மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், திரும்பப் பெறவும் வலியுறுத்தி டெல்லி எல்லைகளில் இன்று விவசாயிகள் நடத்தும் டிராக்டர் பேரணி தொடங்கியது. டெல்லி-ஹரியாணா சிங்கு எல்லையில் இருந்து புறப்பட்ட டிராக்டர்கள் டெல்லியை வந்தடைந்தன.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி கடந்த 50 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் சங்கத்தினருக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடந்த 11 சுற்றுப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் குடியரசு தினமான இன்று டெல்லியில் விவசாயிகள் சார்பில் டிராக்டர் பேரணி நடத்தப்படுகிறது.
மத்திய டெல்லிக்குள் விவசாயிகளின் டிராக்டர்கள் நுழையாத வகையில் பல்வேறு தடுப்புகளை போலீஸார் அமைத்துள்ளனர். குறிப்பாக சிங்கு எல்லையிலிருந்து டெல்லிக்குள் நுழையும் கர்னால் புறவழிச்சாலையில் கன்டெய்னர் பெட்டிகளைக் கொண்டு தற்காலிகச் சுவரை போலீஸார் உருவாக்கியுள்ளனர்.
டிராக்டர் பேரணிக்காகக் காலையிலிருந்து ஏராளமான விவசாயிகள் டெல்லி-ஹரியாணா சிங்கு எல்லையில் குவியத் தொடங்கினர். சிங்கு எல்லையிலிருந்து புறப்பட்ட ஆயிரக்கணக்கான டிராக்டர்கள், கஞ்சவாலா சவுக், அச்சாண்டி எல்லை, கேஎம்பி ஜிடி சாலை வழியாக டெல்லிக்குள் நுழைந்தன.
விவசாயிகள் தங்கள் டிராக்டர்களில் குடியரசு தினத்தைக் கொண்டாடும் வகையில் தேசியக் கொடியைக் கட்டிக்கொண்டு மிகப்பெரிய அளவில் ஊர்வலமாகச் செல்கிறார்கள். சிலா எல்லையிலிருந்து புறப்பட்ட ஏராளமான டிராக்டர்களும், டெல்லி-நொய்டா சாலையில் அணிவகுத்து டெல்லியை நோக்கிச் செல்கின்றன. திக்ரி எல்லையிலிருந்து புறப்பட்ட விவசாயிகளின் டிராக்டர்களும் டெல்லிக்குள் நுழைந்தன.
விவசாயிகளை மத்திய டெல்லிக்குள் நுழையவிடாத வகையில் ஐடிஓ, யமுனா பாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீஸார் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டுள்ளனர். திக்ரி எல்லையில் போலீஸார் வைத்திருந்த தடுப்புகளை மீறி விவசாயிகள் சென்றதால் பெரும் பதற்றம் நீடித்து வருகிறது. திகிரி எல்லையிலிருந்து நாங்கோலி, பாப்ரோலா கிராமம், நஜாப்கார்க், ஜரோடா எல்லை, ரோடக் புறவழிச்சாலை, அசோடா சோதனைச் சாவடி வழியாக டிராக்டர் பேரணி செல்லவே போலீஸார் அனுமதித்திருந்தனர்.
இதுகுறித்து டெல்லி போலீஸ் சிறப்பு ஆணையர் தீபேந்திர பதக் நிருபர்களிடம் கூறுகையில், “ திக்ரி, காஜிபூர், சிங்கு எல்லை வழியாக டெல்லிக்குள் விவசாயிகளின் டிராக்டர் பேரணி வந்து சேரும். அதன்பின் வந்த பாதை வழியாகவே மீண்டும் புறப்பட்ட இடத்துக்குச் செல்லும். சிங்கு எல்லையில் இருந்து காஜ்வாலா, பாவனா, அச்சண்டி எல்லை, கேஎம்பி எக்ஸ்பிரஸ் சாலை வழியாக மீண்டும் சிங்கு எல்லையைச் சென்றடையும்” எனத் தெரிவித்தார்.
டெல்லியில் விவசாயிகள் சார்பில் இன்று நடக்கும் டிராக்டர் பேரணி நண்பகல் 12 மணிக்குப் பின் தொடங்கும் எனத் தெரிகிறது. குடியரசு தின அணிவகுப்பு மரியாதை முடிந்த பின்புதான் இந்த டிராக்டர் பேரணி நடக்கும். இந்தப் பேரணியில் 2 லட்சம் டிராக்டர்கள் வரை பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக, விவசாயிகள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
21 mins ago
இந்தியா
47 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago