வேளாண் சட்டங்கள் தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசுக்கும், விவசாயிகள் சங்கத்தினருக்கும் இடையே நேற்று நடந்த 11-வது சுற்றுப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, வீடியோ வெளியிட்டு மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், “விவசாயிகள்தான் இனிமேல் முடிவெடுக்க வேண்டும்” என வேதனையோடு தெரிவித்தார்.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி கடந்த 50 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தில் இதுவரை 140க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். 10 சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியும் வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே உறுதியான எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இதற்கிடையே 10-வது சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது, மத்திய அரசின் சார்பில் விவசாயிகளிடம் ஒரு திட்டம் முன்வைக்கப்பட்டது.
இதன்படி, அடுத்துவரும் 18 மாதங்களுக்கு வேளாண் சட்டங்களை நிறுத்திவைப்பது என்றும், வேளாண் சட்டங்கள் குறித்து அமைக்கப்பட்ட குழுவில் அனைத்துத் தரப்பினரும் பேசி சுமுக முடிவு எடுத்தபின் முடிவெடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், மத்திய அரசின் இந்தத் திட்டம் குறித்து ஆலோசித்த விவசாயிகள் சங்கத்தினர் அதற்குச் சம்மதிக்கவில்லை.
இந்நிலையில் டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் 11-வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தையிலும் மத்திய அரசு முன்வைத்த 18 மாதங்கள் வேளாண் சட்டங்களை நிறுத்திவைக்கிறோம் எனும் திட்டத்தையும் விவசாயிகள் புறக்கணித்தனர். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
இதனால், இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாமல், எந்தவிதமான ஆலோசனையும் நடத்தப்படாமல் அதிருப்தியுடன் முடிந்தது. அதுமட்டுமல்லாமல் அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை எப்போது நடக்கும் என்பதைக் கூட முடிவு செய்யாமல் அதிருப்தியோடு அரசுத் தரப்பில் சென்றதாகக் கூறப்பட்டது.
அதன்பின் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
''விவசாயிகள் கையில்தான் இனிமேல், அனைத்தும் உள்ளன. இந்த விவகாரத்தின் தன்மை புரிந்துதான், விவசாயிகளின் நலனுக்காக வேளாண் சட்டங்களை 18 மாதங்கள் நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால், இந்தச் சட்டங்களை நாங்கள் நிறுத்திவைக்கிறோம் என்பதால், இந்தச் சட்டங்களில் குறையுள்ளது எனத் தவறாகக் கருதக்கூடாது.
விவசாயிகள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஜனநாயகத்தில் மனம் ஒத்துப்போதல் மற்றும் வேற்றுமைகள் இயல்பானவை. ஆனால், பேச்சுவார்த்தை மூலம் ஏதாவது ஒரு தீர்வு எட்டப்பட வேண்டும்.
ஆனால், துரதிர்ஷ்டம் என்னவென்றால், இதுவரை 11 சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்தும் எந்தவிதமான தீர்வும் எட்டப்படவில்லை. போராட்டத்தை இதுவரை அமைதியாக நடத்திய விவசாயிகள் சங்கங்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவிக்கிறோம்.
பொதுவாகப் பேச்சுவார்த்தை நடக்கும்போது புதிதாக எந்தப் போராட்டத்தையும் அறிவிக்கமாட்டார்கள். ஆனால், விவசாயிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் அதே நேரத்தில் புதிய போராட்டத்தையும் அறிவிக்கிறார்கள். அதை வெற்றிகரமாக நடத்துகிறார்கள். ஆனால், இதுபற்றி நாங்கள் ஒருபோதும் பேசியதில்லை.
கனத்த இயத்தோடு நான் சொல்வது என்னவென்றால், இந்தக் கூட்டத்துக்கு தேவையான மையப்புள்ளி, கண்ணோட்டம் இடம்பெறாமல் பேச்சுவார்த்தை நடந்தது. 20 நிமிடங்கள் மட்டுமே இன்றைய கூட்டம் நடந்தது. அதனால்தான் பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படவில்லை.
வேளாண் சட்டங்களை நிறுத்திவைக்கிறோம் எனச் சிறந்த திட்டத்தை மத்திய அரசு முன்மொழிந்தது. உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் என வலியுறுத்துகிறேன். நீங்கள் ஏதேனும் முடிவெடுத்தால், அல்லது முடிவுக்கு வந்தால், நீங்களே பேச்சுவார்த்தைக்கு வாருங்கள். உங்களை வரவேற்க மத்திய அரசு தயாராக இருக்கிறது''.
இவ்வாறு நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
27 mins ago
இந்தியா
53 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago