ஏழை மக்களின் கைகளில் பணத்தை வழங்கினால்தான் பொருளாதாரம் வளரும்: மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் அறிவுரை

By பிடிஐ

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏழைகளின் கைகளில் பணத்தை வழங்கினால்தான் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி பெறும். திருத்தப்பட்ட மதிப்புகளுடன் கூடிய அலங்கார பட்ஜெட் பயனளிக்காது என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நாளை தொடங்க இருக்கும் நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் காணொலி மூலம் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்துக்குப் பின் மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், மல்லிகார்ஜூன கார்கே, ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் பேட்டி அளித்தனர்.

அப்போது ப.சிதம்பரம் கூறியதாவது:

''அடுத்த 6 மாதங்களுக்கு 30 சதவீத ஏழை மக்களுக்கு நேரடியாகப் பணத்தை வழங்கினால்தான் சந்தையில் தேவையின் பக்கம் அதிகரித்து, பொருளாதாரம் வளர்ச்சியடைத் தொடங்கும். பொருளாதார வளர்ச்சிக்கு நேரடியாக மக்கள் கையில் பணத்தை வழங்குதல்தான் வழி.

நாட்டின் பொருளதாாரம் தற்போது மந்தநிலையில் இருக்கிறது என்று காங்கிரஸ் நம்புகிறது. பொருளாதாரத்தில் மீட்சி நிலை என்பது மெதுவாகவும், வலி மிகுந்ததாகவும் இருக்கும். 2021-22ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி (ஜிடிபி) 5 சதவீதத்துக்கு மேல் இருக்க வாய்ப்பில்லை.

2021-22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப் போகிறார். திருத்தப்பட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் அலங்கார பட்ஜெட்டைத் தாக்கல் செய்துவிடுவாரோ என அஞ்சுகிறோம். 2020-21ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள், ஒதுக்கீடுகள் அனைத்தும் போலியாகிவிட்டன. இலக்குகள் எதையும் நம்மால் அடையவில்லை.

கரோனாவால்தான் நாட்டின் பொருளாதாரம் சரிந்துவிட்டது என்பதற்கில்லை. கரோனா பாதிப்புக்கு முன்பிருந்துகூட, பொருளாதார வளர்ச்சி சரிவுப் பாதையில்தான் சென்றது. 2018-19ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 8 காலாண்டுகள் சரிவில் சென்றது. இந்த நேரத்தில் கரோனா தொற்று வந்து, பொருளாதாரத்தைப் பாதாளத்துக்குக் கொண்டுசென்று மைனஸ் 23.9 சதவீதத்துக்கு நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் தள்ளியது. 2-வது காலாண்டில் மைனஸ் 7.5 சதவீதம் சரிந்தது.

கடந்த 40 ஆண்டுகளில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்கும் முதல் மந்தநிலை இதுவாகும். 2020-21ஆம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி மைனஸில்தான் இருக்கும். நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் குறிப்பிட்டதுபோன்று எந்தத் துறையிலும் இலக்குகளை அடைய முடியாது.

வருவாய் இலக்கையும் அடைய முடியாது, முதலீடு கடுமையாக பாதிக்கும், வருவாய் பற்றாக்குறை 5 சதவீதம் வரை இருக்கும். நிதிப் பற்றாக்குறை 7 சதவீதம் வரை இருக்கும்.

ஆதலால், 2020-21ஆம் ஆண்டு பட்ஜெட் நேரத்தை வீணடிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. நிதியாண்டு தொடக்கமே பேரழிவுடன் இருந்ததால், முடிவும் அப்படித்தான் இருக்கும்.

இந்தியப் பொருளாதாரம் வேகமான மீட்சி (வி-ஷேப்) நிலையை அடையும் என்று நாங்கள் கணிக்கவில்லை. பொருளாதார மீட்சி, வளர்ச்சி மெதுவாகவே, வலி நிறைந்ததாகவே இருக்கும். இன்னும் லட்சக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதாரத்துக்காகப் போராடி வருகின்றன. சமூகத்தில் பொருளாதாரச் சமமின்மை, இடைவெளி அதிகரித்துவிட்டது. வறுமையில் இருந்த மக்கள் மேலும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்''.

இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE