உலகுக்கு கரோனா தடுப்பூசியை வழங்குவோம்: உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி உறுதி

டாவோஸில் நடைபெறும் உலக பொருளாதார பேரவை மாநாட்டில் காணொலி மூலம் பிரதமர் மோடி பேசியதாவது:

கரோனா வைரஸ் தடுப்பூசி இன்னும் அதிக அளவில் தயாரிக்கப்படும். இதேபோல மேலும் பல நோய்களுக்கான தடுப்பு ஊசிகளை இந்தியா தயாரித்து உலகுக்கு வழங்கும்.

தற்போது மேட் இன் இந்தியா தயாரிப்பாக 2 தடுப்பு ஊசிகள் உலகம் முழுவதும் பயன்படுத்தும் நிலை உருவாகி உள்ளது. இந்தியாவில் இதுவரை 12 நாளில்23 லட்சம் சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பு ஊசி போடப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் 30 கோடி பேருக்கு தடுப்பு ஊசி போடும் இலக்கு எட்டப்படும்.

தற்போது உலகம் எதிர்கொண்டுள்ள இக்கட்டான தருணத்தில் இந்தியா தனக்குள்ள பொறுப்பை உணர்ந்து செயல்பட்டு வருகிறது. கரோனாவைரஸ் தீவிரமாக பரவிய சூழலில் பல நாடுகளும் விமான சேவையை ரத்து செய்த போது வெளிநாடுகளில் இருந்த ஒரு லட்சம் இந்தியர்களை பத்திரமாக அழைத்து வந்தது. அத்துடன் 150 நாடுகளுக்கு அத்தியாவசிய மருந்துகளும் அனுப்பி வைக்கப்பட்டன.

உலகம் முழுவதும் இந்நோய்க்கு 70 கோடிமுதல் 80 கோடி பேர் பாதிக்கப்பட்டு 20 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இதைக் கண்டு சோர்வடையாமல் இந்தியா மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

பெரும்பாலான நாடுகள் கரோனா வைரஸ் தொற்றால் இந்தியா மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடு என கருதியது. சுனாமி போன்ற வைரஸ் தொற்று மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என நினைத்தது. அதிலிருந்து இந்தியா மீண்டுள்ளது.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE