பிஹாரில் கூட்டணிக் கட்சிகளால் ஏமாற்றம் அடைந்த பாஜக

By ஆர்.ஷபிமுன்னா

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணிக் கட்சிகளை மலையாக நம்பி 83 தொகுதிகள் ஒதுக்கிய பாரதிய ஜனதா, பலத்த ஏமாற்றம் அடைந்துள்ளது. அதன் மூன்று கூட்டணிக் கட்சிகளும் சேர்ந்து வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.

மக்களவை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக, மாநில தேர்தல்களில் தனது கூட்டணிக் கட்சிகளை கழற்றிவிட முடிவு செய்திருந்தது. இதன் பிறகு நடந்த டெல்லி, ஹரியாணா, மகாராஷ்ட்ரா, ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் தேர்தல்களில் தனித்தே போட்டியிட்டது. இதில் டெல்லி தவிர மற்ற மாநிலங் களில் வெற்றி பெற்று, தனித்தும் கூட்டணி சேர்ந்தும் ஆட்சி அமைத்தது. ஆனால் கடைசியாக நடந்து முடிந்த பிஹார் தேர்தலில் பாஜகவால் தனது கூட்டணிக் கட்சிகளான ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி, உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரீய சமதா ஆகிய கட்சிகளை கழற்றிவிட முடியவில்லை. காரணம், அங்கு எதிர் துருவங்களாக இருந்து லாலுவும் நிதிஷ்குமாரும் காங்கிரஸுடன் இணைந்து களத்தில் இருந்தனர்.

எனவே பிஹாரின் மஹா தலித் சமூகத்தினரின் வாக்குகள் கிடைக்கும் என எதிர்பார்த்து அச்சமூகத்தின் முக்கிய தலைவராகக் கருதப்பட்ட ஜிதன்ராம் மாஞ்சியையும் பாஜக தனது அணியில் சேர்த்தது. பிஹார் முன்னாள் முதல்வரான மாஞ்சி, ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து வெளியேறி, இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா என்ற கட்சியை தொடங்கியிருந்தார். இக்கட்சிக்கு ஒதுக்கிய 20 தொகுதிகளில் மாஞ்சி மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த 2010 சட்டப்பேரவை தேர்தலில் 3 தொகுதிகளில் வென்ற பாஸ்வான் இந்தமுறை 40-ல் போட்டியிட்டு 2-ல் மட்டுமே வெற்றி பெற்றார். மக்களவை தேர்தலில் புதிதாக கட்சியை தொடங்கிய குஷ்வாஹா, இத்தேர்தலில் 23 தொகுதிகளில் போட்டியிட்டு, 2-ல் மட்டுமே வெற்றி பெற்றார். பிஹாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பாஜக 160-ஐ தனது வசம் வைத்துக்கொண்டு மற்றவற்றை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியது.

இதுகுறித்து லோக் ஜனசக்தி நிர்வாகி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறும்போது, “ஜாதி அடிப்படையில் வாக்கு அளிக்கப்படும் பிஹாரில் பாஜகவால் தனித்துப் போட்டியிட முடியாது என்பதால் கூட்டணி அமைத்தது. ஆனால் அதன் தாய் அமைப்பான ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பாகவத், ‘இடஒதுக்கீடு அளிப்பது பற்றி மறுபரிசீலனை செய்யவேண்டும்’ என்று கூறியது தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதை மக்கள் முன்பு லாலு பெரிதாக எடுத்துச்சென்று எங்கள் வாக்குகளையும் அள்ளி விட்டார்” என்றார்.

தேர்தலுக்கு முன் தலித் சமூகத்தின் உண்மையான தலைவர் யார் என்பதில் பாஸ்வான் மாஞ்சி இடையே அறிக்கை போர் நடந்தது. ஆனால், தேர்தல் முடிவுகளில் லோக் ஜனசக்தி சார்பில் போட்டியிட்ட பாஸ்வானின் சகோதரர், மருமகன், இரு உறவினர் ஆகிய நால்வரும் தோல்வி அடைந்தனர். இதேபோல் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட மாஞ்சி, ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றார். அவரது மகனும் தோல்வி அடைந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்