தேசத்தின் எதிர்காலத்துக்கு அடுத்த 10 ஆண்டுகள் முக்கியம்; கனவை நிறைவேற்ற பொன்னான வாய்ப்பு: பிரதமர் மோடி நம்பிக்கை

தேசத்தின் வளமான எதிர்காலத்துக்கு அடுத்த 10 ஆண்டுகள் மிகவும் முக்கியமானது. தேசத்தின் சுதந்திரத்துக்காகத் தியாகம் செய்த தலைவர்கள் கனவை நிறைவேற்ற நம்முன் இப்போது பொன்னான வாய்ப்பு வந்திருக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று தொடங்கியது. பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. ஆனால், விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரியும் 18 எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவர் உரையை இன்று புறக்கணித்துள்ளன.

இந்நிலையில் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கும் முன் பிரதமர் மோடி, நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''அடுத்த 10 ஆண்டுகள் இந்தியாவின் எதிர்காலத்துக்கு மிகவும் முக்கியமானது. இதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தேசத்தின் சுதந்திரத்துக்காக இன்னுயிரைத் தியாகம் செய்த தலைவர்கள் கண்ட கனவை நிறைவேற்ற நம்முன் பொன்னான வாய்ப்பு வந்திருக்கிறது.

பட்ஜெட் கூட்டத்தொடரை அனைத்து எம்.பி.க்களும் ஆக்கபூர்வமாகக் கொண்டுசெல்ல வேண்டும். 2020-ம் ஆண்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 4 மினி பட்ஜெட்களை அறிவித்தார். அதைப் போலவே வரும் பட்ஜெட்டும் இருக்கும் என நம்புகிறேன்.

அடுத்த 10 ஆண்டுகளின் முதல் கூட்டத்தொடரில் இன்று அடியெடுத்து வைக்கிறோம். அடுத்த 10 ஆண்டுகள் தேசத்துக்கு முக்கியமானது என்பதால் அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்த 10 ஆண்டுகளை மனதில் வைத்து இந்தக் கூட்டத்தொடரில் அனைத்து விவாதங்களும் அமைய வேண்டும்.

மக்களின் எதிர்பார்ப்புகளுக்குக் குறைவாக நமது பங்களிப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் குறைந்துவிடாது என்று நம்புகிறேன்.

வரலாற்றிலேயே முதல் முறையாக நமது நிதியமைச்சர் கடந்த 2020-ம் ஆண்டில் 4 முதல் 5 மினி பட்ஜெட்களைத் தாக்கல் செய்துள்ளார். அதேபோன்ற பட்ஜெட்டை 2021-22ஆம் ஆண்டிலும் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கிறோம்''.

இவ்வாறு பிதரமர் மோடி தெரிவித்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரு பிரிவுகளாக நடத்தப்படுகிறது. நாளை தொடங்கும் கூட்டத்தொடர் பிப்ரவரி 15-ம் தேதி வரை நடக்கும். அதன்பின் மார்ச் 8-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 8-ம் தேதி வரை 2-வது அமர்வு நடக்க உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE