுகமாக முடிந்துள்ளது.

காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே இருசுற்றுப் பேச்சுவார்த்தைக்குப் பின், காங்கிரஸ் கட்சி 193 இடங்களிலும், இடதுசாரிக் கட்சிகள் 101 இடங்களிலும் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது.

மேற்கு வங்க மாநிலத்தில் வரும் ஏப்ரல்-மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் திரிணமூல் காங்கிரஸ், 3-வது முறையாக ஆட்சியைத் தக்கவைக்கும் முயற்சியில், கட்சிப் பணியில் துரிதமாக ஈடுபட்டு வருகிறது.

அதேசமயம், திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குக் கடும் போட்டியளிக்கும் வகையில் பாஜக, காய்களை நகர்த்தி வருகிறது. இதுவரை 15க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் திரிணமூல் காங்கிரஸில் இருந்து பாஜகவுக்குச் சென்றுள்ளனர்.

இந்தத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே கூட்டணி முடிவாகியுள்ளதால், இரு கட்சிகளும் ஒன்றாகக் களம் காண்கின்றன. கடந்த மக்களவைத் தேர்தலில் இரு கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிட்டு ஒரு இடத்தைக் கூட வெல்ல முடியவில்லை. இது இரு கட்சிகளுக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இரு கட்சிகளின் ஆதரவாளர்களும், அதிருப்தியாளர்களும் பாஜகவுக்கு வாக்களித்ததால், 18 இடங்களில் பாஜக வென்றது.

இந்தச் சூழலில் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற 77 தொகுதிகளிலும் மீண்டும் போட்டியிடுவது என இரு கட்சிகளுக்கு இடையே கடந்த வாரம் உடன்பாடு ஏற்பட்டது.

கடந்த 2016-ல் இரு கட்சிகளும் சேர்ந்து 77 இடங்களில் வென்றன. காங்கிரஸ் கட்சி 44 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 33 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்த வெற்றி பெற்ற தொகுதிகளில் மீண்டும் இந்தத் தேர்தலில் இரு கட்சிகளும் போட்டியிடுகின்றன.

இந்நிலையில் அடுத்த இரு சுற்றுப் பேச்சைவார்த்தை முடிவில் மாநிலத்தில் உள்ள 294 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 193 தொகுதிகளிலும், இடதுசாரிகள் 101 தொகுதிகளிலும் போட்டியிடுவது என உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், “2-வது சுற்றுத் தொகுதிப் பங்கீடும் வெற்றிகரமாக முடிந்தது. காங்கிரஸ் கட்சி 48 இடங்களிலும், இடதுசாரிகள் 68 இடங்களிலும் போட்டியிடுகின்றனர். ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் கட்சிக்கு 193 இடங்களும், இடதுசாரிகளுக்கு 101 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.

கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 44 இடங்களிலும், இடதுசாரிகள் 33 இடங்களில் மட்டுமே வென்றனர். திரிணமூல் காங்கிரஸ் 211 இடங்களிலும், பாஜக 3 இடங்களிலும் வென்றது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE