வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்த உத்தரவிடுங்கள்: உச்ச நீதிமன்றத்தில் உ.பி. தனியார் நிறுவனம் மனுத்தாக்கல்

By ஏஎன்ஐ

வேளாண் சட்டங்களுக்கு ஆதராவாக, உத்தரப்பிரதேசம் அலிகாரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று, வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 50 நாட்களுக்கும் மேலாக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை 10 சுற்றுப் பேச்சுவார்த்தை மத்திய அரசுக்கும், விவசாயிகள் அமைப்புக்கும் இடையே நடந்து எந்தத் தீர்வும் எட்டவில்லை.

இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், சட்டங்களை நடைமுறைப்படுத்த இடைக்காலத் தடை விதித்து கடந்த 11-ம் தேதி உத்தரவிட்டது.

அதுமட்டுமல்லாமல் வேளாண் சட்டங்கள் குறித்த கவலைகள், பிரச்சினைகள் குறித்து தெரிவிக்கவும், சிக்கல்களைக் களையவும் 4 பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது.

அந்தக் குழுவில், “ பாரதிய கிசான் யூனியன் தலைவர் பூபேந்தர் சிங் மான், ஷேத்கேரி சங்காதனா (மகாராஷ்டிரா) தலைவர் அனில் கான்வாட், சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வு மையத்தின் தெற்காசிய இயக்குநர் பிரமோத் குமார் ஜோஷி, வேளாண் பொருளாதார வல்லுநர் அசோக் குலாட்டி” ஆகியோரை நியமித்தது. இந்தக் குழுவில் இருந்து பாரதிய கிசான் யூனியன் தலைவர் பூபேந்தர் சிங் மட்டும் விலகியுள்ளார்.

இந்நிலையில் உத்தரப்பிரதேசம் அலிகாரைச் சே்ரந்த ராம்வே ஃபுட்ஸ் லிமிடட் நிறுவனத்தின் இயக்குநர் சார்பில் அவரின் வழக்கறிஞர் தனஞ்சய் கே கார்க் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். ராம்பே ஃபுட்ஸ் நிறுவனம் அலிகாரில் மிகப்பெரிய அரைவை மில் நடத்தி வருகிறது.

இந்த நிறுவனம் சார்பில் தாக்கல் செய்ய மனுவில் கூறியிருப்பதாவது:

வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்தாவிட்டால் பல்வேறு சிக்கல்களை எங்களைப் போன்ற நிறுவனங்கள் சந்திக்க நேரிடும். உச்ச நீதிமன்றம் அமைத்த குழுவில் தங்களையும் ஒரு உறுப்பினராகச் சேர்க்க வேண்டும்.

அரசியலமைப்புச் சட்டம் 32-வது பிரிவின்படி இந்த மனுவை நாங்கள் தாக்கல் செய்துள்ளோம். அரசியலமைப்புச் சட்டத்தின்படி, பிரிவு 19(1)(ஜி) மற்றும் 21-வது பிரிவின்படி இந்த சட்டங்களை நிறுத்திவைப்பது அடிப்படை உரிமைகளை பாதிப்பதாகும். ஆதலால், வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும்” இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE